ஊடக ஆளுமைகளை நோகடிக்கும் தேசிய மக்கள் சக்தி...

ஊடக ஆளுமைகளை நோகடிக்கும் தேசிய மக்கள் சக்தி...

ஊடக சுதந்திரத்தை மாத்திரமன்றி நாட்டின் சகல இன மக்களும் தங்களின் உரிமைகளை உணர்ந்து அனுபவிக்கக்கூடிய ஆட்சியை நடத்திக் காட்டுவோம் என்று மார்தட்டிக் கொண்டு ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தற்போது ஊடகவியலாளர்களை நேரடியாகவே பதம்பார்க்கத் தொடங்கியிருப்பது கேடுகெட்ட செயலாகும்.

தாங்கள் ஆட்சிக்கு வரமுன்னர், ஊடகவியலாளர்களைக் கடவுள்போல் போற்றிப் புகழ்ந்து துதிபாடிய தற்போதைய ஆட்சியார்கள், காரியம் கைகூடிய பின்னர் தங்கள் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கியுள்ளனர். அதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டை அமைச்சர் சந்திரசேகரன் செய்திருக்கிறார்.

தமிழர் பாரம்பரிய மரபுரிமைத்தலங்களைத் தொடர்ந்து அபகரித்துவரும் சிங்கள ஆட்சியாளர்கள் மத்தியில், தற்போதைய ஆட்சியாளர்கள் விதிவிலக்காக இருப்பார்கள் எனத் தமிழ் மக்கள் எதிர்பார்ந்திருந்தபோதிலும், தாங்களும் புரையோடிப் போன சிங்களப் பேரினவாதிகள்தான் என்பதைத் தேசிய மக்கள் சக்தி ஆட்சியாளர்களும் நிரூபித்திருக்கின்றனர்.

தமிழர் மரபுரிமைத்தலமாக விளங்குகின்ற வெடுக்குநாறி மலை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனால் முன்வைக்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பௌத்தசாசன அமைச்சர் சுனில் செனவி, தமிழர் நம்பிக்கைமீது மண்ணை வாரியிறைத்திருக்கிறார்.

“வெடுக்குநாறி மலையைச் சுற்றியுள்ள 229 ஏக்கர் நிலப்பகுதியும் பௌத்த சின்னங்களைச் சுமந்து காணப்படுவதால் தேசிய மரபுரிமைத் திணைக்களத்தின் சொத்தாகக் கருதி, வெகுவிரைவில் அரச வர்த்தமானி பிரசுரிக்கப்படும். வெடுக்குநாறிமலை என்பது பௌத்த எச்சங்கள் நிறைந்த பிரதேசமாகும். இப்பகுதியில் வழிபாடு என்னும் போர்வையில் தொல்பொருள் சின்னங்களைச் சிதைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்” என அடித்துவிட்டிருக்கிறார் அமைச்சர் சுனில் செனவி.

விடயம் என்னவென்றால், குறித்த செய்தியைப் பிரசுரித்த ஊடகத்தையும் அதன் ஆசிரியரையும் பெயர் குறிப்பிடத் தற்றுணிவில்லாத அமைச்சர் சந்திரசேகரன், கடுமையாகச் சாடியிருக்கிறார்.

நாடாளுமன்றுக்குள் உரையாற்றிய அமைச்சர் சுனில் செனவியின் உரையையே பொய்யெனப் புரளிவிட்டிருக்கிறார் அமைச்சர் சந்திரசேகரன்.

நாடாளுமன்றுக்குள் ஆற்றிய உரைகள் அனைத்துமே நாடாளுமன்ற ஆவணத்தில் பதியப்பட்டிருக்கும். அதனை எவரும் மாற்றமுடியாது. அப்படியிருக்கும்போது, தமிழர் மரபுரிமையைப் பறிக்கப்போகின்றோம் எனப் பறைசாற்றிய அமைச்சரின் கேடுகெட்ட செயலைச் செய்தியாக்கிய ஊடகத்தையும் அதன் ஆசிரியரையும் வசைபாடுவதென்பது ஏற்புடையதல்ல.

ஏற்கெனவே வவுனியா நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வெடுக்குநாறிமலை விவகாரத்தைப் புறந்தள்ளி வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிடப்போவதாக நாடாளுமன்றுக்குள் தெரிவித்திருக்கும் அமைச்சர் சுனில் செனவியின் செயலைக் கண்டிக்க வக்கில்லாத ஆளுங்கட்சி அமைச்சர் சந்திரசேகரன், தம் பிழையை மறைப்பதற்காக ஊடகவியலாளர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாக யாழ்ப்பாணத்தில் வைத்து, ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கிறார்.

இத்தகைய செயல், எதிர்காலத்தில் ஊடகவியலாளர்களின் தொழிலைச் சுயாதீனமாகச் செய்யவிடாமல் தடுக்கும் தற்போதைய ஆட்சியாளர்களின் அணுகுமுறையாகவே பார்க்கவேண்டிருக்கிறது.

செய்தியிடனின் சுயாதீனத் தன்மையைப் பாதிக்கும் மிரட்டல்கள் அகலப்படவேண்டியதுடன், ஊடகவியலாளர்களின் தொழிர்சார் கடமைகளைச் சரிவரச் செய்வதற்கான களச்சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதும் அரசாங்கத்தின் கடமையாகும்.

அத்தகைய ஊடகச் சுயாதீனத்துக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகரன் போன்றவர்களின் கேடுகெட்ட செயலைக் கண்டிப்பதோடு, சர்வதேச ஊடக சுதந்திரத் தன்மைக்கேற்ப இலங்கையிலும் ஊடகவியலார்கள் சுயாதீனமாகச் செயற்படும் சூழலை உறுதிசெய்யவேண்டியதும் காலத்தின் கட்டாயமாகிறது.