இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பிராந்தியத்தின் சில பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கண்காணிப்பு முகமைகள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) படி, இந்த நிலநடுக்கம் மொலுக்கா கடலில் (Molucca Sea), தெர்னேட் (Ternate) அருகே சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இதன் அளவு அதிகமாகக் கணிக்கப்பட்ட போதிலும், பின்னர் அது 7.4 ரிக்டர் என உறுதிப்படுத்தப்பட்டது.
பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடலோரப் பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் சில பகுதிகளில் அபாயகரமான அலைகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதிகளில் சுனாமி அலைகள் 0.3 முதல் 1 மீட்டர் வரை உயரக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உயிரிழப்புகள் அல்லது பாரிய சேதங்கள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், சேத விபரங்கள் குறித்த மதிப்பீடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நில அதிர்வுகள் (Aftershocks) ஏற்படக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கோ அல்லது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கோ தற்போது எவ்வித சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.