ஈரானின் துறைமுகங்களை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முற்றுகையிட (Blockade) அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
அணுசக்தி விவகாரம் மற்றும் பிராந்திய மோதல்கள் தொடர்பில் ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவது குறித்துத் தான் கவலைப்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் இடம்பெற்ற உயர்மட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்கா இந்த அதிரடித் தீர்மானத்தை எடுத்துள்ளது.
இது குறித்து ஜனாதிபதி ட்ரம்ப் கருத்துத் தெரிவிக்கையில், "ஈரான் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்புவதும் திரும்பாததும் எனக்குப் பெரிய விடயமல்ல.
எமது நிபந்தனைகளை அவர்கள் ஏற்கத் தவறிவிட்டனர். எனவே, திங்கட்கிழமை முதல் அவர்களது துறைமுகங்களுக்கான போக்குவரத்துகள் முடக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த முற்றுகை நடவடிக்கையானது ஈரானின் பொருளாதாரத்தை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, ஹோர்முஸ் ஜலசந்தி ஊடான சர்வதேச எரிசக்தி விநியோகத்தில் இதனால் பாரிய பாதிப்புகள் ஏற்படக்கூடும் என உலகளாவிய அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.