Live
Puthiya Kural Radio Tamil 24/7 Live Stream from Canada
Full Player

'மோதல்களைத் தவிர்த்து இராஜதந்திரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய தருணம் இது'

'மோதல்களைத் தவிர்த்து இராஜதந்திரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய தருணம் இது'

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் குறித்து நியூயோர்க்கில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், மோதல்களைக் கைவிட்டு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம்?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் ஆரம்பிக்கப்படலாம் என வெளியாகியுள்ள செய்திகள் குறித்துக் கேட்கப்பட்ட போது, "இந்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாகவே காணப்படுகின்றன" என அவர் உறுதிப்படுத்தினார்.

அதேவேளை, இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான பேச்சுவார்த்தைகள் அனைத்துப் பிரச்சினைகளையும் உடனடியாகத் தீர்க்காது என்றாலும், தற்போதைய சூழலில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சூழலை உருவாக்க அவை மிக முக்கியமானவை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும்:

உலகெங்கிலும், குறிப்பாக மத்திய கிழக்கிலும் சர்வதேச சட்டங்கள் அப்பட்டமாக மீறப்பட்டு வருவதாகக் குட்டரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"பல நாடுகள் நீதியைக் கண்டுகொள்ளாமல் இருக்கத் தீர்மானித்துள்ளன. பலாத்காரத்தைப் பயன்படுத்துவது குறித்த விதிகள் புறக்கணிக்கப்பட்டு, பொதுமக்கள் தாங்க முடியாத தீங்குகளுக்கு ஆளாகின்றனர்" என அவர் கவலை வௌியிட்டார்.

அனைவருக்கும் பொதுவான சட்டம்: சர்வதேச சட்டங்கள் விதிவிலக்கின்றி அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் என்றும், மத்திய கிழக்கு மோதலில் அச்சட்டங்களை அவசரமாக அமுல்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அமைதி மற்றும் கடல்வழிப் பாதுகாப்பு:

கடுமையான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடர வேண்டும் என்றும், தற்போதுள்ள போர்நிறுத்தம் பேணப்பட்டு தேவையேற்படின் நீடிக்கப்பட வேண்டும் என்றும் பொதுச்செயலாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) உள்ளிட்ட சர்வதேச கடல்வழிப் பாதைகளில் பயணச் சுதந்திரம் அனைத்துத் தரப்பினராலும் மதிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

"இப்போது பொறுமையுடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டிய தருணம் இது. மோதல்களைத் தீவிரப்படுத்துவதை விட இராஜதந்திரத்திற்கு இடமளிக்க வேண்டும். சர்வதேச சட்டங்கள் மீதான உறுதிப்பாட்டை மீண்டும் புதுப்பிக்க வேண்டிய நேரம் இது" என அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.