அண்மையில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற இருபதுக்கு-20 உலகக்கிண்ணத் தொடரின் போது, கனடா அணி விளையாடிய போட்டி ஒன்றில் ஊழல் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) ஊழல் தடுப்புப் பிரிவு (ACU) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கனடா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியே தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, நியூசிலாந்து அணி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய போது, கனடா அணியின் தலைவர் டில்ப்ரீத் பஜ்வா (Dilpreet Bajwa) வீசிய 5-வது ஓவர் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
அந்த ஓவரில் அவர் நோ-போல் (No-ball) மற்றும் வைட் (Wide) பந்துகளை வீசியதுடன், 15 ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தார்.
கனடாவின் 'The Fifth Estate' எனும் புலனாய்வு ஆவணப்படம் மூலமே இந்த ஊழல் விபரங்கள் வௌிச்சத்திற்கு வந்துள்ளன.
'ஊழல், குற்றம் மற்றும் கிரிக்கெட்' (Corruption, Crime and Cricket) என்ற தலைப்பிலான இந்த ஆவணப்படம், கனடா கிரிக்கெட் சபையின் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்தும் பலத்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
முக்கிய குற்றச்சாட்டுகள்:
குறிப்பிட்ட வீரர்களை தேசிய அணிக்குத் தெரிவு செய்யுமாறு சபை உறுப்பினர்கள் தம்மை வற்புறுத்தியதாக கனடா அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர்களான குர்ரம் சோஹான் (Khurram Chohan) மற்றும் புபுது தசநாயக்க (Pubudu Dassanayake) ஆகியோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கனடா கிரிக்கெட் சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி சல்மான் கான் மீது நிதி மோசடி மற்றும் திருட்டுக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதோடு, அவர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
வீரர்களுக்கான கொடுப்பனவு: 2024 உலகக்கிண்ணப் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பரிசுத்தொகை வழங்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், ஜூலை 2025 முதல் வீரர்கள் ஒப்பந்தங்கள் இன்றி விளையாடி வருவதாகவும் அந்த ஆவணப்படம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ஐசிசி-யின் ஊழல் தடுப்புப் பிரிவின் இடைக்கால பொது மேலாளர் அன்ட்ரூ எப்கிரேவ் (Andrew Ephgrave), ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் குறித்துத் தாங்கள் அறிந்திருப்பதாகவும், கிரிக்கெட்டின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதற்கான விசாரணைகள் தொடர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கனடா கிரிக்கெட் சபைக்குள் நிலவும் இவ்வாறான ஊழல் புகார்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடனான தொடர்புகள் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.