இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே வொஷிங்டனில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், இரு நாடுகளும் உத்தியோகபூர்வமாக சமாதானத்தை எட்டுவது குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிதியோன் சார் (Gideon Sa’ar) இன்று கருத்துத் தெரிவிக்கையில், இஸ்ரேல் லெபனானுடன் "சமாதானத்தையும் உறவுகளை இயல்புநிலைக்கு (Normalisation) கொண்டுவருவதையுமே" விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
இஸ்ரேலின் பிரச்சினை லெபனான் நாட்டுடன் அல்ல, மாறாக அங்கிருந்து செயற்படும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்புடனேயே இருப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நயிம் காசிம் (Naim Qassem) நேற்று வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேலுடன் போர்நிறுத்த உடன்படிக்கை எட்டப்படும் வரை எந்தவொரு இராஜதந்திர நகர்வுகளையும் அங்கீகரிக்கப் போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது இரு நாடுகளுக்கும் இடையே ஒரு முட்டுக்கட்டை நிலை (Impasse) நிலவுகிறது.
நிபந்தனை: ஹிஸ்புல்லா அமைப்பை முழுமையாக நிராயுதபாணியாக்குவதே (Disarmament) தமது இலக்கு என இஸ்ரேல் கூறுகிறது. எனினும், இதற்கு ஹிஸ்புல்லா இணங்கவில்லை.
முறையான போர்நிறுத்தம் இன்றி தெற்கு லெபனானில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளவோ அல்லது தாக்குதல்களை நிறுத்தவோ இஸ்ரேல் தயாராக இல்லை.
13 இஸ்ரேலிய குடியிருப்புக்கள் மீது ஹிஸ்புல்லா சரமாரி ஏவுகணைத் தாக்குதல்!
வொஷிங்டனில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் அதேவேளை, இஸ்ரேலின் வடக்கு எல்லைப் பகுதியில் உள்ள 13 குடியிருப்புக்களை (Settlements) இலக்கு வைத்து ஹிஸ்புல்லா அமைப்பினர் சரமாரி ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர்.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை தமது தாக்குதல்கள் தொடரும் என ஹிஸ்புல்லா எச்சரித்துள்ளது.
பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில் ஹிஸ்புல்லாவின் தாக்குதல்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் என இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் (IDF) பேச்சாளர் முன்னதாக எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பகட்டத்திலேயே உள்ள நிலையில், ஒரு நிரந்தர அமைதி உடன்படிக்கையை எட்டுவதில் ஹிஸ்புல்லா அமைப்பு ஒரு பெரும் சவாலாகவே விளங்குவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.