ஈரானுடனான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில் எவ்வித உடன்பாடும் எட்டப்படாத நிலையில், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டார்.
அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர் அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் கூறிய முக்கிய விடயங்கள் வருமாறு:
இஸ்லாமாபாத்தில் சனிக்கிழமை ஆரம்பமாகி ஞாயிறு காலை வரை நீடித்த இந்த மாரத்தான் பேச்சுவார்த்தைகள், யுத்தத்தை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எந்தவொரு தீர்வையும் எட்டவில்லை.
"இது அமெரிக்காவை விட ஈரானுக்கே மிகவும் மோசமான செய்தி என்று நான் நினைக்கிறேன். எனவே, எந்தவொரு உடன்பாடும் இன்றி நாங்கள் அமெரிக்கா திரும்புகிறோம்"
என வான்ஸ் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் "இறுதியான மற்றும் சிறந்த" சலுகை
அமெரிக்கா விதித்த நிபந்தனைகளை ஈரானிய பேச்சுவார்த்தையாளர்கள் ஏற்க மறுத்துவிட்டதாக வான்ஸ் கூறினார். அமெரிக்கா மிகவும் நெகிழ்வுத்தன்மையுடனும் இணக்கமாகவும் செயற்பட்டதாக அவர் வலியுறுத்தினார்.
"நாங்கள் மிகவும் ஒத்துழைப்புடன் இருந்தோம். 'நீங்கள் அங்கு நேர்மையான எண்ணத்துடன் சென்று ஒரு ஒப்பந்தத்தை எட்ட உங்களால் முடிந்த அளவு முயற்சி செய்ய வேண்டும்' என்று ஜனாதிபதி (ட்ரம்ப்) எங்களிடம் கூறினார். நாங்கள் அவ்வாறே செய்தோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக எந்த முன்னேற்றத்தையும் எட்ட முடியவில்லை"
என்று அவர் தெரிவித்தார்.
ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து
மணித்தியாலக் கணக்கில் பேச்சுவார்த்தைகள் நடந்த போதிலும், அணு ஆயுதங்களை உருவாக்குவதைக் கைவிடுவதற்கு ஈரான் இணங்கவில்லை என்று துணை ஜனாதிபதி கூறினார்.
"ஈரானியர்கள் இப்போதும், இன்னும் இரண்டு வருடங்களின் பின்னரும் மட்டுமல்ல, நீண்ட காலத்திற்கும் அணு ஆயுதத்தை உருவாக்க மாட்டார்கள் என்ற அடிப்படை உறுதிப்பாட்டை நாம் காண்கிறோமா? என்பதே கேள்வி. அதனை நாங்கள் இன்னும் காணவில்லை, ஆனால் வரும் காலத்தில் காண்போம் என நம்புகிறோம்" என்றார் வான்ஸ்.
பேச்சுவார்த்தைகளின் போது தான் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் தொடர்ச்சியாகப் பேசியதாக வான்ஸ் தெரிவித்தார். மேலும், இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் மத்திய கட்டளைத் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடனும் அவர் கலந்தாலோசித்ததாகக் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், அமெரிக்காவின் "அதிகப்படியான" கோரிக்கைகளே பேச்சுவார்த்தை தோல்வியடையக் காரணம் என ஈரான் அரச ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
அமெரிக்காவின் அதீத ஆசைகள் மற்றும் நிபந்தனைகள் காரணமாக இரு தரப்பினரும் உடன்பாட்டை எட்டத் தவறிவிட்டதாக ஈரானின் தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் இஸ்லாமாபாத்திலிருந்து தெரிவித்துள்ளது.