திசைகாட்டி அரசாங்கத்துக்கு எதிரான இறுதித் தீர்ப்பில் மக்கள் கையெழுத்திடும் காலம் கனிந்துவிட்டது!

திசைகாட்டி அரசாங்கத்துக்கு எதிரான இறுதித் தீர்ப்பில் மக்கள் கையெழுத்திடும் காலம் கனிந்துவிட்டது!

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அந்த அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர், தமது பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

நிலக்கரி இறக்குமதி நடைமுறைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளை சுயாதீனமாகவும் பக்கச்சார்பின்றியும் முன்னெடுப்பதற்கு இடமளிக்கும் வகையிலேயே தாம் இராஜினாமா செய்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம் சொல்லப்படும் செய்தி என்னவென்றால், அவர்கள் அந்தப் பதவிகளில் இருக்கும் வரை ஒரு விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவோ அல்லது சுயாதீன விசாரணையோ இடம்பெற வாய்ப்பில்லை என்பதுதானா?

தமது கட்சியின் உறுப்பினர்கள் அல்லது செயற்பாட்டாளர்கள் கனவிலும்கூட ஊழல், மோசடிகளில் ஈடுபட மாட்டார்கள் என ஜே.வி.பி/திசைகாட்டி தலைவர் அநுர குமார திஸாநாயக்க மக்களுக்கு வழங்கிய உத்தரவாதத்துக்காகவே இந்த அரசாங்கம் ஆட்சிக்குக் கொண்டுவரப்பட்டது.

ஆனால், நான்கு மாதங்கள் முடிவடைவதற்குள் சில முக்கிய சந்தேகங்கள் எழுந்துள்ளன:

சுங்கத் திணைக்கள சர்ச்சை: விசேட சுங்கச் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியிருந்த 323 கொள்கலன்கள் (Containers), 2025 ஜனவரி 18 அன்று திடீரென விடுவிக்கப்பட்டன. இது குறித்து ஆராய ஜனாதிபதி அநுர குமாரவின் பரிந்துரையின் பேரில் ஜனவரி 30 அன்று நியமிக்கப்பட்ட நால்வர் கொண்ட குழுவின் சுயாதீனம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன. அந்த அறிக்கை பாராளுமன்ற விவாதத்திற்குக்கூட எடுத்துக்கொள்ளப்படவில்லை.

நிலக்கரி மோசடி: நிலக்கரி கொள்வனவு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் இந்தச் சம்பவத்திற்கு சுமார் 10 மாதங்களுக்குப் பின்னரே முன்வைக்கப்பட்டுள்ளன.

தாம் 'தூய்மையானவர்கள்' என்று கூறிக்கொண்ட ஒரு தரப்பினர் ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திற்குள், இவ்வளவு பாரிய விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஊழல்களுக்கு மத்தியில் மேலும் பல மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக சமூகத்தின் பல இடங்களிலிருந்து இப்போது செய்திகள் வரத் தொடங்கியுள்ளன. ஜே.வி.பி/திசைகாட்டி அரசாங்கம் என்பது பிறப்பிலேயே ஊழல் மரபணுவைக் கொண்ட (Genetically Corrupt) ஓர் அரசாங்கம் என்றே சில அரசியல் ஆய்வாளர்கள் கூறிவந்தனர். கடந்தகால அரசாங்கங்களில் அரசியல்வாதிகள் அமைச்சர்களாகப் பதவியேற்ற பின்னரே ஊழல்களில் ஈடுபட்டனர். ஆனால், இந்த அரசாங்கத்திலோ, நிஜமாகவே ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமந்தவர்களே அமைச்சர்களாகப் பதவியமர்த்தப்பட்டனர்.

