அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரில் இருதரப்பும் வெற்றி உரிமை கோரும் பின்னணியில், அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக போர் நிறுத்தம் ஈரானிய மக்களிடையே ஒருவித நிம்மதியையும் அதேவேளை சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது.
பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் எட்டப்பட்ட இரண்டு வார கால போர் நிறுத்தத்தின் முதல் நாளான புதன்கிழமை, தலைநகர் தெஹ்ரானின் வீதிகளில் மீண்டும் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.
இது தொடர்பான மேலதிக பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தில் ஆரம்பமாகவுள்ளன.
கடந்த பிப்ரவரி 28ஆம் திகதி முதல் ஈரான் மீது ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான ஏவுகணைகளால் சுமார் 90 மில்லியன் மக்கள் வாழும் ஈரானின் பொருளாதாரம் பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.
போர் ஆரம்பமான ஆறு வார காலத்திற்குள் ஈரான் முழுவதும் 13,000 இலக்குகளைத் தாக்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரானின் மிகப்பெரிய அலுமினிய உற்பத்தி நிலையம் (Arak), எஃகு தொழிற்சாலைகள் மற்றும் பெட்ரோலிய இரசாயன நிறுவனங்கள் இஸ்ரேலிய வான் தாக்குதல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
போர் ஆரம்பமானது முதல் ஈரானில் இணையச் சேவை 99% துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
ஈரானின் அதியுயர் தலைவராக இருந்த ஆயதுல்லா அலி கமேனி போரின் முதல் நாளன்று கொல்லப்பட்டதையடுத்து, அவரது புதல்வர் முஜ்தபா கமேனி நாட்டின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
எவ்வாறாயினும், போர் ஆரம்பமானது முதல் அவரோ அல்லது ஈரானிய புரட்சிகர இராணுவத்தின் (IRGC) தளபதியோ பகிரங்கமாகத் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், தெற்கு ஈரானில் உள்ள இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது புதன்கிழமை காலை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இதற்குப் பதிலடியாக சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்ததாக அந்நாட்டு அரச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அதேவேளை, லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளதுடன், புதன்கிழமை ஒரே நாளில் மாத்திரம் அங்கு 250இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதனை ஈரானுக்கு எதிரான பாரிய வெற்றி என வர்ணித்துள்ள நிலையில், ஈரான் இதனைத் தனது 'புதிய வல்லரசு' அந்தஸ்தின் வெளிப்பாடாகக் கருதுகிறது.
எவ்வாறாயினும், நாட்டின் பழமைவாய்ந்த நாகரிகத்தை அழிப்பதாக ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து ஏற்பட்ட அச்சம், இந்த தற்காலிக போர் நிறுத்தத்தால் ஓரளவு தணிந்துள்ளதாகத் தெரிகிறது.