சொத்து மதிப்பீட்டைப் பிழையாகச் சித்திரித்து, தனக்கு அவமானம் ஏற்படுத்தியுள்ளதாக, இலங்கையின் புகழ்பெற்ற ஹிரு ஊடக நிறுவனம் மீது, அமைச்சர் லால் காந்த, ரூபாய் 10 பில்லியன் மானநட்டஈடு கோரியுள்ளார்.
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் நடைமுறைகளுக்கமைய, பொதுமக்கள் பார்வையிடும் வகையில் தான் மற்றும் தனது மனைவி, பிள்ளைகளிடம் உள்ள சொத்துகள் பொறுப்புகள் தொடர்பில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்ட குறித்த விவரங்களைப் பிழையாகச் சித்திரித்ததன் மூலம் தனக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து, தனது சட்டத்தரணிகள் ஊடாக அமைச்சர் லால் காந்த இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அத்துடன், தமது மகள் கொள்வனவு செய்துள்ள பங்குச் சந்தையின் ஒரு சில நிறுவனங்களின் பங்குகளின் பெறுமதியைத் திரிவுபடுத்திப் பாரிய நிதிக் குளறுபடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் லால் காந்த, கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
ஊழலற்ற அரசாங்கத்தை நடத்திக் காட்டுவோம் என்று மக்களை ஏமாற்றி ஆட்சிபீடமேறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தில்லுமுள்ளுகளைச் சமாளிப்பதற்குத் தற்போதைய அரசாங்கம் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறது என்பதையே இத்தகைய சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
எளிய வாழ்க்கை வாழ்கின்ற சாதாரண குடிமக்கள்தான் தங்களுடைய கட்சிப் பிரதிநிதிகள் என்று பீற்றிக்கொண்ட ஜேவிபி கட்சியாளர்கள், தற்போது கோடீஸ்வர வாழ்க்கை வாழ்வதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டுமென அவர்கள் நினைக்கிறார்கள்போலும். வாக்களித்த மக்களுக்குக் கேள்வி கேட்கும் உரிமையும் இருக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிட்டார்கள்.
இத்தகைய சுத்துமாத்துகளை வெளிக்கொணரும் ஊடகங்களையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கேள்விக்குட்படுத்தி, ஊடகத்தையும் ஊடகவியலாளர்களையும் அவமதிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஜனநாயகத்தின் மிகமுக்கிய தூண்களின் ஒன்றான ஊடகத்தை இவ்வாறு கீழ்த்தரமாக நடத்துவது தற்போதைய அரசாங்கத்தின் அராஜகமாகவே பார்க்கப்பட வேண்டும். ஏனெனில், இதே ஊடகங்களின் சுதந்திரத்தைப் பயன்படுத்தித்தான் தாங்கள் ஆட்சிக்கு வந்தனர் என்பதைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
அமைச்சர் லால் காந்த என்பவர் எப்போதுமே யோக்கியனாக இருந்ததில்லை. தேர்தல் கால பிரசாரங்களின்போது தான் வருமானமில்லாமல் வாழ்வதுபோலவும் தன் மனைவியின் வருமானத்தில்தான் தன் பிள்ளைகளைப் படிக்க வைப்பதாகவும், மக்கள் தனக்கு நன்கொடையாகக் கொடுக்கின்ற உணவுகளை வைத்துத்தான் வாழ்வதுபோலவும் தெரிவித்து மக்கள் மத்தியில் அனுதாபத்தைத் தேடிக்கொண்ட கீழ்த்தரப் புத்தியுள்ளவர்தான் தற்போதைய அமைச்சர் லால் காந்த.
மக்களை ஏமாற்றி ஆட்சிபீடமேறிவிட்டு, பல கோடி ரூபாய் பெறுமதியான பெரிய மாளிகையொன்றைச் சொந்தமாகக் கொழும்பில் கட்டியிருக்கிறார் லால் காந்த. இத்தகைய சொத்துக் குவிப்பைக் கேள்விக்குட்படுத்தி, ஆதாரங்களை வெளிக்கொணர்ந்ததற்காகத்தான் ஹிரு ஊடகம் மீது தன்னுடைய அடக்குமுறையைக் கையாண்டிருக்கிறார் அவர்.
