UFO ஆய்வில் 'சுவாரஸ்யமான' ஆவணங்கள் கண்டெடுப்பு; டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

UFO ஆய்வில் 'சுவாரஸ்யமான' ஆவணங்கள் கண்டெடுப்பு; டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்கள் (UFO) தொடர்பாகத் தனது நிர்வாகம் மேற்கொண்ட ஆய்வில் பல "சுவாரஸ்யமான" ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் முதற்கட்டத் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்து: 'Turning Point USA' என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் ஆதரவாளர்களிடையே உரையாற்றிய ட்ரம்ப், "நாங்கள் பல சுவாரஸ்யமான ஆவணங்களைக் கண்டறிந்துள்ளோம். அவற்றின் முதல் தொகுப்பு மிக மிக விரைவில் வெளியிடப்படும். அதன் மூலம் இந்தச் சம்பவங்கள் உண்மையா என்பதை நீங்களே பார்த்துக்கொள்ளலாம்," எனக் குறிப்பிட்டார்.

UFOக்கள் மற்றும் வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பான அரசாங்கக் கோப்புகளை வெளியிடுமாறு கடந்த பிப்ரவரி மாதம் ட்ரம்ப் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, வேற்றுக்கிரக வாசிகள் "உண்மையானவர்கள்" என்று ஒரு நேர்காணலில் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, அவர் இரகசியத் தகவல்களைத் தவறாகப் பகிர்ந்து கொண்டதாகக் குற்றம் சாட்டியே ட்ரம்ப் இந்த ஆய்வுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், தனது பதவிக்காலத்தில் வேற்றுக்கிரக வாசிகள் இருப்பதற்கான ஆதாரங்களை தான் பார்க்கவில்லை என்றும், ஆனால் பிரபஞ்சத்தின் மற்ற பகுதிகளில் உயிர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்றும் ஒபாமா விளக்கமளித்திருந்தார்.

வேற்றுக்கிரக வாசிகள் இருப்பதற்கான ஆதாரங்களை தான் இன்னும் பார்க்கவில்லை என்றும், அவர்களின் இருப்பு குறித்து தனக்கு இன்னும் சந்தேகம் இருப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இதற்கிடையில், பெண்டகன் (Pentagon) கடந்த 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் வெளியிட்ட அறிக்கைகளில், வேற்றுக்கிரக வாசிகள் பூமிக்கு வந்ததற்கோ அல்லது அவர்களின் தொழில்நுட்பங்கள் கண்டறியப்பட்டதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்றும், UFO எனப் பார்க்கப்பட்டவை பெரும்பாலும் சாதாரண பொருட்களே என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.