கடந்த ஆண்டு கனேடிய எல்லைப் பாதுகாப்புச் சாவடியை மீறி சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த அமெரிக்கப் பிரஜை ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட ராயல் கனேடிய மவுண்டட் பொலிஸ் (RCMP) அதிகாரி எவ்வித தவறும் செய்யவில்லை எனத் தெரிவித்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2025 பெப்ரவரி 4 ஆம் திகதி காலை 7:30 மணியளவில், அமெரிக்காவிலிருந்து அல்பெர்டாவின் கூட்ஸ் (Coutts) எல்லை வழியாக கறுப்பு நிற வாகனத்தில் வந்த நபர் ஒருவர், மேலதிக சோதனைக்காக நிறுத்தும்படி கோரியபோது அங்கிருந்து தப்பிச் சென்றார்.
அவர் அமெரிக்காவில் ஆயுதத் திருட்டு மற்றும் பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டுக்களுக்காகத் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொலிஸார் அவரை நிறுத்த முயன்றபோது, அவர் மணிக்கு 120 முதல் 150 கிலோமீட்டர் வேகத்தில் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக வாகனத்தைச் செலுத்தியுள்ளார்.
வாகனத்தைச் செலுத்தும்போது அவர் தனது தலையில் துப்பாக்கியை வைத்திருந்ததை பொலிஸார் அவதானித்துள்ளனர்.
பாதையில் டயர்களைச் செயலிழக்கச் செய்யும் கருவிகள் (Tire deflation devices) பயன்படுத்தப்பட்ட போதிலும், அவர் தொடர்ந்து வாகனத்தைச் செலுத்திச் சென்றுள்ளார்.
ஒரு கட்டத்தில் நெடுஞ்சாலையில் தவறான திசையில் (Northbound in southbound lanes) அதிவேகமாகச் சென்று பாரிய விபத்துக்களைத் தோற்றுவிக்க முயன்றுள்ளார்.
இறுதியில் வாகனம் ஒரு பள்ளத்தில் சிக்கியபோது, சந்தேக நபர் அங்கிருந்து ஓடத் தொடங்கியுள்ளார். அவர் ஒரு குடியிருப்பு பகுதியை நோக்கிச் சென்றதால், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி ஒரு பொலிஸ் அதிகாரி அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். எனினும், அந்தத் தோட்டாவினால் அவருக்கு காயம் ஏற்படவில்லை.
அதனைத் தொடர்ந்து, பொலிஸ் மோப்ப நாய் அவரைப் பிடித்தபோது, குறித்த நபர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
உயிரிழந்த நபரின் உடலில் கொக்கெய்ன் (Cocaine), மதுபானம் மற்றும் எல்.எஸ்.டி (LSD) போன்ற போதைப்பொருட்கள் இருந்தமை மருத்துவப் பரிசோதனையில் உறுதியானது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய அல்பெர்டாவின் தீவிர சம்பவ விசாரணைப் பிரிவு (ASIRT), புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில்:
"சம்பந்தப்பட்ட அதிகாரி பயன்படுத்திய பலப்பிரயோகம் தேவையானது, நியாயமானது மற்றும் விகிதாசாரமானது. எனவே அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க எவ்வித ஆதாரமும் இல்லை" எனத் தீர்ப்பளித்துள்ளது.