அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 14ஆம் லியோ பாப்பரசரை (Pope Leo XIV) கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாப்பரசரசரின் வௌிநாட்டுக் கொள்கை மற்றும் குடிவரவு தொடர்பான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே ட்ரம்ப் இந்தத் தாக்குதலைத் தொடுத்துள்ளார்.
தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், "லியோ பாப்பரசர் குற்றங்களுக்கு எதிராகப் பலவீனமானவர் (Weak on Crime) மற்றும் வௌிநாட்டுக் கொள்கையில் மிகவும் மோசமானவர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு திருத்தந்தையாகப் பதவியேற்ற, அமெரிக்காவில் பிறந்த முதல் பாப்வான 14 ஆம் லியோ, பிப்ரவரி 28ஆம் திகதி ஆரம்பமான ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலியப் போரைத் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார்.
யுத்தம் குறித்த திருத்தந்தையின் கருத்து: ஈரானிய நாகரிகத்தை அழிப்போம் என்ற ட்ரம்பின் மிரட்டல் "ஏற்றுக்கொள்ள முடியாதது" எனத் தெரிவித்த திருத்தந்தை, போரைத் தொடங்கும் தலைவர்களின் கைகளில் "இரத்தம் படிந்துள்ளதாகவும்", அவர்களின் பிரார்த்தனைகளைக் கடவுள் நிராகரிப்பார் என்றும் அண்மையில் புனித பேதுரு சதுக்கத்தில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்காவிற்கு வரும் குடியேறிகள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, கருக்கலைப்புக்கு எதிராகப் பேசும் ட்ரம்ப் நிர்வாகம், குடியேறிகளை மோசமாக நடத்துவதை "வாழ்க்கைக்கு ஆதரவான கொள்கை" (Pro-life) எனக் கருத முடியாது எனத் தெரிவித்திருந்தார்.
திருத்தந்தை ஒரு "தாராளவாத சிந்தனை கொண்டவர்" (Liberal) என வர்ணித்த ட்ரம்ப், அவர் குற்றங்களைத் தடுப்பதில் நம்பிக்கையற்றவர் எனச் சாடியுள்ளார்.
"திருத்தந்தை தனது கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும். அவரை ஒரு அமெரிக்கர் என்பதற்காகவே கத்தோலிக்க சபை தெரிவு செய்தது. டொனால்ட் ட்ரம்ப்பைச் சமாளிக்க அதுவே சிறந்த வழி என அவர்கள் நினைத்தார்கள்" என ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதிக்கும் வத்திக்கானுக்கும் இடையில் நிலவும் இந்த முறுகல் நிலை சர்வதேச ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடனும் ட்ரம்ப் இவ்வாறான மோதல்களில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.