எழுத்தாளர் தீபச்செல்வன், கலந்துரையாடல் ஒன்றிற்காகத் தன்னை ஏப்ரல் 17ஆம் திகதி கொழும்புக்கு வருமாறு அழைத்துள்ளதாக கடந்த 10ஆம் திகதி தெரிவித்திருந்தார். இது எவ்வித சட்டபூர்வமான அழைப்பும் அல்ல என்பதோடு, அதில் கலந்துகொள்ளவேண்டிய அவசியமும் அவருக்கு இருக்கவில்லை. இருப்பினும், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புத்தசாசன மற்றும் கலாசார விவகார அமைச்சர் தனிப்பட்ட ரீதியில் எழுத்தாளரைத் தொடர்புகொண்டு இதில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒரு குழுவின் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டு, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டால், சுங்கத் திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள எழுத்தாளர் தீபச்செல்வன் பிரதீபனின் நூல்கள் விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து எழுந்த பல அடிப்படைச் சிக்கல்கள் குறித்து வினவிய போதிலும், அமைச்சரோ அல்லது முன்னாள் போராட்டக்காரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலக்கியத் துணைக்குழுக்களோ எதற்கும் பதிலளிக்க முன்வரவில்லை.
இவ்வாறான நிலையில், நேற்று (17ஆம் திகதி) கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு அழைக்கப்பட்ட தீபச்செல்வனுக்கு அந்தப் பயணத்தால் எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை. பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின் பேரிலேயே நூல்கள் விடுவிக்கப்படும் எனக் கூறி அவர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். தனிப்பட்ட ரீதியில் அழைத்து கொழும்புக்கு வருமாறு கூறிய அமைச்சரும், கலந்துரையாடல் நடந்துகொண்டிருக்கும் போதே, இடையில் வெளியேறியுள்ளார்.
இதற்கிடையில், கடந்த காலங்களில் பெரும் போராட்டவாதிகளாகக் காட்டிக்கொண்ட கமல் பெரேரா போன்றவர்கள், சமூக ஊடகங்களில் இது குறித்து எழுதுவது பற்றி ஆவேசமாக கருத்துத் தெரிவித்துள்ளதாக அறியமுடிகிறது. ஒரு போலி கற்பனாவாத இலக்கியப் பேராசிரியர் இது குறித்து தற்பெருமையான வாக்கியம் ஒன்றைக் கூறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) கருத்துச் சுதந்திரம் தொடர்பான கடந்த காலத் தலையீடுகள் குறித்துப் பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஏனெனில், சக்தித சத்குமார ஒரு சிறுகதைக்காகச் சிறையில் அடைக்கப்பட்டபோது, பாராளுமன்றத்தில் அது குறித்து ஒரு அறிக்கையைத்தானும் வெளியிட முடியாத அளவுக்கு அவர்கள் தமது தீனத் தன்மையைக் (இயலாமையை) வெளிப்படுத்தியிருந்தனர்.
இருப்பினும், தேசிய மக்கள் சக்தியாக (NPP) ஒரு முன்னணியில் ஒன்றிணைந்த இந்த 'முற்போக்குக் கூட்டம்' தற்போது நடந்துகொள்ளும் விதத்தைப் பார்க்கும்போது, 20ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு தத்துவஞானியான ஜூலியன் பெண்டா (Julien Benda) எழுதிய 'புத்திஜீவிகளின் துரோகம்' (The Treason of the Intellectuals) என்ற நூலே நினைவுக்கு வருகிறது.
தேர்தல் கூத்துகளுக்கு முன்னரே, கலைஞர்கள் ஓர் அரசியல் கட்சிக்குச் சார்பாக இருப்பதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும், அதன் மூலம் அவர்கள் விமர்சிக்கும் அதிகாரத்தை இழப்பார்கள் என்பது பொதுப்படையான உண்மை. இப்போது நடந்திருப்பது அதுவல்லவா? அவர்கள் அங்கேயே நின்றுவிடாமல், தமது தார்மீகப் பொறுப்பைத் துறந்து அரசியல் சார்பையே தெரிவு செய்துள்ளனர்.
இந்த போலி முற்போக்கு இலக்கியவாதிகள், "மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது" போன்ற போலித்தனமான அனுதாப வார்த்தைகளைக் கூறாமல், நேரடியான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. எதிர்காலத்தில் ஒரு நாள், உங்களுடைய இந்த 'நிலைப்பாடு மாற்றங்கள்' (Positional SHIFT) மற்றும் செயற்பாடுகள் குறித்து விவாதங்கள் எழும்.
எந்தவொரு விடயத்திலும் இந்த அரசாங்கத்திற்கு நேரடியான கொள்கை எதுவும் இல்லை. இடதுசாரி வேடத்தைப் பாதுகாத்துக்கொண்டு, நவீன தாராளமயப் (Neoliberal) பாதையில் குதித்து ஓடும்போது, உண்மையான நவீன தாராளவாதிகள் எதிர்கொண்டதை விடவும் பாரிய பிரச்சினைகளை இவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஏனெனில், நவீன தாராளமயக் கொள்கையின்படி செயற்பட்டவர்களுக்குப் பாதுகாப்பதற்கு எவ்வித முகமூடிகளும் இருக்கவில்லை.
ஒரு நூல் மக்கள் மயப்படுத்தப்படுவதற்கு முன்னரே, அதனைப் பாதுகாப்பு அச்சுறுத்தல் என முத்திரை குத்துவது கருத்துச் சுதந்திரத்தை மிக மோசமாக மீறும் செயலாகும். இதற்கு முன்னர் நூல் வெளியான பின்னரே தணிக்கை செய்ய முயற்சிப்பதைக் கண்டிருக்கிறோம். ஆனால், இது அதையும் தாண்டிய ஒடுக்குமுறையாகும்.
தீபச்செல்வன் ஒரு தமிழ் எழுத்தாளராகத் தனது கருத்துக்களை வெளிப்படுத்தும் தளம் எத்தகையது என்பதை நாம் அறிவோம். இந்தத் தணிக்கை என்பது வெறும் கருத்துச் சுதந்திரம் தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல. இது, தமிழ் மக்கள் மீது திணிக்கப்படும் பேரினவாதத்தின் ஒரு பகுதியுமாகும். "லப்பையாலாவது அடித்துத் துரத்துங்கள்" (லබ්බෙන් හරි ගහන්න) எனக் கூறிய ஒரு கட்சியிடமிருந்து தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்த்தவர்களைப் பார்த்து எமக்கு எள்ளல் கலந்த சிரிப்புதான் வருகின்றது.
