உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (ஏப்ரல் 21) 7 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இதனையொட்டி, தீவின் அனைத்து தேவாலயங்களிலும் இன்று விசேட மத வழிபாடுகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று காலை அனைத்து தேவாலயங்களிலும் இந்த நினைவேந்தல்கள் நடைபெறும் என தேசிய கத்தோலிக்க வெகுசனத் தொடர்பு பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி, அனைத்து தேவாலயங்களிலும் இன்று காலை மரண மணி ஒலி எழுப்புதல், 2 நிமிட மௌன அஞ்சலி, மெழுகுவர்த்தி அல்லது தேங்காய் எண்ணெய் விளக்கேற்றுதல் மற்றும் விசேட பிரார்த்தனை வழிபாடுகள் என்பன இடம்பெறவுள்ளன.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட திருப்பலி நடைபெறவுள்ளது.
இதன் காரணமாக தேவாலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 7.00 மணி முதல் திருப்பலி நிறைவடையும் வரை தேவாலயத்தை சூழவுள்ள வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்.
கட்டுவாப்பிட்டி தேவாலயத்திலும் விசேட திருப்பலி நடைபெறவுள்ளது. அத்துடன், நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா மைதானத்திலிருந்து இன்று மாலை 4.00 மணிக்கு ஆயர்கள் மற்றும் மதகுருமார்கள் உள்ளிட்ட பொதுமக்களின் பங்கேற்புடன் 'பிரார்த்தனை நடைபயணம்' ஆரம்பமாகி, கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியான் தேவாலய முன்றலில் நிறைவடையத் திட்டமிடப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியான் தேவாலயம், கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம், தெஹிவளையில் உள்ள ஒரு விடுதி மற்றும் கொழும்பின் கிங்ஸ்பரி, ஷங்ரிலா, சினமன் கிராண்ட் ஹோட்டல்கள் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 268 பேர் உயிரிழந்ததுடன், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 7 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், 'திசைக்காட்டி' (NPP) அரசாங்கத்தின் கீழ் இது தொடர்பான விசாரணைகள் புதிய திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.
ஈஸ்டர் தாக்குதல்தாரிகளை மன்னிப்பது குறித்து வத்திக்கான் தூதுவர் வலியுறுத்தல்!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை நடத்தியவர்களை மன்னிப்பதன் அவசியம் குறித்து இலங்கைக்கான வத்திக்கான் தூதுவர் (Apostolic Nuncio) மேதகு அன்ட்ரெஸ் ஜோஸ்வோலெஸ் (Monsignor Andrez Jozwowlez) இன்று வலியுறுத்தினார். எனினும், தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மை கண்டறியப்பட்ட பின்னரே அத்தகைய மன்னிப்பு வழங்கப்பட முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் ஏழாவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
"இந்த நினைவேந்தலானது பழிவாங்கும் உணர்வோடு அமையக்கூடாது. மாறாக, தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனேயே இது அமைய வேண்டும்" என அவர் குறிப்பிட்டார்.