வசந்த சமரசிங்க, மஹிந்த ஜயசிங்க, ரஞ்சன் ஜயலால் ஆகியோருக்கு திசைகாட்டி கட்சியிலிருந்து வேட்புமனுக்கள் வழங்கப்பட்டபோது, போலி ஆவணங்கள் மூலம் மற்றுமொருவரின் கட்டிடத்தை அடமானம் வைத்ததாகக் கூறப்படும் புகார் குறித்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசாரணை அறிக்கை கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அதேபோல், அரசாங்க உரக் கூட்டுத்தாபனத்தில் 8.8 மில்லியன் ரூபாய் கொள்வனவு மோசடி ஒன்றுக்காக வேலையை இழந்த ஒரு குற்றவாளியாக இருந்தபோதே,திசைகாட்டியின் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக குமார ஜயகொடி நியமிக்கப்பட்டார். அவரை எம்.பியாக்கி, பின்னர் நாட்டின் மிகப்பெரிய கொள்வனவுகள் இடம்பெறும் எரிசக்தி அமைச்சும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டது. கட்சியில் உள்ள மற்ற அனைவரையும்விட அவரைப் பற்றி நன்கு அறிந்த ஜனாதிபதி அநுர குமாரவே இதனைச் செய்தார்.

இதுவரை இந்நாட்டின் மிகப்பெரிய ஊழலாகக் பேசப்படும் தரமற்ற நிலக்கரி இறக்குமதியின் மூலம், முதல் 11 கப்பல் தொகுதிகளிலிருந்தே அரசாங்கத்துக்கு 8 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதுபோன்ற மேலும் 14 கப்பல்கள் அடுத்த சில மாதங்களில் வரவுள்ளன.

பாராளுமன்றத்திலும் சரி, வெளியேயும் சரி, திசைகாட்டி அமைச்சர்கள் அனைவரும் ஜனாதிபதி சொன்ன கதையையே நிலக்கரி கொள்வனவு தொடர்பாகவும் கூறி வந்தனர். ஓர் ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதி கூறுகையில், எந்தவோர் ஆவணத்தையும் அறிக்கையையும் தான் ஆவேசப்படாமல், மிகவும் கவனமாக பகுப்பாய்வு செய்து வாசித்தேன் என்றும், எதிலும் கொள்வனவு மோசடி நடந்ததாகக் கூறப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

எனவே, அவரது முடிவு என்னவென்றால், "மிகவும் நம்பிக்கையுடன் நான் கூறுகிறேன்" என்று கூறி, எந்தத் தவறும் செய்யாத ஓர் அமைச்சரை நீக்கத் தான் தயாரில்லை என்று அப்போது ஜனாதிபதி சவால் விட்டிருந்தார்.

அரசாங்க கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை விடவும் ஜனாதிபதியின் கூற்றையே பெரிதும் நம்பிய திசைகாட்டி அரசாங்கத்தின் அமைச்சர்களும் எம்.பிக்களும், எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான பாராளுமன்ற நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது, அவர் மிகவும் தூய்மையானவர் என்றும் தேர்தல் காலத்தில் அநுர குமார கூறியது போல "கனவிலும் ஊழல் மோசடிகளில் ஈடுபடாத" ஓர் உறுப்பினர் என்றும் வாதிட்டனர்.

அவர்களின் 159 பாராளுமன்ற உறுப்பினர்களில் 153 பேர் அமைச்சர் ஜயகொடிக்கு ஆதரவாக வாக்களித்தனர். இது சிங்கள - தமிழ் புத்தாண்டுக்கு நான்கு நாட்களுக்கு முன்னர், அதாவது கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி இடம்பெற்றது.

அதற்கடுத்த ஒரு வாரத்தில், நேன்று ஏப்ரல் 17ஆம் திகதியன்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஒரு செய்தியை வெளியிட்டார்.

மின்சார உற்பத்திக்காக நிலக்கரி பயன்படுத்தத் தொடங்கிய காலம் முதல் இந்த ஆண்டு இம்மாதம் 16 ஆம் திகதி வரையான நிலக்கரி கொள்வனவுகள் குறித்து விசாரணை செய்ய ஜனாதிபதியால் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

உயர் நீதிமன்ற நீதியரசர் கிஹான் குலதுங்க தலைமையில், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஆதித்ய பட்டபெந்திகே மற்றும் மேல் நீதிமன்ற நீதியரசர் சஞ்ஜீவ சோமரத்ன ஆகியோரைக் கொண்ட இந்த ஆணைக்குழு, பொதுமக்களின் சாட்சியங்களைப் பெற்றுக்கொள்ளவும் திறந்திருக்கும் என்று அமைச்சர் ஹேரத் தெரிவித்தார்.

