A/L Results: அகில இலங்கை ரீதியில் கிளிநொச்சி, காத்தான்குடி மாணவர்கள் சாதனை!

A/L Results: அகில இலங்கை ரீதியில் கிளிநொச்சி, காத்தான்குடி மாணவர்கள் சாதனை!

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், இம்முறை 66 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

நேற்று (31) இரவு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு 281,810 விண்ணப்பதாரர்கள் தோற்றியதுடன், அவர்களில் 176,527 பேர் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்காக விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, 111 விண்ணப்பதாரர்களின் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், பாடப்பிரிவு ரீதியாகப் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்ற மாணவர்களின் வீதங்கள் வருமாறு:

உயிரியல் விஞ்ஞானம்: பாடசாலை விண்ணப்பதாரர்கள் 59.56% - தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் 58.43%

பௌதீகவியல் (கணிதம்): பாடசாலை விண்ணப்பதாரர்கள் 63.96% - தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் 61.59%

வணிகம்: பாடசாலை விண்ணப்பதாரர்கள் 72.02% - தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் 66.29%

கலை: பாடசாலை விண்ணப்பதாரர்கள் 67.57% - தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் 63.57%

பொறியியல் தொழினுட்பவியல்: பாடசாலை விண்ணப்பதாரர்கள் 64.85% - தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் 62.65%

உயிர்முறைமைகள் தொழினுட்பவியல்: பாடசாலை விண்ணப்பதாரர்கள் 71.76% - மொத்தமாக 70.24%

ஏனைய பாடங்கள்: பாடசாலை விண்ணப்பதாரர்கள் 55.39% - மொத்தமாக 51.45%

மாகாண ரீதியான பல்கலைக்கழகப் பிரவேசத் தகுதி வீதம்:

மேல் மாகாணம்: 69.42%

வடமேல் மாகாணம்: 68.48%

வட மாகாணம்: 66.91%

கிழக்கு மாகாணம்: 66.32%

தென் மாகாணம்: 65.69%

சப்ரகமுவ மாகாணம்: 64.97%

ஊவா மாகாணம்: 63.53%

மத்திய மாகாணம்: 63.04%

வடமத்திய மாகாணம்: 60.91%

பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றவர்களில் பெரும்பாலானோர் மாணவிகளாவர். இருப்பினும், உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் மாத்திரம் மாணவர்களே அதிகளவில் தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை கலைப்பிரிவில் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை 32.03% ஆகக் குறைவடைந்துள்ளதுடன், உயிரியல், பௌதீகவியல், தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் மாணவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளதாக ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, இம்முறை தேசிய மட்டத்தில் முதலிடங்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் வருமாறு:

உயிரியல் விஞ்ஞானப் பிரிவு:

முதலிடம் - டிலான் சஞ்சன (கொழும்பு றோயல் கல்லூரி)

இரண்டாமிடம் - கிரிஷான் சசிந்து நம்தர (ஹொரணை தக்ஷிலா மத்திய மகா வித்தியாலயம்)

மூன்றாமிடம் - தர்ஷனா கோனேஷ் (திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி)

பௌதீகவியல் (கணித) பிரிவு:

முதலிடம்: தேவேந்தன் திருகுமரன் (கிளிநொச்சி மகா வித்தியாலயம்)

இரண்டாமிடம்: தருஷ கிம்ஹான கம்லத் (குருணாகலை மலியதேவ வித்தியாலயம்)

மூன்றாமிடம்: வினுர பிரசாத் டி மெல் (பாணந்துறை ஸ்ரீ சுமங்கல ஆண்கள் பாடசாலை)

வணிகப் பிரிவு :

முதலிடம்: மொஹமட் சுபைதீன் மொஹமட் ஃபர்தான் (காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை))

இரண்டாமிடம்: செனாதி திஹஸ்னா சுமனசேகர (கொழும்பு மியூசியஸ் கல்லூரி)

மூன்றாமிடம்: திலீப சந்தெரஸ் கருணாரத்ன (கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயம்)

கலைப் பிரிவு:

முதலிடம்: அசிந்த மிஹிரங்க ரத்நாயக்க (குருணாகலை வயம்ப நோயல் கல்லூரி)

இரண்டாமிடம்: ஆலியா ஷெய்னா (கொழும்பு தேவி பாலிகா வித்தியாலயம்)

மூன்றாமிடம்: மெதுசாரி தினேத்யா ரணதுங்க (கொழும்பு மியூசியஸ் கல்லூரி)

பொறியியல் தொழினுட்பவியல் பிரிவு:

முதலிடம்: ஹேஷான் அனுஜய வனிகசூரிய (கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயம்)

இரண்டாமிடம்: சிதிஜ துலான் பண்டார (மஹவ விஜயபா தேசிய பாடசாலை)

மூன்றாமிடம்: ரிவீன் வின்சர (மத்துகம சீ.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர மகா வித்தியாலயம்)

உயிர்முறைமைகள் தொழினுட்பவியல் பிரிவு:

முதலிடம்: இஷானி மனோதா (கம்பஹா வெயாங்கொட பண்டாரநாயக்க மத்திய மகா வித்தியாலயம்)

இரண்டாமிடம்: விஹங்கா இமாஷா கந்தேஆரச்சி (கம்பஹா ரத்னாவலி பாலிகா வித்தியாலயம்)

மூன்றாமிடம்: ஜயத்மா அமந்தி விஜேசிங்க (இப்பாகமுவ மத்திய மகா வித்தியாலயம்)