Live
Puthiya Kural Radio Tamil 24/7 Live Stream from Canada
Full Player

லெபனானில் போர்நிறுத்தம் இன்றி பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முடியாது; ஈரான் அறிவிப்பு!

லெபனானில் போர்நிறுத்தம் இன்றி பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முடியாது; ஈரான் அறிவிப்பு!

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இரண்டு முக்கிய நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) தெரிவித்துள்ளார்.

லெபனானில் போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துக்களை விடுவித்தல் ஆகியவையே அந்த நிபந்தனைகளாகும்.

"இரு தரப்பினருக்கும் இடையே பரஸ்பரம் இணக்கம் காணப்பட்ட இரண்டு நடவடிக்கைகள் இன்னும்

லெபனானில் போர்நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவித்தல்," என காலிபாஃப் தனது 'X' தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

"பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்னர் இந்த இரண்டு விடயங்களும் நிறைவேற்றப்பட வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைக்கு முன்னர் போர்நிறுத்தம் அவசியம் - லெபனான் அறிவிப்பு

இஸ்ரேலுடன் அடுத்த வாரம் நடைபெறவுள்ள நேரடிப் பேச்சுவார்த்தைகளில் லெபனான் பங்கேற்க வேண்டுமானால், அதற்கு முன்னதாக ஒரு போர்நிறுத்தம் நடைமுறைக்கு வர வேண்டும் என லெபனான் ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் பிபிசி (BBC) செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.

"லெபனான் அரசாங்கத்தின் தொடர்ச்சியான கோரிக்கைகளை" அடுத்து, அந்நாட்டுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து விவாதிக்க அடுத்த வாரம் வொஷிங்டனில் சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடரும் மோதல்கள்

இராஜதந்திர முயற்சிகள் ஒருபுறம் இருக்க, இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் லெபனானில் தொடர்கின்றன. அண்மைக்காலத் தாக்குதல்களில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அப்பாஸியே (Abbassieh) நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எழுவர் மற்றும் சராடியே (Zrarieh) பகுதியில் 11 பேர் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர். இதற்குப் பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலின் பல பகுதிகள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்த அமெரிக்க-ஈரான் போர்நிறுத்த உடன்படிக்கையில் லெபனான் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து கடும் சர்ச்சை நிலவுகிறது.

இந்த போர்நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் வகித்த பாகிஸ்தானும் ஈரானும் லெபனான் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றன. ஆனால் அமெரிக்காவும் இஸ்ரேலும் அதனை மறுத்துள்ளன.

நெதன்யாகுவின் நிலைப்பாடு

வியாழக்கிழமை இரவு இஸ்ரேலிய மக்களுக்கு உரையாற்றிய பெஞ்சமின் நெதன்யாகு, "லெபனானில் போர்நிறுத்தம் எதுவும் இல்லை" என்று திட்டவட்டமாகக் கூறினார். லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க அமைச்சரவைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அதன் மூலம் இரண்டு இலக்குகளை அடைய எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்:

ஹிஸ்புல்லா அமைப்பை நிராயுதபாணியாக்குதல்.

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் நிலையான அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்துதல்.

லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவது மிகவும் அரிதான விடயமாகும், ஏனெனில் இரு நாடுகளும் வரலாற்று ரீதியாக இடைத்தரகர்கள் மூலமே தொடர்புகளைப் பேணி வந்துள்ளன.

2024 நவம்பரில் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின்னர், அமெரிக்கத் தூதுவர்கள் ஊடாக மறைமுகப் பேச்சுவார்த்தைகளை நடத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், புதன்கிழமை இஸ்ரேல் நடத்திய மிகக் கடுமையான விமானத் தாக்குதல்களில் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு, 1,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.