ஈரான் கொடியுடன் கூடிய கப்பல் அமெரிக்க கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

ஈரான் கொடியுடன் கூடிய கப்பல் அமெரிக்க கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

ஈரான் நாட்டுக்கொடியுடன் பயணித்த சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்க கடற்படையினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இது குறித்து தனது 'Truth Social' சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், குறித்த கப்பலை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அதற்குப் பதிலளிக்கத் தவறியதால் அமெரிக்க கடற்படையினர் அதனைப் பிடித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 900 அடி நீளம் கொண்ட 'TOUSKA' என்ற பெயர் கொண்ட இந்த ஈரானிய சரக்குக் கப்பல், அமெரிக்காவின் கடல்சார் முற்றுகையை மீறிச் செல்ல முயன்றதால் கைப்பற்றப்பட்டதாக ட்ரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், எச்சரிக்கையை மீறிச் சென்ற அந்த கப்பலின் இயந்திர அறை (Engine Room) மீது தாக்குதல் நடத்தி, அதனை செயலிழக்கச் செய்து நிறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் கண்டனம்: ஈரானிய துறைமுகத்தை நோக்கிப் பயணித்த இக்கப்பல் கைப்பற்றப்பட்டமை குறித்து ஈரான் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ஈரான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்சம்பவம் போர்நிறுத்த உடன்படிக்கையை மீறும் செயல் என்றும், இது ஒரு "ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளை" (Armed Piracy) நடவடிக்கை என்றும் சாடியுள்ளது.

ஈரானிய அரச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஈரானின் உயர்மட்ட இராணுவத் தலைமையகமான 'கடம் அல்-அன்பியா' (Khatam al-Anbiya) அமைப்பின் பேச்சாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்:

"அமெரிக்கா போர்நிறுத்தத்தை மீறி ஓமான் கடற்பரப்பில் ஈரானிய வணிகக் கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அதன் வழிசெலுத்தல் அமைப்பைச் செயலிழக்கச் செய்துள்ளது."

அமெரிக்க கடற்படையின் இந்த ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளை நடவடிக்கைக்கு, ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஆயுதப் படைகள் மிக விரைவில் தகுந்த பதிலடி கொடுக்கும் என ஈரான் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.