ஈரான் மீதான அமெரிக்காவின் துறைமுக முற்றுகை மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர நகர்வுகள் குறித்த விரிவான தகவல்கள் வௌியாகியுள்ளன.
அடுத்த இரண்டு நாட்களில் தீர்க்கமான பேச்சுவார்த்தை?
ஈரான் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் பாக்கிஸ்தானில் ஆரம்பிக்கப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
"அடுத்த இரண்டு நாட்களில் ஏதோ ஒன்று நடக்கப் போகிறது, நாம் அங்கு செல்வதற்கே அதிக ஆர்வமாக உள்ளோம்" என அவர் நியூயோர்க் போஸ்ட் (New York Post) இதழுக்குத் தெரிவித்துள்ளார்.
இந்த இராஜதந்திர சமிக்ஞைகளை அடுத்து, உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டொலர்களுக்கு கீழ் குறைவடைந்துள்ளது.
மறுபுறம், ஈரானியத் துறைமுகங்களை நோக்கியும் அங்கிருந்து வெளியேறும் கப்பல்களை நோக்கியும் அமெரிக்கா பாரிய முற்றுகையை முன்னெடுத்துள்ளது.
இந்த முற்றுகையில் 10,000க்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவத்தினர், ஒரு டசனுக்கும் அதிகமான போர்க்கப்பல்கள் மற்றும் டஜன் கணக்கான விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கடந்த 24 மணித்தியாலங்களில் எந்தவொரு கப்பலும் அமெரிக்காவின் முற்றுகையைத் தாண்டிச் செல்லவில்லை எனவும், 6 வணிகக் கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை 'கடற்கொள்ளை' என வர்ணித்துள்ள ஈரான், தமது துறைமுகங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் வளைகுடா பிராந்தியத்திலுள்ள ஏனைய நாட்டுத் துறைமுகங்களும் பாதுகாப்பாக இருக்காது என எச்சரித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் (IMF) உலகப் பொருளாதாரம் குறித்த பாரிய எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
மசகு எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டொலர்களுக்கு மேல் நீடித்தால், உலகப் பொருளாதாரம் பாரிய மந்தநிலையை (Recession) நோக்கித் தள்ளப்படும் என IMF சுட்டிக்காட்டியுள்ளது.
சீனாவின் கண்டனம்: ஈரானிய எண்ணெயைக் கொள்வனவு செய்யும் முக்கிய நாடான சீனா, அமெரிக்காவின் இந்த முற்றுகை "பொறுப்பற்றது மற்றும் ஆபத்தானது" எனச் சாடியுள்ளது.
அணுசக்தி ஒப்பந்தமும் இழுபறியும்:
ஈரானின் அணுசக்தி செயற்பாடுகளை 20 ஆண்டுகளுக்கு இடைநிறுத்த வேண்டும் என அமெரிக்கா முன்வைத்த யோசனையை ஈரான் நிராகரித்துள்ளது.
ஈரான் 3 முதல் 5 ஆண்டுகள் வரையான ஒரு காலப்பகுதியையே முன்மொழிந்துள்ளதாகத் தெரியவருகிறது.
ஈரானுடனான போர்நிறுத்தம் ஒருபுறம் இருக்க, லெபனானில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின்றது.
இது குறித்த நேரடிப் பேச்சுவார்த்தைகள் வொஷிங்டனில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தலைமையில் நேற்று (14) ஆரம்பமாகியுள்ளன.
1983ஆம் ஆண்டிற்குப் பின்னர் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே இடம்பெறும் முதலாவது நேரடிப் பேச்சுவார்த்தை இதுவாகும்.
இதேவேளை, ஈரானுக்கு எதிரான அமெரிக்கத் தாக்குதல்களுக்கு அந்நாட்டு மக்கள் மத்தியில் இருந்த ஆதரவு 37 வீதத்திலிருந்து 35 வீதமாகக் குறைந்துள்ளதாக அண்மைக்காலக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.