Live
Puthiya Kural Radio Tamil 24/7 Live Stream from Canada
Full Player

கனடாவில் எரிபொருள் விலை அதிரடியாகக் குறைகிறது: கூட்டாட்சி வரியைத் தற்காலிகமாக நீக்கினார் பிரதமர் மார்க் கார்னி!

கனடாவில் எரிபொருள் விலை அதிரடியாகக் குறைகிறது: கூட்டாட்சி வரியைத் தற்காலிகமாக நீக்கினார் பிரதமர் மார்க் கார்னி!

சர்வதேச சந்தையில் நிலவும் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் மத்திய கிழக்கு பதற்றங்களுக்கு மத்தியில், கனடியர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் கூட்டாட்சி எரிபொருள் வரியை (Federal Gas Tax) தற்காலிகமாக இடைநிறுத்த பிரதமர் மார்க் கார்னி தீர்மானித்துள்ளார்.

இந்த வரி இடைநிறுத்தத்தின் மூலம் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 10 காசுகளாலும் (10 cents), டீசலின் விலை 4 காசுகளாலும் (4 cents) குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரிச் சலுகை எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதுடன், செப்டம்பர் 07ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.

மூன்று இடைத்தேர்தல்களில் கார்னி தலைமையிலான லிபரல் அரசாங்கம் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ள நிலையில், இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) மூடப்பட்டிருப்பதால், உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக கனடாவின் சில பகுதிகளில் எரிபொருள் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் 40 காசுகளுக்கும் மேலாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மார்க் கார்னியின் இந்த நடவடிக்கை போதுமானது அல்ல என எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே (Pierre Poilievre) விமர்சித்துள்ளார்.

எதிர்க்கட்சியின் கோரிக்கை: ஜி.எஸ்.டி (GST) வரி உள்ளிட்ட ஏனைய வரிகளையும் நீக்கி, ஒரு லீற்றருக்கு 25 காசுகள் வரை விலையைக் குறைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கான நிதியை அதிவேக ரயில் திட்டம் போன்ற பாரிய திட்டங்களைக் கைவிடுவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் யோசனை முன்வைத்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குப் பின்னரும் இந்த வரிச் சலுகை நீடிக்கப்படுமா என்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த எரிசக்தி அமைச்சர் டிம் ஹோட்சன் (Tim Hodgson), அப்போதைய நிதி நிலைமை மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியின் நிலவரத்தைப் பொறுத்து 'நடைமுறைச் சாத்தியமான' முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

1995ஆம் ஆண்டிற்குப் பின்னர் கனடாவில் பெற்றோல் மீதான வரி குறைக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.