ஹோர்முஸ் ஜலசந்தியின் மீதான கட்டுப்பாடு மற்றும் அனைத்து தடைகளையும் நீக்குவது உள்ளிட்ட ஈரானின் 10 அம்ச முன்மொழிவின் அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தைகள் அமையும் என தெஹ்ரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்திற்கு ஈரான் உடன்பட்டுள்ளது. ஈரானின் 10 அம்ச முன்மொழிவின் அடிப்படையில் வாஷிங்டனுடனான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்கும் என ஈரானின் தேசிய பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
ஈரானிய நாகரிகத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்ற மிரட்டலைத் தான் நிறுத்தி வைப்பதாகவும், இரண்டு வாரங்களுக்கு ஈரான் மீதான தாக்குதல்களை "நிறுத்திவைக்க (suspend)" போவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து புதன்கிழமை இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் வளைகுடா மற்றும் அரேபிய கடலை இணைக்கும் குறுகிய நீர்வழியான ஹோர்முஸ் ஜலசந்தியை "முழுமையாகவும், உடனடியாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் திறக்க" ஈரான் உடன்படுவதைப் பொறுத்தே இந்த போர்நிறுத்தம் அமையும் என்று டிரம்ப் கூறினார்.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரான் விதித்த இந்த பகுதியளவு முற்றுகை, உலகளாவிய வர்த்தகத்தை சீர்குலைத்து, எண்ணெய் விலையை உயர்த்தியதுடன் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது.
ஈரானின் பதிலடித் தாக்குதல்கள் வளைகுடா முழுவதும் எதிரொலித்ததுடன், லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் ஏமனின் ஹூதிக்களையும் இதில் இழுத்துவிட்டது. இவை இரண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி, மோதலை கணிசமாக விரிவுபடுத்தின.
தனது 'Truth Social' பதிவில் டிரம்ப் கூறுகையில், அமெரிக்கா ஏற்கனவே தனது அனைத்து இராணுவ இலக்குகளையும் "அடைந்துவிட்டது மற்றும் அதைவிட அதிகமாகவே சாதித்துவிட்டது" என்றும், "ஈரானுடன் நீண்டகால அமைதிக்கான ஒரு உறுதியான உடன்படிக்கையை எட்டுவதில் மிக நெருக்கமாக உள்ளோம்" என்றும் தெரிவித்தார்.
ஈரானிடமிருந்து 10 அம்ச முன்மொழிவை அமெரிக்கா பெற்றுள்ளதாகவும், "அது பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒரு சாத்தியமான அடிப்படை என்று நம்புவதாகவும்" அவர் கூறினார். அமெரிக்காவும் ஈரானும் "கிட்டத்தட்ட அனைத்து முரண்பாடுகளிலும்" உடன்பட்டுள்ளதாகவும், இந்த இரண்டு வார கால அவகாசம் உடன்படிக்கையை "இறுதி செய்யவும் மற்றும் முழுமைப்படுத்தவும்" அனுமதிக்கும் என்றும் அவர் கூறினார்.
ஈரானிய தேசிய பாதுகாப்பு சபையின் சார்பில் பேசிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, தெஹ்ரானின் உடன்பாட்டை உறுதிப்படுத்தினார். "ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், எமது சக்திவாய்ந்த ஆயுதப் படைகள் தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகளை நிறுத்தும்," என்று அவர் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஈரானிய ஆயுதப் படைகளுடன் ஒருங்கிணைந்து ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பான போக்குவரத்து சாத்தியமாகும் என்றும், ஈரானின் 10 அம்ச முன்மொழிவின் பொதுவான கட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கான அடிப்படையாக டிரம்ப் ஏற்றுக்கொண்டதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அரக்சி கூறினார்.
தங்கள் தரப்பில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறுகையில், போரிடும் இரு தரப்பினரும் "லெபனான் மற்றும் பிற இடங்கள் உட்பட எல்லா இடங்களிலும் உடனடி போர்நிறுத்தத்திற்கு" உடன்பட்டுள்ளனர் என்று கூறினார். இந்த நடவடிக்கை "உடனடியாக நடைமுறைக்கு வருகிறது" என்று அவர் எக்ஸ் தளத்தில் எழுதினார்.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு நன்றி தெரிவித்த ஷெரீப், "அனைத்து மோதல்களையும் தீர்ப்பதற்கான ஒரு முடிவான உடன்படிக்கையை மேலும் பேச்சுவார்த்தை மூலம் எட்டுவதற்காக ஏப்ரல் 10, 2026 வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்திற்கு வருமாறு அவர்களின் தூதுக்குழுக்களுக்கு" அழைப்பு விடுத்தார்.
