ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் மீதான தாக்குதல்: இந்தியா கடும் அதிருப்தி!

ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் மீதான தாக்குதல்: இந்தியா கடும் அதிருப்தி!

ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) இந்தியக் கொடியுடன் பயணித்த இரண்டு வர்த்தகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் குறித்து, ஈரான் அரசாங்கத்திடம் இந்தியா தனது கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து விளக்கம் கோருவதற்காக புதுடில்லியில் உள்ள ஈரான் தூதுவர் நேற்று (18) மாலை இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்திய வெளிவிவகாரச் செயலாளருக்கும் ஈரான் தூதுவருக்கும் இடையில் இதன்போது விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.

வர்த்தகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்புக்கு இந்தியா வழங்கும் முன்னுரிமையை வெளிவிவகாரச் செயலாளர் இதன்போது வலியுறுத்தினார்.

இந்தியா நோக்கி வரும் கப்பல்களின் பாதுகாப்பான பயணத்திற்காக ஈரான் இதற்கு முன்னர் வழங்கிய ஒத்துழைப்புகளை அவர் நினைவு கூர்ந்தார்.

வர்த்தகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது ஒரு பாரதூரமான நிலைமை எனச் சுட்டிக்காட்டிய வெளிவிவகாரச் செயலாளர், இது குறித்த இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை உடனடியாக ஈரான் அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு தூதுவரிடம் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், ஹோர்முஸ் நீரிணை ஊடாக இந்தியா நோக்கி வரும் கப்பல்களின் போக்குவரத்துக்குத் தேவையான வசதிகளை மிக விரைவில் மீண்டும் ஆரம்பிக்குமாறும் இந்தியா ஈரானிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய அரசாங்கத்தின் இந்த விடயங்கள் குறித்து தனது நாட்டின் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஈரான் தூதுவர் இதன்போது உறுதியளித்தார்.