Live
Puthiya Kural Radio Tamil 24/7 Live Stream from Canada
Full Player

அமெரிக்காவிற்கான விமான எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் - தென்கொரியா முக்கிய தீர்மானம்!

அமெரிக்காவிற்கான விமான எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் - தென்கொரியா முக்கிய தீர்மானம்!

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மசகு எண்ணெய் தட்டுப்பாடு, விமான எரிபொருள் விநியோகத்திலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, தென்கொரியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் விமான எரிபொருள் (Jet Fuel) அளவு பெருமளவில் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலகின் முன்னணி எரிபொருள் சுத்திகரிப்பு நாடான தென்கொரியா, தற்போது நிலவும் நெருக்கடி நிலைமையைக் கருத்திற் கொண்டு, தனது உள்நாட்டுத் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கத் தீர்மானித்துள்ளது.

அமெரிக்க வலுசக்தி தகவல் நிர்வாகத்தின் (EIA) தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டில் அமெரிக்கா இறக்குமதி செய்த விமான எரிபொருளில் சுமார் 69% தென்கொரியாவிலிருந்தே பெற்றுக்கொள்ளப்பட்டது.

தற்போது ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடான போக்குவரத்துப் பாதைகள் செயலிழந்துள்ளமையால், தென்கொரியாவின் சுத்திகரிப்பு நிலையங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

தென்கொரியாவின் முன்னணி எரிபொருள் சுத்திகரிப்பு நிறுவனங்களான SK Energy, GS Caltex, S-OIL மற்றும் HD Hyundai Oilbank ஆகியன தமது ஏற்றுமதி அளவுகளைக் குறைத்து, உள்நாட்டு சந்தையின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன.

எனினும், எரிபொருள் ஏற்றுமதிக்குத் தடை விதிப்பது குறித்து அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வமாக ஆலோசிக்கவில்லை எனவும், நிலைமையை அவதானத்துடன் கையாண்டு வருவதாகவும் அந்நாட்டு கைத்தொழில் அமைச்சின் பிரதி அமைச்சர் யாங் கி-வூக் (Yang Ki-wook) தெரிவித்துள்ளார்.

விமான எரிபொருள் தட்டுப்பாடு: சுத்திகரிப்புச் செயற்பாட்டின் ஆரம்பக் கட்டத்திலேயே விமான எரிபொருள் தயாரிக்கப்படுவதால், மසகு எண்ணெய் தட்டுப்பாட்டின் நேரடிப் பாதிப்பை இத்துறை எதிர்கொண்டுள்ளது.

தென்கொரியா தனது மொத்த உற்பத்தியில் 60% இனை ஏற்றுமதி செய்யும் நிலையில், இந்தத் தீர்மானம் உலகளாவிய விமானப் போக்குவரத்துத் துறையில் கடும் தாக்கத்தைச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.