ஒன்ராறியோவின் மார்க்கம் (Markham) பகுதியில் மூன்று அப்பாவி உயிர்களைப் பறித்த கோர விபத்து தொடர்பான வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட நபர் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தீர்ப்பு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கும் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் அளித்துள்ளது.
2022ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் திகதி, மார்க்கம் வீதி மற்றும் எல்சன் வீதிச் சந்திப்பில் இந்த விபத்து இடம்பெற்றது. சிவப்பு சமிக்ஞையை (Red Light) மீறிச் சென்ற ஒரு கனரக மண் ஏற்றிச் செல்லும் வாகனம் (Dump Truck), ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்த கார் மீது மோதியது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்:
பதீரன் புவனேந்திரன் (21 வயது) - சம்பவ இடத்திலேயே பலி.
நெலுக்ஷனா புவனேந்திரன் (23 வயது) - சம்பவ இடத்திலேயே பலி.
ஸ்ரீரதி சண்முகநாதன் (52 வயது - தாய்) - படுகாயமடைந்து பின்னர் சிகிச்சை பலனின்றி பலி.
இந்த அனர்த்தத்தினால் ஒரு தந்தையும் மகனும் தமது முழுமையான குடும்பத்தையும் இழந்தனர்.
இந்த விபத்தில் Vaughan நகரை சேர்ந்த பார ஊர்தி ஓட்டுநர் 46 வயதான Anthony BAGLIERI மீது குற்றச் சாட்டுகள் பதிவாகின.
2022இல் நிகழ்ந்த இந்த விபத்துக்கான நீதித்துறை விசாரணை Newmarket நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
March 2 ஆரம்பித்த இந்த வழக்கு விசாரணை March 9 முடிவடைந்த நிலையில் வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வெள்ளிக்கிழமை (17) வழங்கப்பட்டது.
நீதிமன்றத் தீர்ப்பு - ஏப்ரல் 17, 2026:
பல வருடங்களாக இழுபறியில் இருந்த இந்த வழக்கு, 2026இல் நீதிபதியால் மாத்திரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அனைத்துச் சாட்சியங்களையும் ஆராய்ந்த நீதிமன்றம், குற்றம் சுமத்தப்பட்டவர் மீது குற்றவியல் பொறுப்பை (Criminal Liability) உறுதிப்படுத்த போதிய சட்ட ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, அவரை விடுவித்துள்ளது.
"சிவப்பு விளக்கை மீறிச் சென்று மூன்று உயிர்கள் பறிபோகக் காரணமான ஒருவருக்கு, சட்டப்படி எந்தத் தண்டனையும் வழங்கப்படாமல் போனது எப்படி?" என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது. இது சட்ட அமைப்பின் மீதான நம்பிக்கையைத் தகர்ப்பதாகவும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமைக்கான (Careless Driving) தண்டனை கூட வழங்கப்படாமை குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து அரச தரப்பு (Crown) மேன்முறையீடு செய்ய வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் சமூகமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயிரிழந்த பதீரன், நெலுக்ஷனா மற்றும் ஸ்ரீரதி ஆகியோருக்காக நீதி கோரும் போராட்டம் ஓயாது எனவும், பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படும் வரை குரல்கள் ஓயாது எனவும் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றது.
நீதிமன்றத் தீர்ப்பு முடிவல்ல, நீதிக்கான போராட்டத்தின் அடுத்த கட்டம் இங்கிருந்து ஆரம்பமாவதாகப் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட தீர்ப்பு வழங்கப்படும் தினத்தில் தமிழர்களை நீதிமன்றில் பிரசன்னமாகுமாறு தனது குடும்பத்தை இழந்த பூபலசிங்கம் புவனேந்திரன் பகிரங்க அழைப்பு விடுத்திருந்தார்.
குறிப்பிட்ட வழக்கின் நீதிமன்ற விசாரணையின் போதும் தமிழர்கள் சிலர் அங்கு நேரடியாக கலந்து கொண்ட நிலையில், இன்றைய இறுதித் தீர்ப்பின் போதும், பெருமளவான தமிழர்கள் நீதிமன்றத்துக்கு அருகில் கூடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி போராட்டம் நடத்தினர்.
[playlist type="video" ids="9920"]
[gallery columns="1" size="large" ids="9915,9914,9913,9912,9911,9910,9909,9908,9907,9905,9906,9904,9903,9902"]