வருமானத்துக்கே வழியில்லை என்று அனுதாப வாக்குகளைப் பெற்றுக்கொண்ட மக்கள் பிரதிநிதியை ஊடகங்கள் கேள்வி கேட்பதில் என்ன தவறிருக்கிறது? மக்கள் பிரதிநிதிகள் என்பவர்கள் பொறுப்புக்கூற வேண்டியவர்கள்தான். அத்தகைய பொறுப்புக்கூறலிலிருந்து எவரும் எளிதில் தப்பிவிடமுடியாது.
இத்தகைய சொத்துக் குவிப்புகள் பற்றிக் கேள்வியெழுப்பிய ஊடகங்களில் அண்மைக்காலமாகவே மிக எகத்தாளமாகப் பேசிவருகிறார் லால் காந்த. தன் தந்தையின் மரணத்தின் பின்னர் அவரின் சொத்துகள் தனக்குக் கிடைத்ததாகவும், அதனை விற்றுத்தான் கொழும்பில் வீடு கட்டியதாகவும் புதுக்கதை விடுகிறார் அவர்.
ஆனால், தேர்தல் வாக்குப் பிச்சையெடுத்த காலத்தில், தன் குடும்பத்தார் மிகவும் கஷ்டமான வாழ்கை வாழ்வதாகவும் ஆசிரியத் தொழிலில் தந்தைக்குக் கிடைக்கும் சொற்ப வருமானத்திலேயே அவர்கள் வாழ்வதாகவும் சொல்லி மக்களை ஏமாற்றிய கேடுகெட்டவர்தான் லால் காந்த. ஆனால், நடந்த கதையென்ன?
ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களுக்குள் பல கோடி ரூபாய் பெறுமதியாக பங்களா, பிள்ளைகளின் பெயரில் பங்குச் சந்தை வியாபாரம் எனப் பல கோடிகளைச் சுருட்டிக்கொண்டு இராஜபோக வாழ்க்கை வாழ்கின்றனர்.
ஜேவிபி இனரைப் பொறுத்தவரையில் இன்னமும் 80களில் வாழ்வதாகவே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்துவிட்டதென்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள் போலும். முன்னர் பேசியதை இல்லை என மறுதலித்த மறுகணத்திலேயே ஆதாரத்துடன் வீடியோக்களை ஊடகங்கள் வெளியிட்டுவிடுகின்றன.
இதனை ஏற்றுக்கொள்ள முடியாத தற்குறிகள்தான், சுதந்திரமாக இயங்கும் ஊடகங்கள் மீது தம் அடக்குமுறைகளைப் பிரயோகிக்கப் பார்க்கின்றன. இலங்கையின் நீதித்துறையே சவாலுக்குள்ளாகியிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் ஊடகங்களை சட்டத்தின் முன் நிறுத்த முனைவதென்பது பாரியதோர் ஊடக அடக்குமுறையாகவே பார்க்கவேண்டியிருக்கிறது.
தாங்கள்தான் ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள், தங்களால்தான் இந்நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்படுகிறதென மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தியின் சீத்துவத்தை மக்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளார்கள்.
ஆகையால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஊடக அடக்குமுறையைத் திணிப்பதென்பது ஜனநாயக விரோதம் தான் என்பதைத் தற்போதைய ஆட்சியாளர்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். தற்போதைய நவீன யுகத்தில், தொழில்நுட்ப வளர்ச்சியுடன் முன்னேறிவரும் ஊடகங்களை பழைய இரும்புக்கரம் கொண்டு நசுக்கிவிடலாம் எனப் பகல்கனவு காண்பதைத் தற்போதைய ஆட்சியாளர்கள் நிறுத்திக் கொள்வதுடன், மக்களுக்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்கள் தாங்கள் என்பதையும் ஆட்சியாளர்கள் உணர்ந்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகிறது.