ஈரானுடன் எட்டப்பட்டுள்ள உடன்படிக்கைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் வரை அமெரிக்கப் படைகள் வளைகுடா பிராந்தியத்திலிருந்து விலகாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளார்.
தனது 'Truth Social' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர், ஈரானை "ஏற்கனவே பாரியளவில் சிதைக்கப்பட்ட ஒரு எதிரி" என வர்ணித்துள்ளதுடன், அமெரிக்கா தனது இராணுவ பலத்தை மேலும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்பின் எச்சரிக்கை
"உண்மையான உடன்படிக்கை" (Real Agreement) முழுமையாகக் கடைப்பிடிக்கப்படாவிட்டால், முன்னெப்போதும் கண்டிராத வகையில் மிகக் கடுமையான தாக்குதல்கள் மீள ஆரம்பமாகும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கக் கூடாது என்பதும், ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) பாதுகாப்பாகவும் திறந்தும் இருக்க வேண்டும் என்பதே பிரதான இணக்கப்பாடுகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவ தயார்நிலை: அமெரிக்கப் படைகள் தற்போது ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாகவும், அடுத்தகட்ட வெற்றிகளுக்காக (Conquest) ஆயத்தமாகி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐ.நா பொதுச்செயலாளர் கடும் கண்டனம்
இதேவேளை, லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் பாரிய வான் தாக்குதல்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 8ஆம் திகதி இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.
இது லெபனானின் உட்கட்டமைப்புகளுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐநா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைதி முயற்சிகளுக்கு அச்சுறுத்தல்
லெபனானில் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகள் தற்போது அமுலிலுள்ள தற்காலிக போர் நிறுத்தத்திற்கும், பிராந்தியத்தின் நீண்டகால அமைதி முயற்சிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக குட்டரெஸ் எச்சரித்துள்ளார்.
"இந்த மோதலுக்கு இராணுவ ரீதியான தீர்வு ஒன்றும் இல்லை" எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அனைத்துத் தரப்பினரையும் உடனடியாக வன்முறைகளைக் கைவிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.