Live
Puthiya Kural Radio Tamil 24/7 Live Stream from Canada
Full Player

'சஹாரானை இயக்கிய ஒரு உயர்மட்டத் தலைவர் இருந்தார்!'

'சஹாரானை இயக்கிய ஒரு உயர்மட்டத் தலைவர் இருந்தார்!'

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களை வழிநடத்திய சஹாரான் ஹாசிமைப் பின்னால் இருந்து இயக்கிய ஒரு 'உயர்மட்டத் தலைவர்' (Supreme Leader) இருந்தமை விசாரணைகளின் ஊடாகத் தெரியவந்துள்ளதாகப் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர், வெளிவந்துள்ள சில தகவல்கள் மிகவும் உணர்திறன் வாய்ந்தவை என்றும், குறிப்பாக நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவற்றைப் பகிரங்கப்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டார்.

"விசாரணைகள் சரியான திசையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன," என்று கூறிய அவர், வவுணதீவில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் சஹாரான் மற்றும் அவரது குழுவினர் இருந்ததைச் சுட்டிக்காட்டினார். "முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு சஹாரான் கைது செய்யப்பட்டிருந்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தடுத்திருக்க முடியும்," என்றும் அவர் மேலும் கூறினார்.

வவுணதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுடைய இரண்டு ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது வெளிப்படுத்தினார். "ஒரு ஆயுதம் வனாத்தவில்லுவ பகுதியிலும் மற்றையது நிந்தாவூர் பகுதியிலும் மீட்கப்பட்டுள்ளன."

மேலும், உயிர்த்த ஞாயிறு விசாரணைகளில் ஸ்காட்லாந்து யார்ட் (Scotland Yard), எப்.பி.ஐ (FBI) மற்றும் இன்டர்போல் (Interpol) ஆகிய சர்வதேச நிறுவனங்களும் பங்களிப்பு வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.