பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் அரசாங்கம், எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி தனது வசந்தகால பொருளாதார அறிக்கையை (Spring Economic Update) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.
லிபரல் கட்சி பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு இந்த அறிக்கை வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
"இந்த அறிக்கை குடும்பங்களுக்கு உதவும் ஒரு திட்டமாக அமையும்" என நிதி அமைச்சர் ஷாம்பேன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டின் தொழில் துறை மற்றும் தேசத்தின் செழுமைக்கு இந்த அறிக்கை வலுசேர்க்கும் எனவும் அவர் உறுதியளித்தார்.
பிரதமர் மார்க் கார்னி பதவியேற்ற பின்னர், வரவு செலவுத் திட்டம் மற்றும் பொருளாதார அறிக்கைகளை வெளியிடும் கால அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
அந்த மாற்றங்களுக்குப் பிறகு வெளியாகும் முதலாவது முக்கியமான நிதி ஆவணம் இதுவாகும்.
முன்னதாக அறிவிக்கப்பட்ட சில திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக பிரதமர் கார்னி சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, கனடியப் பொருளாதாரம் சுயமாக இயங்கும் வகையிலும், நீண்டகால அடிப்படையில் பலன் தரும் வகையிலும் பாரிய திட்டங்கள் இந்த அறிக்கையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் போர் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகையினால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வு, மற்றும் அமெரிக்காவுடனான நீண்டகால வர்த்தகப் போர் ஆகியவற்றால் கனடியர்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனை ஈடுசெய்யும் நோக்கில், அடுத்த வாரம் முதல் கூட்டாட்சி எரிபொருள் வரி (Fuel Excise Tax) தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என பிரதமர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் 28 அறிக்கையில் மேலதிக சலுகைகள் இடம்பெறலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட அடுத்த நாளே (ஏப்ரல் 29), கனடா வங்கி (Bank of Canada) தனது வட்டி வீதங்கள் மற்றும் பணவியல் கொள்கை குறித்த முடிவை அறிவிக்கவுள்ளது.
இதுவும் கனடியப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.