தற்போதைய ஆட்சியில் இருக்கும் ஓர் அமைச்சரையே இலக்கு வைக்கும் இத்தகைய ஊழல் விசாரணைகளுக்காக, சேவையிலுள்ள நீதியரசர்களை ஆணைக்குழுக்களில் நியமிக்கும் போது அரசியல் சமரசங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதா என்ற சந்தேகம் சமூகத்தில் எழக்கூடும்.

எனினும், இங்கு ஆச்சரியப்படுத்தியது என்னவென்றால், "சுயாதீனமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைக்கு இடமளிப்பதற்காகவே" அமைச்சர் ஜயகொடியும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஹேமபாலவும் பதவி விலகியதாகக் குறிப்பிடப்பட்ட விடயமாகும்.

இவர்கள் பதவியில் இருப்பது, உயர் நீதிமன்ற, மேன்முறையீட்டு நீதிமன்ற மற்றும் மேல் நீதிமன்ற நீதியரசர்களைக் கொண்ட ஒரு குழுவின் விசாரணையில் செல்வாக்குச் செலுத்தக்கூடும் என்று சொல்லப்படுவது, ஜனாதிபதி அநுர குமாரவின் திசைகாட்டி அரசாங்கம் குறித்த ஒரு புதிய சான்றிதழாகும் (ஒப்புதல் வாக்குமூலமாகும்).

அதேநேரம், திசைகாட்டி அரசாங்கத்தின் கூச்சலிடும் பாதுகாவலர்கள் ஒரே வாரத்துக்குள் சிக்கியுள்ள இக்கட்டான நிலை மிகவும் வேடிக்கையானது. ஒரு வாரத்துக்கு முன்னர், அரசாங்க கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையையும் ஏற்க மறுத்து, அமைச்சர் தூய்மையானவர் என வாதிட்டு, அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஆனால், அதே அமைச்சரின் நடத்தையை ஆராய உயர்மட்ட ஆணைக்குழு நியமிக்கப்பட்டவுடன், அதன் விசாரணைகளுக்குத் தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக அமைச்சரும் அமைச்சின் செயலாளரும் இராஜினாமா செய்துள்ளனர். இப்போது அவருக்காகப் பாராளுமன்றத்தில் வாக்களித்த 153 எம்.பிக்களின் நிலை என்ன? அவர்கள் மீண்டும் ஒருமுறை பொய்யர்களாகிவிட்டனர் என்பதுதானே இதன் அர்த்தம்?

தேர்தல் வரை ஊழல் மோசடிகளற்ற அரசாங்கம் என சத்தியம் செய்த திசைகாட்டி அரசாங்கத்தின் இப்போதைய நிலை என்ன? நிலக்கரி கொள்வனவு ஊழல் விசாரிக்கப்படும் அதேவேளை, அரசாங்கத் தலைவர்களின் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்கள் பகிரங்கமாகத் தோண்டித் துருவப்படும் போது, அவர்களின் ஊழல் நிர்வாணத்தை மறைக்க மேலும் பல ஆணைக்குழுக்களை நியமிக்க ஜனாதிபதி அநுர குமாரவுக்கு கால அவகாசம் வழங்க திசைகாட்டி உறுப்பினர்கள் அல்ல, ஜே.வி.பி செயற்பாட்டாளர்கள் கூட "பாட்டாளி வர்க்கத்திற்காக" முன்வருவார்களா என்பது பெரும் சந்தேகமே. ஏனெனில், அவர்களுக்கு எதிரான இறுதித் தீர்ப்பில் மக்கள் கையெழுத்திடும் காலம் இப்போது வந்துவிட்டது.