தமிழ்த் தேசியப் பரப்பில் தமிழரசுக் கட்சியும் அதன் வகிபாகமும் தவிர்க்க முடியாதவொன்றாக இருப்பதை யாவரும் ஏற்றுக்கொள்வர். தமிழர் வரலாற்றில் மிக உன்னதமான தருணத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தலைமை தாங்கும் கட்சியாகவே இலங்கைத் தமிழரசுக் கட்சி விளங்குகிறது. ஆனந்த சங்கரி ஐயாவுடனான முறுகலைத் தொடர்ந்து, தமிழரசுக் கட்சியின் சின்னத்துடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்து வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில், தலைமைத்துவப் போட்டி காரணமாக சிறிதரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான பனிப்போர், முழு அளவிலான தமிழ்த் தேசிய அரசியல் பரப்பையும் கேள்விக்குள்ளாகியிருப்பது துரதிர்ஷ்டவசமானது.
மாவை சேனாதிராஜாவின் காலத்தில் புரையோடிப்போன இத்தகைய தலைமைத்துவப் போட்டி, காலங்கடந்தும் பயணிப்பது, தமிழர் அரசியலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதைக் காலம் எமக்குக் காட்டித் தந்திருக்கிறது.
தலைமைத்துவப் போட்டியின் இழுபறியால் பறிபோனதென்னவோ தமிழர் தாயகத்தின் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதித்துவம்தான். அதன் பாதகத் தன்மையை இன்னமும் தமிழினம் அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில், தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்கத் தொடங்கியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. திருகோணமலை மறைமாவட்ட அருட்தந்தையின் தலைமையில் ஒன்றுகூடிய மதத் தலைவர்களும் இத்தகைய தமிழர் ஒற்றுமையை வலியுறுத்தியிருந்தார்கள். ஆனாலும், புறச் சூழல்களின் வகிபாகத்தால் எதுவும் கைகூடும் சூழ்நிலை ஏற்படவில்லை என்பது காலத்தின் பிழையாகவிருக்கிறது.
நிலமை இவ்வாறிருக்கையில், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தனியாவர்த்தனம் வாசித்துக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஒன்றிணைந்து தமிழர் அரசியற்பரப்பில் பயணிப்பது தொடர்பான கருத்தாடல்கள் இடம்பெறத் தொடங்கியிருக்கின்றன.
இப்பேச்சு சாத்தியமாகுமாக இருந்தால், வலுவிழந்து போயிருக்கும் தமிழர் அரசியல் பாதை திறம்படப் பிரகாசிக்கும் என்பதை எதிர்வுகூரலாம். ஆனாலும், இத்தகைய முயற்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் முட்டுக்கட்டை போட்டிருக்கிறார்.
“ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய கட்சிகள் ஏற்கெனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்தவர்கள். எனினும், இதில் அங்கம் வகிக்கக்கூடிய மற்றுமொரு கட்சியானது சிங்களக் கட்சிகளோடு இணைந்து தமிழர் தேசத்தையும் மக்களையும் காட்டிக் கொடுத்து, தமிழ்த் தேசியத்தைச் சிதைத்து, இப்போது தமிழ்த் தேசியம் பேசினால்தான் மக்களுடைய வாக்குகளைக் கவரலாம் என வருபவர்களை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம்.
“அந்தக் கட்சியோடு இணைந்து எந்தவொரு தேர்தலிலும் பங்குபற்றக் கூடிய சூழ்நிலை கிளிநொச்சியில் இருக்காது. யாழ்ப்பாணத்தில் யாரேனும் சேர்ந்து தேர்தலிலே போட்டியிட்டால் அது அவர்களைப் பொறுத்தது. சந்திரகுமார் அணியோடு இணைந்து அரசியலிலே செயற்பட முடியாது என்பதை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலும் நான் வெளிப்படையாகக் கூறியிருந்தேன். எங்கள் கட்சியினுடைய தலைவருக்கும் ஏனையவர்களுக்கும் இதனை தெளிவாகக் கூறியிருக்கின்றேன்.
“வவுனியாவில் உள்ளூராட்சி சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சிறீடெலோவோடு இணைந்து செயற்படுவது தொடர்பில் எனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தேன். இவர்களால் தமிழரசுக் கட்சிக்கு ஆபத்து வரும் என்பதையும் எதிர்வு கூறியிருந்தேன். இன்று சிறீடெலோ கட்சியின் தலைவர் எதற்காகக் கைது செய்யப்பட்டிருக்கின்றார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
“இதேபோன்று சந்திரகுமாரும், இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் எவரும் இறக்கவில்லை, இறந்தவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளே எனக் கிளிநொச்சியில் போராட்டம் நடத்தியவர். பல பாடசாலைகளில் இருந்த அதிபர்களை வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்தவர். தமிழ்த் தேசியத்துக்கு எதிராகவே தனது பயணத்தை மேற்கொண்டவர். இன்று தமிழ்த் தேசியமே கதியென அவர் வந்திருக்கின்றார். இவ்வளவு காலமும் இவர்கள் செய்தது சரியா என்பதை மக்கள் முடிவு எடுக்க வேண்டும்” என சிறிதரன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழர் அரசியலில் சிறிதரன் கூறுவது சரிதான். ஆனாலும், தற்போது அவர் குறிப்பிடுகின்ற புளெட் அமைப்பும் 2011ஆம் ஆண்டின் பின்னர்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்கத் தொடங்கியது. அதன் முன்னர், சிங்கள இராணுவத்தின் எடுபிடிகளாகத்தான் சித்தார்த்தன் தலைமையிலான புளெட் அமைப்பு செயற்பட்டதென்பதை யாவரும் அறிவர்.
ஆனாலும், தமது போக்கை மாற்றிக்கொண்டு தற்போது தமிழர் நலன்சார்ந்து அவர்கள் பயணிப்பதை நாம் அவதானிக்கக் கூடியதாகவிருக்கிறது. அவ்வாறானதொரு மனோநிலை, சந்திரகுமார் அணியினருக்கும் வரலாம். அப்படி வருமாக இருந்தால், தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை மேலும் பலம்பெறக்கூடிய சாத்தியக்கூறுகளே அதிகமாகக் காணப்படுகிறது.
ஆகையால், தமிழ்த் தேசிய அரசியற்பரப்பின் நன்மை கருதி, தனது பிடிவாதத்தை சிறிதரன் விட்டுக்கொடுக்க வேண்டும். மக்கள் தீர்ப்புத்தான் இறுதியானது. ஆகையால், வாக்குப் பலத்தை மக்கள் நிரூபிப்பார்கள். உங்களின் ஒற்றுமையை நீங்கள் நிரூபியுங்கள். அவ்வாறில்லாமல் பிடிவாதமாகச் செயற்படுவதென்பது தமிழர் அரசியற்பரப்பில் வரலாற்றுப் பிழைக்கே வித்திடும் என்பதைச் சிறிதரன் போன்றவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.