Live
Puthiya Kural Radio Tamil 24/7 Live Stream from Canada
Full Player

டிரம்பின் போர்நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து எண்ணெய் விலையில் வீழ்ச்சி!

டிரம்பின் போர்நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து எண்ணெய் விலையில் வீழ்ச்சி!

ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்திற்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடன்பட்டதையடுத்து, செவ்வாய்க்கிழமை எண்ணெய் விலைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. முக்கிய நீர்வழியான ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) ஊடாக விரைவில் அதிக எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் பயணிக்க முடியும் என்ற நம்பிக்கையை இது ஏற்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், உலகின் 20% எண்ணெய் விநியோகம் கடந்து செல்லும் இந்த ஜலசந்தியின் மீதான தற்போதைய முற்றுகையில் என்ன மாற்றம் ஏற்படும் என்பது குறித்தும், இந்தப் போர்நிறுத்தம் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருமா என்பது குறித்தும் கேள்விகள் எஞ்சியுள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்க கச்சா எண்ணெய் விலைகள் வர்த்தக நேரத்திற்குப் பிறகு 15% க்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்து ஒரு பீப்பாய் 95 டாலருக்கும் குறைவாகப் பதிவானது. இது ஒரு பெரிய வீழ்ச்சியாக இருந்தாலும், போர் தொடங்குவதற்கு முந்தைய பிப்ரவரி 27 அன்று நிலவிய 67.02 டாலரை விட இன்னும் அதிகமாகவே உள்ளது. உலகளாவிய ரீதியில் நிர்ணயிக்கப்படும் பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை 13.75% சரிந்து 94.68 டாலராகப் பதிவாகியுள்ளது.

அதேவேளை, அமெரிக்க மற்றும் ஆசிய பங்குச் சந்தைகள் பெரும் வளர்ச்சியைப் பதிவு செய்தன. 'டவ்' (Dow) பங்குச் சந்தை 1,000 புள்ளிகளுக்கும் அதிகமாக (சுமார் 2.2%) உயர்ந்ததுடன், 'S&P 500' 2.4% மற்றும் 'நாஸ்டாக்' (Nasdaq) 3% வரை வளர்ச்சியடைந்தன.

புதன்கிழமை காலை நிலவரப்படி, ஜப்பானின் நிக்கேய் (Nikkei 225) சுட்டெண் 4.9% ஆகவும், தென்கொரியாவின் கோஸ்பி (Kospi) 5.7% ஆகவும் உயர்ந்தன. ஹொங்கொங்கின் ஹேங் செங் (Hang Seng) சுட்டெண் 2.8% அதிகரித்தது.

"சந்தை நல்ல செய்திகளுக்காக ஆவலுடன் காத்திருந்தது, ஆனால் ஹோர்முஸ் ஜலசந்தி முழுமையாகத் திறக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்," என்று ராபிடன் எனர்ஜி குரூப் (Rapidan Energy Group) நிறுவனத்தின் தலைவர் பாப் மெக்னாலி சிஎன்என் (CNN) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

டிரம்ப் சமூக வலைதளங்களில் இதைக் கொண்டாடிய வேளையில், இந்தப் போர்நிறுத்தம் தற்காலிகமானது என்பதை ஈரான் வலியுறுத்தியது. "இது போரின் முடிவு அல்ல, ஆனால் அனைத்து இராணுவப் பிரிவுகளும் உயரிய தலைவரின் உத்தரவைப் பின்பற்றித் தாக்குதல்களை நிறுத்த வேண்டும்," என்று ஈரானின் அரசு ஊடகமான IRIB தெரிவித்தது.

பங்குச் சந்தையின் எழுச்சியும் எண்ணெய் விலையின் வீழ்ச்சியும் மிகத் தெளிவான செய்தியை வழங்குவதாக பி. ரிலே ஃபைனான்சியல் (B. Riley Financial) நிறுவனத்தின் மூலோபாய நிபுணர் ஆர்ட் ஹோகன் தெரிவித்தார்: "முதலீட்டாளர்கள் ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்பட வேண்டும் என்பதையும் இந்த மோதல் முடிவுக்கு வர வேண்டும் என்பதையும் விரும்புகிறார்கள்."

"முழு நாகரிகத்தையும்" அழிப்பதாக டிரம்ப் விதித்திருந்த இரவு 8 மணி கெடுவிற்கு (ET) இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே அவர் இந்தப் போர்நிறுத்தத்திற்கு உடன்பட்டார். ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படுவதிலேயே இந்த ஒப்பந்தம் தங்கியுள்ளதாக அவர் கூறினார்.

மத்திய கிழக்கில் நிலவும் போர் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியின் மூடல் காரணமாக, நாள் ஒன்றுக்கு சுமார் 12 முதல் 15 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது வரலாற்றில் பதிவான மிகப்பெரிய எண்ணெய் விநியோக அதிர்ச்சியாகக் கருதப்படுகிறது.

எவ்வாறாயினும், ஜலசந்தி மீண்டும் வழமைக்குத் திரும்புமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஈரானும் தனது வெற்றியைப் பறைசாற்றியுள்ளதுடன், ஹோர்முஸ் ஜலசந்தி ஊடான போக்குவரத்தை தனது இராணுவம் ஒழுங்குபடுத்தும் என்றும், இது ஈரானுக்கு "தனித்துவமான பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிலையை" வழங்கும் என்றும் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு சபையின் செயலகம் தெரிவித்துள்ளது.

"ஹோர்முஸ் ஜலசந்தியைப் பொறுத்தவரை இந்தப் போர்நிறுத்தம் எதனையும் தெளிவாக விளக்கவில்லை," என்று கேஸ்படி (GasBuddy) நிறுவனத்தின் எண்ணெய் பகுப்பாய்வுத் தலைவர் பேட்ரிக் டி ஹான் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதன் நீண்டகால விளைவுகள் வெளிவர இன்னும் காலம் எடுக்கும். ஈரானின் ஆளும் நிர்வாகம் தனது அரசியல் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளதுடன், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைகளைத் தன் வசப்படுத்தும் திறனை நிரூபித்துள்ளதாக கோர்பே கரன்சி ரிசர்ச் (Corpay Currency Research) நிறுவனத்தின் கார்ல் ஷாமோட்டா தனது குறிப்பில் தெரிவித்துள்ளார்.