ஜீன்-கய் பிளெய்ஸ் மயோலாஸிற்கு எதிராக இன்டர்போல் பிடியாணை கோரிக்கை!

ஜீன்-கய் பிளெய்ஸ் மயோலாஸிற்கு எதிராக இன்டர்போல் பிடியாணை கோரிக்கை!

கொங்கோ-பிரசாவில் (Congo-Brazzaville) கால்பந்து சம்மேளனத்தின் (Fecofoot) தலைவர் ஜீன்-கய் பிளெய்ஸ் மயோலாஸ், ஃபிபா (FIFA) நிதியில் 1.1 மில்லியன் டொலர்களை மோசடி செய்த குற்றத்திற்காக அவருக்கு எதிராக சர்வதேச பிடியாணையைப் பிறப்பிக்குமாறு அந்நாட்டு அதிகாரிகள் இன்டர்போலிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2021 பெப்ரவரி மாதம் கொரோனா நிவாரணத் திட்டத்தின் கீழ் ஃபிபா வழங்கிய நிதியில் 1.1 மில்லியன் டொலர்களை மோசடி செய்ததாக மயோலாஸ், அவரது மனைவி மற்றும் மகன் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதில் கொங்கோ மகளிர் அணிக்காக ஒதுக்கப்பட்ட சுமார் 500,000 டொலர்களும் அடங்கும்.

இந்த மாத தொடக்கத்தில் அவர்கள் மூவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், தீர்ப்பு வழங்கப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னரே அவர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுவிட்டதாக நம்பப்படுகிறது.

விசாரணையாளர்கள் அவர் தற்போது கேமரூன் அல்லது ஜனநாயகக் கொங்கோ குடியரசில் (DRC) ஒளிந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

பிரெஞ்சு நிதி புலனாய்வுப் பிரிவான 'Tracfin' உடன் இணைந்து இக்குற்றத்துடன் தொடர்புடைய சொத்துக்களை முடக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மயோலாஸுடன் இணைந்து நிதி மோசடி, ஆவண மோசடி மற்றும் பணச் சலவை குற்றங்களுக்காக கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் பஜ்ஜி மோம்போ வான்டெட்டே மற்றும் பொருளாளர் ரவுல் காண்டா ஆகியோருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நிதி முறைகேடுகள் தொடர்பாக மயோலாஸ் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு எதிராக ஃபிபா ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கடந்த ஆண்டு மயோலாஸ் விளையாட்டு அமைச்சினால் இடைநீக்கம் செய்யப்பட்டபோது, "மூன்றாம் தரப்பு தலையீடு" எனக் கூறி கொங்கோவை சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஃபிபா தடை செய்தது.

இதன் காரணமாக மார்ச் மாதம் நடைபெறவிருந்த உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகளில் டான்சானியா மற்றும் ஜாம்பியா அணிகளுக்கு தலா 3-0 என வெற்றி வாய்ப்பு வழங்கப்பட்டது.