ஈரான் போர் தொடர்பான கருத்து வேறுபாடுகள் காரணமாக ஐரோப்பிய நட்பு நாடுகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து, நேட்டோ (NATO) பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே (Mark Rutte) அடுத்த வாரம் வொஷிங்டனுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
"பொதுச் செயலாளர் அடுத்த வாரம் வொஷிங்டனுக்கு நீண்ட நாட்களாகத் திட்டமிடப்பட்ட விஜயத்தை மேற்கொள்வார் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்" என நேட்டோ ஊடகப் பேச்சாளர் அலிசன் ஹார்ட் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகை அதிகாரியும் இந்த விஜயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையின் (Strait of Hormuz) தடையை நீக்குவதற்கு கப்பல்களை அனுப்ப ஐரோப்பிய நாடுகள் மறுப்பு தெரிவித்துள்ளன. இதன் காரணமாக மேற்குலக இராணுவக் கூட்டமைப்பான நேட்டோவிலிருந்து அமெரிக்காவை வெளியேற்றுவது குறித்து தாம் பரிசீலித்து வருவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் ஈஸ்டர் மதிய விருந்திற்காக கூடியிருந்த நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய ட்ரம்ப், பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியம் (UK) உள்ளிட்ட நாடுகளை "காகிதப்புலிகள்" எனச் சாடினார்.
1949 இல் சோவியத் தாக்குதல் அபாயத்தை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் கனடா ஆகியவற்றை உள்ளடக்கி நேட்டோ உருவாக்கப்பட்டது. இது அன்று முதல் மேற்குலகின் பாதுகாப்பின் அடித்தளமாக இருந்து வருகிறது.
"நேட்டோவில் சில மோசமான நட்பு நாடுகள் எமக்கு உள்ளன. எமக்கு அவர்களின் தேவை ஒருபோதும் ஏற்படாது என நம்புகிறேன். எமக்கு அவர்கள் தேவைப்படுவார்கள் என்று நான் நினைக்கவில்லை" என ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.