ஈரானின் தேசிய பாதுகாப்பு சபையின் கூற்றுப்படி, அதன் 10 அம்ச முன்மொழிவு ஹோர்முஸ் ஜலசந்தியின் மீது ஈரானின் ஆதிக்கம் மற்றும் மேற்பார்வையை கோருகிறது, இது தனக்கு ஒரு "தனித்துவமான பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிலையை" வழங்கும் என்று ஈரான் கூறியது.
மத்திய கிழக்கில் உள்ள தளங்களில் இருந்து அனைத்து "அமெரிக்க போர்ப் படைகளையும்" திரும்பப் பெறவும், பிராந்தியத்தில் உள்ள நட்பு ஆயுதக் குழுக்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் இந்த முன்மொழிவு கோருகிறது. மேலும் போர்ச் சேதங்களுக்கு "முழு இழப்பீடு" வழங்குமாறும், அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை மற்றும் சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) ஆகியவற்றின் அனைத்து தடைகளையும் நீக்குமாறும் அது கோருகிறது.
வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துக்களை விடுவிக்கவும், இறுதி உடன்படிக்கையை ஐநா பாதுகாப்பு சபையின் தீர்மானத்தின் மூலம் கட்டாயமாக்கவும் இந்த முன்மொழிவு வலியுறுத்துகிறது.
பேச்சுவார்த்தைக்கு தெஹ்ரான் ஒப்புக்கொண்டாலும், அது "அமெரிக்க தரப்பு மீதான முழுமையான அவநம்பிக்கையுடனே" இதைச் செய்கிறது என்று சபை கூறியது. இந்த பேச்சுவார்த்தைகளுக்கு ஈரான் இரண்டு வாரங்களை ஒதுக்கும் என்றும், இரு தரப்பினரின் உடன்பாட்டுடன் இந்த காலப்பகுதியை நீட்டிக்க முடியும் என்றும் அது கூறியது.
"எதிரியால் சிறிய தவறு செய்யப்பட்டாலும் முழு பலத்துடன் பதிலடி கொடுக்க ஈரான் தயாராக உள்ளது" என்று சபை மேலும் கூறியது. இது குறித்து இஸ்ரேல் தரப்பிலிருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
02 வாரகால போர் நிறுத்தத்தை அறிவித்தார் டிரம்ப்!
ஈரானும் அமெரிக்காவும் இரண்டு வார கால நிபந்தனையுடனான போர்நிறுத்தத்திற்கு உடன்பாடு.
அமெரிக்கா மற்றும் ஈரானின் 'நிதானம் மற்றும் புரிந்துணர்வை' பாராட்டிய பாகிஸ்தான் பிரதமர்.
போர்நிறுத்த அறிவிப்பால் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 13.6% சரிந்து 94.50 டாலராகப் பதிவு.
இருதரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானில் நடைபெறும் என ஈரான் அறிவிப்பு.
ஈரானுடன் இரண்டு வார காலத்திற்கு போர்நிறுத்தத்தை அறிவிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தனது 'Truth Social' சமூக வலைதள கணக்கில் இட்ட பதிவொன்றில் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் தலைவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) ஊடாக போக்குவரத்தை அனுமதிக்க ஈரான் உடன்பட்டால், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் போர்நிறுத்தம் ஏற்படும் என டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த போர்நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்கு டிரம்ப் சில முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். அதில் பிரதான நிபந்தனையாக, ஹோர்முஸ் ஜலசந்தியை முழுமையாகவும், உடனடியாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் திறக்க ஈரான் உடன்பட வேண்டும். இது இரு தரப்பையும் பாதிக்கும் ஒரு "இருதரப்பு போர்நிறுத்தம்" (Double sided ceasefire) என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது அமெரிக்கா ஈரான் மீது நடத்தும் தாக்குதல்கள் மற்றும் குண்டுவீச்சுகளை இரண்டு வார காலத்திற்கு நிறுத்திவைக்க முன்மொழியப்பட்டுள்ளது. "ஈரான் மீதான குண்டுவீச்சு மற்றும் தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்திவைக்க நான் ஒப்புக்கொள்கிறேன்," என அவர் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் ஊடான பயணம் இரண்டு வாரங்களுக்கு பாதுகாப்பானது
ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் தாங்களும் போர்நிறுத்தத்திற்கு உடன்படுவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) தெரிவித்துள்ளார். அதன்படி, இரண்டு வார காலத்திற்கு ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பாக பயணிக்க முடியும் என அவர் மேலும் கூறினார். தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் ஈரானிய ஆயுதப் படைகளும் தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகளை நிறுத்தும் என அப்பாஸ் அரக்சி குறிப்பிட்டுள்ளார்.
