ஒரு பெரல் மசகு எண்ணெயை 286 டொலருக்கு கொள்வனவு செய்த இலங்கை? 

ஒரு பெரல் மசகு எண்ணெயை 286 டொலருக்கு கொள்வனவு செய்த இலங்கை? 

உலக சந்தை விலையை விடவும் மிக அதிக விலையான 286 அமெரிக்க டொலர்களுக்கு ஒரு பேரல் மசகு எண்ணெயை இலங்கை கொள்வனவு செய்துள்ளதாக 'மிடில் ஈஸ்ட் ஐ' (Middle East Eye) இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், இந்தச் செய்தியை இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனம் (CPC) முற்றாக நிராகரித்துள்ளது.

சர்ச்சைக்குரிய தகவல்:

ஹொங்கொங்கில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலீட்டாளர் மாநாடொன்றில், HSBC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜோர்ஜ் எல்ஹெட்ரி (Georges Elhedery) தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்தை மேற்கோள் காட்டி இந்தச் செய்தி வௌியாகியுள்ளது.

"மத்திய கிழக்கிலிருந்து தற்போது எண்ணெய் பெறுவதற்கு முற்பட்டால் 140 - 150 டொலர்கள் வரை செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், நான் கேள்விப்பட்டவரை இலங்கை ஒரு பேரலுக்கு 286 டொலர் என்ற உச்ச விலையைச் செலுத்தியுள்ளது" என அவர் குறிப்பிட்டதாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.

சந்த நிலவரம்: மத்திய கிழக்கு போர் ஆரம்பமாவதற்கு முன்னர் 70 - 80 டொலர்களாக இருந்த மசகு எண்ணெய் விலை, யுத்தத்தின் பின்னர் 119 டொலராக உயர்ந்து தற்போது மீண்டும் 100 டொலருக்குக் கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது.

இவ்வாறான நிலையில், இலங்கை 286 டொலர் செலுத்தியதாகக் கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் மறுப்பு:

இந்தச் செய்தி தொடர்பாக இன்று (16) மாலை விசேட அறிக்கையொன்றை வௌியிட்டுள்ள இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனம், குறித்த தகவல் முற்றிலும் அற்பத்தனமானது மற்றும் உண்மையற்றது எனத் தெரிவித்துள்ளது.

கொள்வனவு விலை:

போர்ச் சூழல் நிலவினாலும், இலங்கை தற்போது ஒரு பேரல் மசகு எண்ணெயை 71 டொலர் முதல் 113 டொலர் வரையிலான விலையிலேயே கொள்வனவு செய்து வருவதாக கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

தவறான தகவல்களைப் பரப்பி பொதுமக்களைத் திசைதிருப்ப வேண்டாம் என கூட்டுத்தாபனம் கேட்டுக்கொண்டுள்ளது.