தமிழ் அகதி விவகாரம்: இலங்கையில் உள்ள அபாயங்களை ஒப்புக்கொண்டார் கனடிய பொது பாதுகாப்பு அமைச்சர்!

தமிழ் அகதி விவகாரம்: இலங்கையில் உள்ள அபாயங்களை ஒப்புக்கொண்டார் கனடிய பொது பாதுகாப்பு அமைச்சர்!

16 ஆண்டுகளுக்கு முன்பு கடல் வழியாக கனடாவுக்கு வந்த தமிழ் அகதி ஒருவரை நாடுகடத்தும் (Removal) நடவடிக்கைகளில் தான் தலையிடப்போவதில்லை என்று கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இருப்பினும், அத்தகையவர்கள் இலங்கைக்குத் திரும்பும்போது எதிர்கொள்ளும் அபாயங்களை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ரொறன்ரோவில் வசிக்கும் குமார் துரைசிங்கம் என்பவரின் விதி குறித்து நீதிமன்றங்களே தீர்மானிக்க வேண்டும் என அமைச்சர் காாி ஆனந்தசங்கரி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். 2010 ஆம் ஆண்டு 'M.V. Sun Sea' கப்பல் மூலம் கனடாவின் மேற்கு கடற்கரைக்கு வந்த 492 பேரில் குமார் துரைசிங்கமும் ஒருவர்.

"இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றமே இதனைத் தீர்மானிக்க வேண்டும்," என அமைச்சர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "கடந்த காலங்களில், குறிப்பாக M.V. Sun Sea கப்பலில் வந்தவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பக் கூடாது என நான் வாதிட்டுள்ளேன். ஏனெனில், பல ஆண்டுகளுக்கு முன்பு அவ்வாறு திரும்பிய ஒருவர் அரசாங்கத்தால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது. இருப்பினும், கனடாவில் உள்ள நீதிமன்றங்களே இந்த விடயத்தில் முடிவெடுக்கச் சிறந்த இடமாகும்," எனத் தெரிவித்தார்.

அமைச்சர் ஆனந்தசங்கரி முன்பு 'கனேடியத் தமிழர் பேரவையில்' (CTC) சட்டத்தரணியாக இருந்தபோது, அந்தக் கப்பலில் வந்தவர்களுக்காக மேற்கொண்ட வாதங்களை இங்கே நினைவுபடுத்தினார்.

துரைசிங்கத்தின் சட்டத்தரணி கெஸ் போஸ்கேட் (Kes Posgate) கூறுகையில், "அவர் இலங்கைக்குத் திரும்பினால், அவர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படக்கூடிய பாரிய அபாயம் உள்ளது," எனத் தெரிவித்தார்.

முன்னதாக, அந்தக் கப்பலை ஒழுங்குபடுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சத்தியபவன் ஆசிர்வாதம் என்பவர், இலங்கைக்குத் திரும்பியபோது தான் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறியிருந்தார். அவர் 2013 ஆம் ஆண்டு ஒரு விபத்தில் உயிரிழந்தார்.

16 ஆண்டுகளாகக் கனடாவில் வசிக்கும் துரைசிங்கம், தான் இலங்கையில் நிலவிய வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூடுகளுக்கு அஞ்சியே வெளியேறியதாகத் தெரிவித்துள்ளார். கனடாவில் தச்சுத் தொழிலாளியாகப் (Carpenter) பணியாற்றிய இவரது அகதித் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

அண்மையில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக (Impaired driving) குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகமை (CBSA) அவரை நாடுகடத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. போதிய ஆவணங்கள் இல்லை எனக் கூறி அவரைத் தடுத்து வைக்க எல்லைப் பாதுகாப்பு முகமை மறுத்துவிட்டது.

"என்னைத் திருப்பி அனுப்பினால் நான் மிகவும் பயப்படுவேன். இலங்கையில் எனக்கு என்ன நடக்கும் என்று தெரியாது," எனத் துரைசிங்கம் ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலம் கவலையுடன் தெரிவித்தார். தான் 16 ஆண்டுகளாக இங்கு இருப்பதால் தன்னை ஒரு கனடியராகவே உணர்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.