Live
Puthiya Kural Radio Tamil 24/7 Live Stream from Canada
Full Player

மட்டக்களப்பில் கடத்தல் கொலை; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!

மட்டக்களப்பில் கடத்தல் கொலை; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!

மட்டக்களப்பில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தி, நகைகளை கொள்ளையிட்ட பின்னர் அவர்களை கிணற்றில் வீசிய கொடூரச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண், அவரது 34 வயதுடைய கணவர் மற்றும் 22 வயதுடைய சகோதரர், முச்சக்கரவண்டி சாரதி ஆகியோரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் கொள்ளையிடப்பட்ட நகைகளை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் ஏற்கனவே விளக்கமறியலில் இருந்த இரு நகைக்கடை உரிமையாளர்களும் 10ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

மயக்க மருந்து வழங்கிய குற்றச்சாட்டில் கொழும்பு - வத்தளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நபரை, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பொலிஸ் தடுப்புக் காவலில் 3 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் வைத்து மயக்க மருந்து கொடுத்து நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட தரப்பினரைக் கொண்டு சந்தேக நபர்களை அடையாளம் காணும் அடையாள அணிவகுப்பு இன்று நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டது.

மாவட்டத்தையே உலுக்கிய இச்சம்பவம் குறித்து கிழக்கு மாகாண குற்றத் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சந்தேக நபர்களிடமிருந்து ஏற்கனவே மயக்க மருந்துகள், கார், முச்சக்கரவண்டி மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

​மட்டக்களப்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் அரங்கேற்றப்பட்ட இந்த மனிதாபிமானமற்ற செயல்கள் குறித்து மேலதிக சாட்சியங்களைத் திரட்டும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.