ஜயகொடியின் இராஜினாமாவை வரவேற்கும் சுமந்திரன்!

ஜயகொடியின் இராஜினாமாவை வரவேற்கும் சுமந்திரன்!

தரமற்ற நிலக்கரி கொள்வனவு மோசடி தொடர்பாக எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தானாக முன்வந்து பதவியை இராஜினாமா செய்துள்ளமையை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வரவேற்றுள்ளார்.

இருப்பினும், அவரைப் பாதுகாப்பதற்காகவும், அவரது பதவியைத் தக்கவைப்பதற்காகவும் வாக்களித்த அரசாங்கம் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) பாராளுமன்ற உறுப்பினர்களை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரமற்றது என்பதை அரசாங்கமே ஒப்புக்கொண்ட போதிலும், அரசாங்கமும் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களும் அவரைத் தொடர்ந்து பாதுகாத்து வந்தமை ஏற்றுக்கொள்ள முடியாதது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது 'X' பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

"அமைச்சரின் இராஜினாமா பாராட்டப்பட வேண்டியது; ஆனால் அதேவேளையில், நிலக்கரி தரமற்றது என அரசாங்கமே ஒப்புக்கொண்ட பின்னரும், அவரைப் பாதுகாத்ததற்கும் அவர் அமைச்சராக நீடிக்க வேண்டும் என வாக்களித்ததற்கும் அரசாங்கமும் தேசிய மக்கள் சக்தி எம்.பி.க்களும் கண்டிக்கப்பட வேண்டும்," என அவர் தெரிவித்துள்ளார்.

லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) மற்றொரு வழக்கில் ஜயகொடிக்கு எதிராகக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டிய சுமந்திரன், ஆட்சியில் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தினார்.

தரமற்ற நிலக்கரி கொள்வனவு தொடர்பாக புதிதாக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளை வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுப்பதை உறுதிப்படுத்தும் வகையில், எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி நேற்று (17) தனது பதவியை இராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.