மூன்றாம் நாட்டு உடன்படிக்கையின் கீழ் அமெரிக்காவிலிருந்து முதல் நாடுகடத்தப்பட்டோர் குழு உகாண்டா வருகை!

மூன்றாம் நாட்டு உடன்படிக்கையின் கீழ் அமெரிக்காவிலிருந்து முதல் நாடுகடத்தப்பட்டோர் குழு உகாண்டா வருகை!

டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் புலம்பெயர்ந்தோரைத் தமக்குத் தொடர்பில்லாத நாடுகளுக்கு அனுப்பும் வியூகத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்களை ஏற்றிய விமானம் உகாண்டாவைச் சென்றடைந்தது.

உகாண்டாவிற்கு அழைத்து வரப்பட்டவர்கள் அங்கு தற்காலிகமாகத் தங்கியிருப்பார்கள் என்றும், பின்னர் அவர்கள் வேறு நாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் உகாண்டா அரசின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த முதல் குழுவில் 12 பேர் இருந்ததாக உகாண்டா சட்டச் சங்கம் (Uganda Law Society) உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்கா ஏற்கனவே எஸ்வதினி (Eswatini), கானா, ருவாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளுடன் இத்தகைய ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. கியூபா, ஜமைக்கா, ஏமன், வியட்நாம், லாவோஸ் மற்றும் மியான்மர் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த ஆப்பிரிக்க நாடுகளுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

உகாண்டா சட்டச் சங்கம் இந்த நடவடிக்கையை "மனிதத்தன்மையற்ற செயல்" என விமரிசித்துள்ளதுடன், இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாகவும் அறிவித்துள்ளது. மனிதர்களை வெறும் "பொருட்களைப் போல" (Chattel) கருதுவதாக அவர்கள் சாடியுள்ளனர்.

அமெரிக்கா இந்த நாடுகடத்தலுக்காக எஸ்வதினி நாட்டிற்கு 5.1 மில்லியன் டொலர் வழங்க உடன்பட்டுள்ளது. உகாண்டா ஏற்கனவே சுமார் 2 மில்லியன் அகதிகளுக்குப் புகலிடம் அளித்து வரும் ஒரு நாடாகும். அமெரிக்காவில் தஞ்சம் கோருபவர்களில், சொந்த நாடுகளுக்குத் திரும்ப விரும்பாத ஆனால் அமெரிக்காவில் தஞ்சம் கிடைக்காதவர்களே இவ்வாறு உகாண்டாவிற்கு அனுப்பப்படுகின்றனர்.

அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ICE) தற்போது 63,000 க்கும் மேற்பட்டவர்களைத் தடுப்புக் காவலில் வைத்துள்ளது. இதில் கைக்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடங்குவர் என மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.