தையிட்டி விகாரை தொடர்பில் தமிழ் மக்களைப் புறந்தள்ளும் அரசு...

தையிட்டி விகாரை தொடர்பில் தமிழ் மக்களைப் புறந்தள்ளும் அரசு...

அத்துமீறிய குடியேற்றங்கள், அதிகாரமளிக்கப்படாத கட்டுமானங்கள் என்பற்றினூடாக தமிழர் பாரம்பரிய நிலங்களையும் வளங்களையும் சூறையாடுகின்ற கைங்கரியங்களைச் சிங்களப் பேரினவாத அரசாங்கம் காலாகாலமாகச் செய்துவருகின்றமை யாவரும் அறிவர்.

இத்தகைய அத்துமீறல்கள் கடந்த ஆட்சிக் காலங்களில் துரிதமாக இடம்பெற்ற போதிலும், தற்போதைய ஆட்சியாளர்களின் காலத்தில் இவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்ற நப்பாசை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது. அந்த நம்பிக்கையிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மண்ணைவாரிப் போட்டுக்கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமானதே.

யாழ்ப்பாணத்தின் தையிட்டி விகாரைக் கட்டுமானம் தொடர்பில் பல்வேறுபட்ட சர்ச்சைகள் தொடர்கின்றன. தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவோம் என்று காட்டிக்கொண்டு, மறுபுறுத்தில் தமிழ் மக்களின் வாழ்விடங்களைக் கொள்ளைகொள்வதிலேயே தற்போதைய ஆட்சியாளர்களும் ஈடுபட்டுவருகின்றனர்.

தையிட்டி விகாரை என்பது, உயர் பாதுகாப்பு வலயத்தில் கட்டப்பட்ட அத்துமீறிய கட்டுமானமாகும். இதனைப் பாதுகாப்புத் தரப்பினரே முன்னின்று நடத்தி வைத்தனர். தற்போதும் பாதுகாப்புப் படைகளின் கண்காணிப்பிலேயே தையிட்டி விகாரை இருக்கின்றமை கண்கூடு.

நிலமை இப்படியிருக்கையில், முறைகேடான கட்டுமானங்களை அகற்றி, தமிழ் மக்களின் வாழ்விடங்களை மீளக் கையளிக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் தொடர் போராட்டங்களை மக்களுடன் சேர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்ற அரசியல் கட்சிகள் நடத்தி வருகின்றன.

இத்தகைய போராட்டங்களால் தீர்வுகாண முடியாதுபோன போதிலும், சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு இத்தகைய அத்துமீறிய கட்டுமானங்கள் தொடர்பான பாதக விடயங்கள் கொண்டுசெல்லப்பட்டிருக்கின்றன.

அதன் ஒருபடியாக, யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலயரங்கில் 'தையிட்டி: அடுத்து என்ன?' எனும் தலைப்பில் தையிட்டி காணி உரிமையாளர்களுக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், பல முக்கிய விடங்களைச் சுட்டிக்காட்டியிருந்தார்.

“தையிட்டி விகாரைப் பிரச்சினை சர்வதேச நாடுகளால் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது. இதனால், ஸ்ரீ லங்கா அமைச்சரவை அமைச்சர்கள் சிலர் வெளிநாடு செல்வதற்கு முன்னர் தையிட்டிப் பிரச்சினையைத் தீர்ப்பது போன்று காட்டிக்கொள்வதற்காக அவசர அவசரமாக காணி உரிமையாளர்களோடு கலந்துரையாடியுள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

அத்துடன், “தையிட்டிக் காணிகளை விடுவிப்பது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல. வேறு இடங்களில் காணிகளைச் சுவீகரிக்கின்ற போது எழுத்து மூலமான அறிவிப்பின் மூலமே காணிகளைச் சுவீகரிக்கிறார்கள். ஆனால் தையிட்டி விகாரைப் பிரச்சினையில் நடப்பதோ வேறு விதமாக உள்ளது.

“நில அளவைகள் திணைக்களம் எந்தக் கட்டளையின் அடிப்படையில் இந்தக் காணிகளை அளவீடு செய்வதற்குத் தயாராகின்றது? எழுத்து மூலமாகக் கட்டளைகள் எதுவும் வழங்கப்பட்டிருக்கின்றதாகத் தெரியவில்லை. அவ்வாறாயின் என்ன தேவைக்காகக் குறித்த காணிகள் அளவிடப்படுகின்றன” எனவும் காரசாரமாக் கூறியிருந்தார் கஜேந்திரன்.

கஜேந்திரனின் கருத்தில் ஆழமாக கருத்துகள் பொதிந்துள்ளன. வெளியே ஜனநாயகவாதிகள் போல் காட்டிக்கொள்ளும் தற்போதைய ஆட்சியாளர்கள், மறைமுகத்தில் சிங்களப் பேரினவாதத்தின் அடிவருடிகளாகவே இருக்கின்றார்கள் என்பதை இத்தகைய சம்பவங்கள் எடுத்தியம்புகின்றன.

ஆண்டாண்டு காலமாக நம்பி நம்பியே நாதியற்றுப்போயிருக்கும் தமிழ் மக்கள், மீண்டும் தற்போதைய அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். தமக்கான வாக்குகளைச் சேகரிப்பதற்காக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் தற்போது பின்பற்றப்படுவதில்லை. இத்தகைய சீத்துவத்தில் பௌத்த சாசனத்தைப் பகைத்துக்கொண்டு தமிழ் மக்களுக்கு அரசாங்கம் உதவும் என்று நினைப்பதுவும் முட்டாள்தனம்தான்.

ஆனாலும், இந்நாட்டில் வாழும் அனைத்தின மக்களும் சுய உரிமையுடன் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அரசாட்சியாளர்களின் கடமை. அந்தக் கடமையைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் செய்யத் தவறிவருவது திட்டமிட்ட சிங்களப் பேரினவாதத்தில் நிகழ்ச்சி நிரலாகவே பார்க்கவேண்டியுள்ளது.

சிங்கள பௌத்த பேரினவாதத்தைத் திருப்திப்படுத்துவதற்காகத் தமிழ் மக்களின் வாழ்விடங்களையும் மரபுரிமைகளையும் திட்டமிட்ட இராணுவ அதிகாரத்துடன் ஆக்கிரமிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

காலாகாலமாக சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கொத்தடிமைகளாகத் தமிழ் மக்கள் வாழவேண்டும் என்ற சிந்தனையுடனேயே அரசாட்சியார்கள் செயற்படுகிறார்கள். ஜனநாயக நாடொன்றில் இத்தகைய செயல் கண்டிக்கத்தக்கது.

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கொத்தடிமைகளாக இருக்கின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தையிட்டி விகாரை விவகாரத்திலும் பாராமுகமாகவே இருந்து வருகிறது. சிங்க மக்களை உசுப்பேற்றி, தாம் விட்ட பிழைகளை மறைப்பதற்கு முனைகிறது தற்போதைய அரசு.

இத்தகைய இழிசெயலை உடனடியாக நிறுத்தி, தமிழ் மக்களும் இந்நாட்டில் உரித்துள்ள குடிமக்கள்தான் என்பதை தற்போதைய ஆட்சியாளர்கள் ஏற்றுநடக்கவேண்டும்.

அதைவிடுத்து சிங்கள பௌத்த பேரினவாதிகளைத் திருப்திப்படுத்துவதற்காகத் தான்தோன்றித்தனமாக அரசு செயலாற்றுமாக இருந்தால், அதன் விளைவுகளையும் தற்போதைய ஆட்சியாளர்கள் சுமக்கத் தயாராக வேண்டும்.