"ஒரு மனிதன் உலகை ஆள வேண்டும் என்ற ஆசையினால் மனிதகுலத்திற்கே பெரும் வேதனை"

"ஒரு மனிதன் உலகை ஆள வேண்டும் என்ற ஆசையினால் மனிதகுலத்திற்கே பெரும் வேதனை"

தற்போது உலக அமைதி சீர்குலைந்துள்ளதாகவும், ஒரு மனிதன் உலகை ஆள வேண்டும் என்ற ஆசையினால் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் வேதனை ஏற்பட்டுள்ளதாகவும் கொழும்பு மறைமாவட்ட பேராயர் அதிமேதகு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பிரதான திருவிழா திருப்பலியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கர்தினால் ஆண்டகை, கிறிஸ்தவம் என்பது வெறும் பிரார்த்தனை செய்வது அல்லது புனித விவிலியத்தின் (பைபிள்) பகுதிகளை வாசிப்பது மட்டுமல்ல என்று தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை:

"நாம் பிரார்த்தனை செய்வோம், குறிப்பாக இந்தக் காலக்கட்டத்தில் உலக அமைதிக்காக. ஒரு மனிதனின் சுயநலத்தினால் இந்த அமைதி சீர்குலைந்துள்ளது. ஒரு மனிதன் உலகை ஆள வேண்டும் என்ற ஆசையினால் மனிதகுலத்திற்கே ஒரு பெரிய வேதனை ஏற்பட்டுள்ளது. இந்த மனிதனின் மனதை மாற்ற வேண்டும் என்றும், இந்த கடினமான, பலவீனமான பயணப் பாதையிலிருந்து அவரை விலக்க வேண்டும் என்றும் நாம் பிரார்த்தனை செய்வோம்."

"கிறிஸ்தவத்தை நம்புபவராக இருந்தால் அவ்வாறு (அதிகார ஆசையுடன்) செய்ய முடியாது. கிறிஸ்தவம் என்பது பிரார்த்தனை செய்வது மட்டுமல்ல, புனித விவிலியத்தின் பகுதிகளை வாசிப்பது மட்டுமல்ல, பல போதகர்களை (Pastors) அருகில் வைத்துக்கொண்டு உலகிற்கு பிரகடனம் செய்ய முயற்சிப்பதுமல்ல. கிறிஸ்தவம் என்பது அன்பு, வாழ்வது."

"அன்பு என்பது ஒரு சேவகனாக இருப்பது, கடவுளுக்கு முன்னால் தூய்மையாக இருப்பது, அண்டை வீட்டாருக்கு முன்னால் நேர்மையாக இருப்பது. தலைவன் என்பவன் சேவகனாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்று உலகை ஆளும் இவர்கள் தலைவர்கள், இவர்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அவர்கள் ஆட்சியாளர்கள், அவர்கள் அதிகாரத்தின் பின்னால் ஓடுபவர்கள்."