ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) வர்த்தகக் கப்பல்களுக்காக மீண்டும் மூடுவதாகவும், அதனை நெருங்கும் எந்தவொரு கப்பலும் இலக்கு வைக்கப்படும் என்றும் ஈரான் அறிவித்துள்ளது.
சனிக்கிழமையன்று ஒரு எண்ணெய் தாங்கிக் கப்பல் உட்பட, இந்த நீரிணைக்கு அருகாமையில் இருந்த பல கப்பல்கள் ஈரானியப் படைகளால் இலக்கு வைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இந்த மூடல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முக்கியமான இந்த சர்வதேச கப்பல் போக்குவரத்துப் பாதை தற்காலிகமாகத் திறக்கப்படுவதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அறிவித்த அடுத்த நாளே, ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) இந்த மூடல் முடிவை எடுத்துள்ளது.
அமெரிக்கா முன்னெடுத்து வரும் ஈரானிய துறைமுக முற்றுகையே இந்த முடிவுக்குக் காரணம் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கருத்துத் தெரிவிக்கையில், நீரிணை தொடர்பான அச்சுறுத்தல்கள் மூலம் ஈரானால் அமெரிக்காவை "மிரட்ட" (Blackmail) முடியாது என்று கூறியுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக ஈரான் இந்த நீரிணையை முடக்கியுள்ளதால், உலகளாவிய எரிசக்தி விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன.
"பாரசீக வளைகுடா அல்லது ஓமான் கடலில் உள்ள எந்தவொரு கப்பலும் தனது நங்கூரத்திலிருந்து (Anchorage) நகரக்கூடாது" என ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை சனிக்கிழமை விடுத்த அறிக்கையில் எச்சரித்துள்ளது.
"ஹோர்முஸ் நீரிணையை நெருங்குவது எதிரிக்கு ஒத்துழைப்பதாகக் கருதப்படும், மேலும் விதிமீறும் கப்பல்கள் இலக்கு வைக்கப்படும்" என்றும் அது மேலும் கூறியுள்ளது.
அமைதி ஒப்பந்தம் ஒன்று எட்டப்படும் வரை ஈரானிய துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகை தொடரும் என அதிபர் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.
தற்போது அமுலிலுள்ள இரண்டு வார கால போர்நிறுத்தம் ஏப்ரல் 22 ஆம் தேதியுடன் முடிவடைகின்றது.சனிக்கிழமையன்று ஈரானியப் படைகளால் கப்பல்கள் தாக்கப்பட்டதாகப் பல தகவல்கள் கிடைத்துள்ளன:
ஹோர்முஸ் நீரிணையில் ஒரு எண்ணெய் தாங்கிக் கப்பல் மீது இரண்டு ஈரானிய ஆயுதப் படகுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பிரித்தானிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு (UKMTO) தெரிவித்துள்ளது.
ஓமானின் வடகிழக்குக் கரையில் கொள்கலன் கப்பல் (Container Ship) ஒன்று "இனந்தெரியாத ஏவுகணை" மூலம் தாக்கப்பட்டதில் சேதமடைந்துள்ளது.
இரண்டு இந்தியக் கொடியுடனான கப்பல்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இந்தியா தனது கடும் கவலையை வெளியிட்டுள்ளதுடன், இது தொடர்பாக ஈரான் தூதுவருக்கு அழைப்பு விடுத்துள்ளது.
உலகின் சுமார் 20% எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) இந்த குறுகிய நீரிணை ஊடாகவே கொண்டு செல்லப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து ஆரம்பமான இந்த மோதலால், மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
வாஷிங்டன் மற்றும் டெஹ்ரான் இடையே பாகிஸ்தானில் வைத்து அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் சூழலில், இந்த புதிய மோதல்கள் அமைதி நடவடிக்கைகளுக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளன.