Live
Puthiya Kural Radio Tamil 24/7 Live Stream from Canada
Full Player

கியூபெக்கில் மேப்பிள் சிரப் மோசடி: கனேடிய ஊடகவியலாளரின் விசாரணையில் அம்பலம்!

கியூபெக்கில் மேப்பிள் சிரப் மோசடி: கனேடிய ஊடகவியலாளரின் விசாரணையில் அம்பலம்!

கியூபெக்கின் முக்கிய மேப்பிள் சிரப் (Maple Syrup) உற்பத்தியாளர் ஒருவர், மேப்பிள் சிரப்புடன் கரும்புச் சர்க்கரையைக் கலந்து கலப்படம் செய்து, அதனைப் பெரிய சுப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்தமை கனேடிய தேசிய ஊடகமான ரேடியோ-கனடாவின் (Radio-Canada) விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரேடியோ-கனடாவின் 'Enquête' நிகழ்ச்சித் திட்ட ஊடகவியலாளர் ஒருவர் தான் வாங்கிய மேப்பிள் சிரப்பின் சுவையில் மாற்றம் இருப்பதை அவதானித்தார். இது தொடர்பான இரகசிய விசாரணையின் போது, குறைந்த விலையில் விற்கப்படும் குறித்த சிரப் பெருமளவில் கலப்படம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.

கியூபெக்கின் ஆராய்ச்சி மற்றும் சோதனை நிலையமான 'Le Centre ACER' இல் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், இது தற்செயலாக நடந்ததல்ல, திட்டமிட்டு கரும்புச் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டது. "இவ்வாறான ஒரு மோசடியை நான் காண்பது இதுவே முதல்முறை" என ACER இன் ஆராய்ச்சிப் பணிப்பாளர் லுக் லாகே தெரிவித்துள்ளார்.

கியூபெக் மாகாணமானது உலகின் மேப்பிள் சிரப் உற்பத்தியில் சுமார் 75% பங்கினைக் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு 239 மில்லியன் இறாத்தல் மேப்பிள் சிரப் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன், இதன் சந்தை மதிப்பு சுமார் 1 பில்லியன் கனேடிய டொலர் ஆகும்.

ஒரு பீப்பாய் (Barrel) மேப்பிள் சிரப்பின் விலை சுமார் 1,000 டொலர் வரை உயர்ந்துள்ளதால், இத்துறையில் இவ்வாறான குற்றச் செயல்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

மொன்றியலுக்கு தென்மேற்கே உள்ள ஸ்டீவ் போர்டியூ (Steve Bourdeau) என்பவரே இந்த மோசடியில் தொடர்புபட்டுள்ளார். ஊடகவியலாளர்கள் மறைமுகக் கெமரா மூலம் மேற்கொண்ட விசாரணையின் போது, தான் சந்தையில் மிகக் குறைந்த விலைக்கு (ஒரு கேன் 5 டொலருக்கும் குறைவு) விற்பனை செய்வதாகவும், அதில் சில சட்டவிரோத விடயங்கள் இருப்பதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இவரது தயாரிப்புகள் IGA மற்றும் Metro போன்ற முன்னணி சுப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆய்வக முடிவுகள் காட்டப்பட்ட போது ஆரம்பத்தில் மறுத்த போதியூ, பின்னர் மாகாணத்திற்கு வெளியிலுள்ள விநியோகஸ்தர்கள் மீது பழியைப் போட்டார். இது குறித்துத் தான் விசாரணை நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கியூபெக் சட்டப்படி, மாகாணத்திற்கு வெளியிலிருந்து சிரப்பைக் கொண்டு வருவது குற்றமல்ல, ஆனால் கியூபெக் தயாரிப்பு எனத் தவறான முத்திரை குத்துவது சட்டவிரோதமானது.