Live
Puthiya Kural Radio Tamil 24/7 Live Stream from Canada
Full Player

ஹோர்முஸ் நீரிணையில் மிதப்பு கண்ணிவெடி அபாயம்: மாற்றுப் பாதைகளை அறிவித்தது ஈரான்!

ஹோர்முஸ் நீரிணையில் மிதப்பு கண்ணிவெடி அபாயம்: மாற்றுப் பாதைகளை அறிவித்தது ஈரான்!

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடாகப் பயணிக்கும் கப்பல்கள், கடல்சார் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறும், மிதப்பு கண்ணிவெடிகளுடன் (Sea Mines) மோதி ஏற்படக்கூடிய விபத்துக்களைத் தவிர்க்க மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும் ஈரானிய புரட்சிகர இராணுவம் (IRGC) அறிவுறுத்தியுள்ளது.

ஈரானிய அரச ஊடகங்கள் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள புதிய கடல் வழித்தடங்கள்

கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணிப்பதற்காக வரைபடத்துடன் கூடிய வழிகாட்டல்களைப் புரட்சிகர இராணுவம் வெளியிட்டுள்ளது:

ஓமான் கடலிலிருந்து வருபவை:

ஓமான் கடற்பரப்பிலிருந்து பாரசீக வளைகுடாவுக்குள் நுழையும் கப்பல்கள், லாரக் (Larak) தீவுக்கு வடக்கே பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

பாரசீக வளைகுடாவிலிருந்து வெளியேறுபவை:

வளைகுடாவிலிருந்து வெளியேறி ஓமான் கடலை நோக்கிச் செல்லும் கப்பல்கள், லாரக் தீவுக்குத் தெற்காக தமது பயணத்தைத் தொடர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடனான போர் நிறுத்த உடன்படிக்கையின் ஒரு அங்கமாக ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க இணக்கம் காணப்பட்டுள்ள போதிலும், அங்கு புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் கப்பல் போக்குவரத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. இந்த அபாயம் காரணமாகவே ஈரான் இந்த அவசர வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த மாற்றுப் பாதையூடாகப் பயணிக்கும் கப்பல்களைக் கண்காணிப்பதன் மூலம் அப்பகுதியின் முழுக் கட்டுப்பாட்டையும் தமது கையில் வைத்திருக்க ஈரான் முயற்சிப்பதாக சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

போர் நிறுத்த உடன்படிக்கையில் இழுபறி நிலை!

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கையின் முக்கிய மையப்புள்ளியாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீளத் திறப்பது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் கடும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

உலகின் மிக முக்கியமான கடல்சார் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை ஊடான போக்குவரத்துத் தடையை நீக்காவிடின், ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இரண்டு வார கால போர் நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்டது.

எவ்வாறாயினும், ஈரானிய புரட்சிகர இராணுவத்தின் (IRGC) அனுமதியின்றி ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிக்கும் கப்பல்கள் இலக்கு வைக்கப்பட்டு அழிக்கப்படும் என ஈரான் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது போர் நிறுத்த உடன்படிக்கையின் ஸ்திரத்தன்மை குறித்து சர்வதேச ரீதியில் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.

இது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகையின் ஊடகப் பேச்சாளர் கரோலின் லீவிட் (Karoline Leavitt), ஹோர்முஸ் நீரிணை உடனடியாகத் திறக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ட்ரம்ப் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், இப்பாதை திறக்கப்பட்டுள்ளதாகத் தனியாருக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும், இதற்கு மாறாக வெளிவரும் செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.