மத்திய கிழக்கில் நிலவும் போர் மோதல்கள் காரணமாக உலகப் பொருளாதாரம் மற்றும் எரிசக்தித் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், குறைந்த வருமானம் பெறும் நாடுகளை (Low-income countries) கடும் நெருக்கடிக்குள் தள்ளும் என மூன்று முக்கிய சர்வதேச நிறுவனங்கள் கூட்டாக எச்சரித்துள்ளன.
சர்வதேச எரிசக்தி முகமை (IEA), சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி ஆகியன இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள்:
எரிசக்தி இறக்குமதியை நம்பியிருக்கும் ஏழை நாடுகளில் எண்ணெய், எரிவாயு மற்றும் உரங்களின் விலை அதிகரிப்பால் உணவுப் பாதுகாப்பிற்கு (Food Security) பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) போன்ற பிரதான எரிசக்தி விநியோகப் பாதைகள் இன்னும் முழுமையாக சீரடையவில்லை. கப்பல் போக்குவரத்து வழமைக்குத் திரும்பினாலும், உலகளாவிய விநியோகக் கட்டமைப்பு (Global Supply Chain) பழைய நிலைக்கு வர நீண்ட காலம் எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான போர்ச் சூழலால் சுற்றுலாத் துறை மற்றும் வேலைவாய்ப்புச் சந்தையும் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக இந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த இக்கட்டான காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குத் தேவையான கொள்கை ரீதியான ஆலோசனைகளையும், நிதி உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் இதன்போது வலியுறுத்தியுள்ளன.