Live
Puthiya Kural Radio Tamil 24/7 Live Stream from Canada
Full Player

இலங்கைக்கான 700 மில்லியன் டொலர் கடன் தவணைக்கு IMF அனுமதி!

இலங்கைக்கான 700 மில்லியன் டொலர் கடன் தவணைக்கு IMF அனுமதி!

சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையுடன் அதிகாரிகள் மட்டத்திலான உடன்பாட்டை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் இறுதி ஒப்புதலுக்கு உட்பட்டு, தெற்காசிய நாடான இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் டொலர் புதிய நிதியைப் பெறுவதற்கு இது வழிவகுக்கும்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் 3 பில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ், இலங்கையின் 5வது மற்றும் 6வது மீளாய்வுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடுமையான நிதி நெருக்கடிக்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், தனது பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு இந்த நிதி விடுவிப்பு மேலதிக ஆதரவை வழங்கும்.

கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், கையிருப்பை மீளக் கட்டியெழுப்புவதற்கும் மற்றும் பரந்த பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிப்பதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் இலங்கை தொடர்ச்சியான நிதி, நாணய மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்த புதிய அதிகாரிகள் மட்டத்திலான உடன்பாடு அந்தச் செயல்முறையின் மற்றொரு படியாகும். இருப்பினும், நிதி விடுவிப்பானது சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் உத்தியோகபூர்வ அங்கீகாரத்தைப் பொறுத்தே அமையும்.

"இலங்கை மத்திய கிழக்கு மோதல்களால் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது எரிசக்தி விலைகளை அதிகரித்துள்ளதுடன், சுற்றுலாப் பயணிகளுக்கான முக்கிய வான்வழி மையத்தைப் பாதித்துள்ளது மற்றும் பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்களையும் பாதித்துள்ளது. எவ்வாறாயினும், வீடுகள் மற்றும் தொழில்துறைகளுக்குத் தேவையான எரிபொருளை விநியோகிப்பதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட இடையூறுகளை அதிகாரிகள் தணித்துள்ளனர்" என்று சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரிடர் அபாயங்கள், வர்த்தகக் கொள்கையில் நிலவும் நிச்சயமற்ற தன்மை மற்றும் மத்திய கிழக்கு மோதல் ஆகியவற்றால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள அதிகரித்த அபாயங்கள், சீர்திருத்த வேகத்தை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.

இது பேரினப் பொருளாதார நிலைத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், அதிர்ச்சிகளைத் தாங்கும் இலங்கையின் திறனை மேம்படுத்துவதற்கும் மற்றும் பொருளாதாரத்தை மீட்சி மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய பாதையில் நிலைநிறுத்துவதற்கும் அவசியமானது என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் நிவாரணப் பொதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழுத் தலைவர் பாராட்டு

மத்திய கிழக்கு போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் வறிய மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு ஜனாதிபதி அනුர குமார திஸாநாயக்க வழங்கியுள்ள 100 பில்லியன் ரூபாய் நிவாரணப் பொதியைப் பாராட்டுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான தூதுக்குழுத் தலைவர் இவான் பாபஜார்ஜியோ (Evan Papageorgiou) தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் இலங்கைப் பொருளாதாரத்திற்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் மற்றும் நிவாரணம் தேவைப்படும் தரப்பினருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டாமா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, நேற்று (09) கொழும்பில் உள்ள மத்திய வங்கி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக இலங்கையின் இறக்குமதி - ஏற்றுமதி வர்த்தகம், சுற்றுலா வருமானம் மற்றும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் குறைவடைதல் உள்ளிட்ட பல நேரடிப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனச் சுட்டிக்காட்டிய IMF தூதுக்குழுத் தலைவர், இலங்கையின் அரச வருமானம் வெற்றிகரமான மட்டத்தை எட்டியுள்ள இவ்வேளையில், வரி வருமானம் கசிவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

பொருளாதாரச் சீர்திருத்தங்கள், குறிப்பாக அரச நிறுவனங்கள் தொடர்பான சீர்திருத்தங்கள் மற்றும் தொழிலாளர் சட்டங்கள் உள்ளிட்ட முதலீட்டுக்குச் சார்பான புதிய சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவது கட்டாயமாகச் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.