மஹிந்தவின் 8 கணக்குகளில் 93,000 கோடி ரூபாய்?

மஹிந்தவின் 8 கணக்குகளில் 93,000 கோடி ரூபாய்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சொந்தமான 8 வங்கிக் கணக்குகளில் 93,000 கோடி ரூபா பணம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை எனத் தெரிவித்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று (16) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளது.

இந்த முறைப்பாட்டை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பசந் கஸ்தூரியாரச்சி, முன்னாள் ஜனாதிபதி வரை அபாண்டமாகச் சிக்க வைப்பதற்காக அரசாங்கத் தரப்பினரால் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட போலிப் பிரசாரம் இது எனத் தெரிவித்தார்.

இவ்வாறான பொய்த் தகவல்களை மக்கள் நம்பச் செய்வதற்காக, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அல்லது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு போன்ற அரச நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி வதந்திகள் பரப்பப்படுவது பாரதூரமான விடயம் என அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த போராட்டக் காலப்பகுதியிலும் ராஜபக்ச குடும்பத்தினர் வெளிநாடுகளில் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளதாக உகண்டா மற்றும் சீஷெல்ஸ் நாடுகளைத் தொடர்புபடுத்தி வதந்திகள் பரப்பப்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார்.

கடந்த ஒன்றரை வருடங்களாக இவ்வாறான எந்தவொரு குற்றச்சாட்டையும் தற்போதைய ஆட்சியாளர்களால் நிரூபிக்க முடியவில்லை என அவர் வலியுறுத்தினார்.

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் இந்த அவதூறு பரப்பல்களுக்கு எதிராக முறையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளது.

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக முன்வைக்கப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றாக முறியடிக்கப்பட்டு வருவதால், மக்களை திசை திருப்புவதற்காக அரசாங்கம் இவ்வாறான புதிய வதந்திகளைப் பரப்பி வருவதாகவும் பசந் கஸ்தூரியாரச்சி மேலும் தெரிவித்தார்.