ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் மறைந்த தளபதி ஜெனரல் காசிம் சுலைமானியின் மருமகள் (சகோதரனின் மகள்) மற்றும் பேத்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஹமிதே சுலைமானி அஃப்சார் (Hamideh Soleimani Afshar) மற்றும் அவரது மகளின் சட்டபூர்வமான அமெரிக்க நிரந்தர வதிவிட உரிமை (Green Card), இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இராஜாங்கத் திணைக்களத்தின் இந்தக் கூற்றுக்கள் பொய்யானவை என்று சுலைமானியின் மகள் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களுக்கும் தனது தந்தைக்கும் "எந்தவிதமான தொடர்பும் இல்லை" என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவத் தளபதியாக இருந்த சுலைமானி, 2020 ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில் ஈராக்கில் நடத்தப்பட்ட அமெரிக்க வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
சமூக ஊடகப் பதிவொன்றில் மார்கோ ரூபியோ குறிப்பிடுகையில், அந்த இரு பெண்களும் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கல் பிரிவின் (ICE) காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
சுலைமானி அஃப்சார் மற்றும் அவரது மகள் ஆகியோர் "அமெரிக்காவில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்த கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள்" என்று அவர் தனது எக்ஸ் (X) தள பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் (DHS) பிபிசியின் அமெரிக்க பங்காளியான சிபிஎஸ் நியூஸிற்கு (CBS News) வழங்கிய அறிக்கையில், சுலைமானி அஃப்சார் 2015 இல் சுற்றுலா விசா மூலம் அமெரிக்காவிற்குள் நுழைந்ததாகவும், பின்னர் 2019 இல் அவருக்கு புகலிடம் (Asylum) வழங்கப்பட்டு, 2021 இல் அவர் கிரீன் கார்டு பெற்றார் என்றும் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் குடியுரிமைக்காக (Naturalization) அவர் விண்ணப்பித்தபோது, கிரீன் கார்டு பெற்ற பிறகு நான்கு முறை ஈரானுக்குச் சென்று வந்ததை அவர் வெளிப்படுத்தியதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
"அவர் ஈரானுக்கு மேற்கொண்ட பயணங்கள், அவரது புகலிடக் கோரிக்கைகள் மோசடியானவை என்பதைக் காட்டுகின்றன" என்று அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சுலைமானி அஃப்சாரின் மகள் சாரினாசாடாத் ஹொசைனி (Sarinasadat Hosseiny), 2015 இல் மாணவர் விசாவில் அமெரிக்காவிற்கு வந்து, பின்னர் 2019 இல் புகலிடமும், 2023 இல் கிரீன் கார்டும் பெற்றதாக அந்தத் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.
சுலைமானி அஃப்சார் "ஈரானின் சர்வாதிகார, பயங்கரவாத ஆட்சியின் வெளிப்படையான ஆதரவாளர்" என்றும், தனது சமூக ஊடகக் கணக்கில் "ஈரானிய ஆட்சியின் பிரச்சாரங்களை" முன்னெடுத்தவர் என்றும் இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுலைமானி அஃப்சாரின் கணவர் அமெரிக்காவிற்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும், அவரது கணவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
இது குறித்து சுலைமானியின் மகளான நர்ஜஸ் சுலைமானி வெளியிட்டுள்ள அறிக்கையில்: "அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கும் தியாகி சுலைமானிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கூற்றுக்கள் முற்றிலும் பொய்யானவை" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கா "மிகவும் பலவீனமானதாகவும் முக்கியத்துவமற்றதாகவும் மாறிவிட்டது" என்றும், "ஒரு சிறந்த மனிதருக்கு எதிராகப் பொய்களை ஜோடிக்கிறது" என்றும் அவர் சாடியுள்ளார்.
பிபிசி இது குறித்து மேலதிக கருத்துக்களைக் கேட்டபோது, இராஜாங்கத் திணைக்களம் "கூடுதலாகச் சொல்வதற்கு எதுவுமில்லை" என்று பதிலளித்துள்ளது.
ஈரானின் எலைட் குத்ஸ் படையின் (Quds Force) தலைவராக இருந்த சுலைமானி, மத்திய கிழக்கில் ஈரானிய இராணுவ நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கினார். 62 வயதான அவர் பாக்தாத் விமான நிலையத்தில் ஈரானின் ஆதரவு பெற்ற ஏனைய போராளிக் குழுக்களின் தலைவர்களுடன் கொல்லப்பட்டார்.
கடந்த புதன்கிழமை ஆற்றிய உரையில் ட்ரம்ப், தாம் உத்தரவிட்ட அந்தத் தாக்குதல் குறித்துக் குறிப்பிட்டார்.
"எனது முதல் பதவிக்காலத்தில் நான் ஜெனரல் காசிம் சுலைமானியைக் கொன்றேன். அவர் ஒரு தீய மேதை, புத்திசாலி, ஆனால் ஒரு கொடூரமான மனிதர். சாலை ஓர வெடிகுண்டுகளின் தந்தை (Father of roadside bomb) அவர். அவர் செய்த காரியங்கள் கொடூரமானவை," என்று ட்ரம்ப் கூறினார்.
சுலைமானி இன்னும் உயிரோடு இருந்திருந்தால், இந்தப் போரில் ஈரான் "ஒருவேளை இன்னும் சிறந்த, வலிமையான நிலையில் இருந்திருக்கும்" என்றும் ட்ரம்ப் மேலும் தெரிவித்தார்.