ஆஸ்திரேலியாவில் டீசல் விலை கட்டுப்பாட்டை மீறியது: விநியோகச் சங்கிலி முடங்கும் அபாயம்!

ஆஸ்திரேலியாவில் டீசல் விலை கட்டுப்பாட்டை மீறியது: விநியோகச் சங்கிலி முடங்கும் அபாயம்!

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், ஆஸ்திரேலியாவில் டீசல் மற்றும் பெட்ரோல் விலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதால் அந்நாட்டின் சரக்கு போக்குவரத்துத் துறை (Freight Industry) பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளது.

ஈரானில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்ந்துள்ளமையே இந்த நெருக்கடிக்கு முதன்மைக் காரணமாகும்.

முக்கிய தரவுகள்:

விலை ஏற்றம்: போருக்கு முன்னர் லீற்றர் ஒன்றுக்கு 180.2 சதமாக இருந்த டீசல் விலை தற்போது 312.7 சதமாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலையும் 171 சதத்திலிருந்து 240.1 சதமாக அதிகரித்துள்ளது.

செலவு அதிகரிப்பு: பாரவூர்தி உரிமையாளர்களின் எரிபொருள் செலவு இரு மடங்காக அதிகரித்துள்ளது. முன்னர் 3,600 ஆஸ்திரேலிய டொலர்களுக்கு நிரப்பப்பட்ட எரிபொருள் டேங்கிற்கு தற்போது 7,500 டொலர்கள் செலவிட வேண்டியுள்ளதாக வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பிரதமரின் அவசர உரை:

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தனி அல்பானிஸ் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில், தற்போதைய சூழலை ஒரு சவாலான காலம் என வர்ணித்துள்ளார்.

"இந்த உலகளாவிய சவால்களை நாம் ஆஸ்திரேலிய முறைப்படி எதிர்கொள்வோம்" எனக் குறிப்பிட்ட அவர், அத்தியாவசியப் போக்குவரத்துத் தேவைகளுக்காக எரிபொருளைச் சேமிக்கும் பொருட்டு, பொதுமக்கள் பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

துறைசார் வல்லுநர்களின் எச்சரிக்கை:

சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் தமது சேவைகளுக்கான கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள 60 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ள நிலையில், அதிகரித்துள்ள எரிபொருள் கட்டணங்களைச் செலுத்த முடியாமல் பல நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

"நீங்கள் உண்ணும் உணவு, உடுத்தும் உடை மற்றும் பயன்படுத்தும் தொலைபேசி என அனைத்தும் ஏதோ ஒரு கட்டத்தில் பாரவூர்தி மூலமே உங்களை வந்தடைகின்றன. இந்த விநியோகச் சங்கிலி (Supply Chain) பாதிக்கப்பட்டால் நாடு பாரிய உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள் தட்டுப்பாட்டைச் சந்திக்கும்" என சாரதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அரசாங்கம் ஒரு பில்லியன் டொலர் வட்டியற்ற கடன் திட்டத்தை அறிவித்துள்ள போதிலும், அது கடனை மேலும் அதிகரிக்குமே தவிர நிரந்தரத் தீர்வாகாது என போக்குவரத்துத் துறைசார் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.