Live
Puthiya Kural Radio Tamil 24/7 Live Stream from Canada
Full Player

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2017 முதல் திட்டமிடப்பட்ட ஒரு சதி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2017 முதல் திட்டமிடப்பட்ட ஒரு சதி!

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு தனிப்பட்ட சம்பவமல்ல எனவும், அது 2017ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்ட ஒரு சதித்திட்டம் என்பது தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இன்று (09) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே பொதுப்பாதுகாப்பு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

2017 முதல் திட்டமிடப்பட்ட சதி

"உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது ஒரு தனிப்பட்ட சம்பவமல்ல என்பதும், அது 2017 முதல் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்ட ஒரு சதித்திட்டம் என்பதும் விசாரணைகளின் மூலம் தற்போது தெரியவந்துள்ளது. இது ஒரு சதித்திட்டம்; 2017 முதல் திட்டமிடப்பட்டு, படிப்படியாகச் செயற்படுத்தப்பட்டு இந்தச் சம்பவம் வரை கொண்டு வரப்பட்ட ஒரு சதியாகவே தற்போதைய விசாரணைகளில் இருந்து வெளிப்படுகிறது.

2018.11.30 அன்று வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகொலை.

2018.12.22, 23 ஆகிய திகதிகளில் மாவனல்லை புத்தர் சிலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்.

2019.01.16 அன்று வனாத்தவில்லுவ இரகசிய முகாம் ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடிபொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டமை.

2019.03.10 அன்று மாவனல்லை பகுதியில் தஸ்லீம் என்பவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை.

2019.04.16 அன்று மட்டக்களப்பு காத்தான்குடி பாலமுனை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றினை வெடிக்கச் செய்தமை.

2019.04.21 அன்று நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்.

இவை அனைத்தும் ஒரே குழுவினால் ஒன்றோடொன்று சங்கிலித் தொடராக இணைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட சம்பவங்கள் என்பது விசாரணைகளின் ஊடாகத் தெளிவாகிறது."

சுரேஷ் சலே கைது செய்யப்பட்டதற்கான காரணம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சதி மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

"உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான சதி மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை தொடர்பில் 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் துவான் சுரேஷ் சலே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையின் சாட்சிப் பட்டியலில் முதலாவது சாட்சியாகப் பெயரிடப்பட்டிருந்தார். எனினும், 2024.10.11 அன்று செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, குறித்த சந்தேக நபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராகவும், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளராகவும் பணியாற்றிய ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் இஸ்லாமிய தீவிரவாதிகளின் வன்முறைச் செயல்கள் குறித்து அறிந்திருந்தும், அவற்றைத் தடுப்பதையும் வெளிப்படுத்துவதையும் உள்நோக்கத்துடன் தடுத்துள்ளமை மற்றும் தாக்குதல் நடத்தப்படுவதற்கு இடமளித்துள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன், தாக்குதலின் பின்னணியில் இருந்த நபர்கள் மற்றும் குழுக்கள் வெளிப்படுவதைத் தடுப்பதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர் செயற்பட்டுள்ளார். அந்த வகையில் இச்சதித்திட்டத்துடன் அவருக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்."

பிள்ளையான் முன்கூட்டியே அறிந்திருந்தார்

முன்னாள் அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பான விசாரணைகளும் சரியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

சஹாரானுக்கு மேலிருந்து அவரை இயக்கியவர்கள் குறித்து சாட்சியங்கள்

"உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரி குழுவின் தலைவராகச் செயற்பட்ட சஹாரான் ஹாசிமிற்கு மேலிருந்து அவரை இயக்கிய ஒரு நபர் அல்லது ஒரு குழு இருந்தமை குறித்து சாட்சியங்கள் ஊடாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

இது குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்பாக வெளிவந்துள்ள தகவல்களை இந்தத் தருணத்தில் பகிரங்கப்படுத்த முடியாது."