ஈரானியத் துறைமுகங்களை இலக்கு வைத்து அமெரிக்க இராணுவம் நேற்று (13) முதல் பாரிய கடல்வழி முற்றுகையை (Blockade) ஆரம்பித்துள்ளது.
இந்த நடவடிக்கையானது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், பேச்சுவார்த்தைகள் குறித்த நம்பிக்கை காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டொலர்களுக்கு கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகத்தின் (Centcom) உத்தரவின்படி, ஈரானியத் துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் அனைத்துக் கப்பல்களும் தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றன.
"ஈரானின் அதிவேக தாக்குதல் படகுகள் எமது முற்றுகைப் பகுதிக்கு அருகில் வந்தால், அவை உடனடியாக அழிக்கப்படும்" என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் படகுகள் மீது பயன்படுத்தப்படும் அதே 'க்விக் அண்ட் புரூட்டல்' (Quick and Brutal) முறைமை இதற்காகப் பயன்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முற்றுகை ஆரம்பமான பின்னர், சீனாவிற்குச் சொந்தமான 'ரிச் ஸ்டாரி' (Rich Starry) எனும் எரிபொருள் தாங்கிக் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைத் தாண்டிச் சென்ற முதலாவது கப்பலாகப் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் இந்த முற்றுகை நடவடிக்கையை 'கடற்கொள்ளை' (Piracy) என வர்ணித்துள்ள ஈரான், தமது துறைமுகங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் வளைகுடா பிராந்தியத்திலுள்ள எந்தவொரு துறைமுகமும் பாதுகாப்பாக இருக்காது என எச்சரித்துள்ளது.
அத்துடன், ஜலசந்திக்கு அருகில் வரும் எந்தவொரு இராணுவக் கப்பலும் போர்நிறுத்தத்தை மீறியதாகக் கருதப்படும் என ஈரான் புரட்சிகர காவற்படை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததாகக் கருதப்பட்டாலும், அதில் "முன்னேற்றம்" ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கத் தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்கிய துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் கூறுகையில், ஈரானிடமிருந்து "நல்ல சமிக்ஞைகள்" கிடைத்துள்ளதாகவும், எனினும் அவை போதுமானதாக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தும் பொறிமுறையை நிறுவுவதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நேட்டோ (NATO) நட்பு நாடுகள் இந்த முற்றுகைப் போரில் பங்கேற்கப் போவதில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளன.
மாறாக, உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு கடல்வழிப் பாதைகளை மீண்டும் திறக்க வேண்டியதன் அவசியத்தை அவை வலியுறுத்தியுள்ளன.
இதேவேளை, லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்கள் தொடர்வதாகவும், தெற்கு லெபனானில் இடம்பெற்ற மோதலில் இஸ்ரேலிய வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.