போர்நிறுத்த அறிவிப்புக்கு மத்தியிலும் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரண்டு வார போர்நிறுத்தத்தை அறிவித்த போதிலும், இன்று (8) அதிகாலை இஸ்ரேலிய இராணுவம் ஈரான் மீது தொடர் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இஸ்ரேலின் 'Channel 12' செய்திச் சேவையை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. இதில் ஈரானின் ஏவுகணை ஏவுதளங்களே முக்கிய இலக்குகளாக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், இன்று அதிகாலை மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் பாரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் (Drone) தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குவைத், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் அபாயச் சங்கு (Siren) ஒலிகள் கேட்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் தமது வான் எல்லைக்குள் நுழைந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை முறியடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த நாட்டு இராணுவ ஊடகங்கள் வாயிலாக அறிவித்துள்ளன.
பஹ்ரைன் தனது குடிமக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளதுடன், சவுதி அரேபியா தனது அல்-கர்ஜ் (Al-Kharj) பகுதிக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க - ஈரான் தீர்மானமிக்க பேச்சுவார்த்தைகள் ஏப்ரல் 10 முதல்; ஈரானிடமிருந்து 10 அம்ச முன்மொழிவு
ஈரானின் உச்ச பாதுகாப்பு சபையினால் (Supreme National Security Council) பாகிஸ்தான் ஊடாக அமெரிக்காவிற்கு 10 அம்சங்களைக் கொண்ட முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடைபெறவுள்ளன.
போர் நிறுத்தத்திற்காக ஈரான் முன்வைத்துள்ள 10 அம்சத் திட்டம்:
ஈராக், லெபனான் மற்றும் ஏமனுக்கு எதிரான போரை முழுமையாக நிறுத்துதல்.
காலவரையறையின்றி ஈரானுக்கு எதிரான போரை முழுமையாகவும் நிரந்தரமாகவும் நிறுத்துதல்.
பிராந்தியத்தில் உள்ள அனைத்து மோதல்களையும் முழுமையாக முடிவுக்குக் கொண்டு வருதல்.
ஹோர்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மீண்டும் திறத்தல்.
ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உத்தியோகபூர்வ நடைமுறை மற்றும் நிபந்தனைகளை நிறுவுதல்.
ஈரானின் புனரமைப்புச் செலவுகளை ஈடுகட்ட இழப்பீடு வழங்குதல்.
ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை முழுமையாக நீக்குவதற்கு முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படுதல்.
அமெரிக்காவால் முடக்கப்பட்டுள்ள ஈரானிய நிதிகள் மற்றும் சொத்துக்களை விடுவித்தல்.
எந்தவொரு அணு ஆயுதத்தையும் வைத்திருக்க மாட்டோம் என ஈரான் முழுமையான உறுதிமொழி அளித்தல்.
இந்த நிபந்தனைகள் அங்கீகரிக்கப்பட்டவுடன் போர்நிறுத்தம் உடனடியாக நடைமுறைக்கு வரும்.
"ஈரானுக்கு கிடைத்த வெற்றி"
பாகிஸ்தானின் தலையீட்டுடன் எட்டப்பட்ட இரண்டு வார கால தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரானின் உச்ச பாதுகாப்பு சபை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக 'மெஹ்ர்' (Mehr) செய்தி நிறுவனத்தை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஈரானின் புதிய உயரிய தலைவர் ஆயதுல்லா மொஜ்தபா கமேனி (Ayatollah Mojtaba Khamenei) ஒப்புதல் அளித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை "ஈரான் பெற்ற வெற்றி" என பாதுகாப்புச் சபை வர்ணித்துள்ளது.
போர்நிறுத்த முடிவுக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை சரிவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுடன் இரண்டு வார காலத்திற்கு போர்நிறுத்தத்தை அறிவித்ததையடுத்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
WTI கச்சா எண்ணெய்: ஒரு பீப்பாய் விலை 95.47 டாலராகக் குறைந்துள்ளது. இது 17.48 டாலர் வீழ்ச்சியாகும் (15.48%).
பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய்: ஒரு பீப்பாய் விலை 92.84 டாலராகக் குறைந்துள்ளது.
மர்பன் (Murban) கச்சா எண்ணெய்: ஒரு பீப்பாய் விலை 106.51 டாலராகக் குறைந்துள்ளது. இது முந்தைய விலையுடன் ஒப்பிடுகையில் 18.85% குறைவு என சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.