தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம்

இலங்கை தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம் என்ன? அண்மைய நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து எழுகின்ற இந்தக் கேள்வியை வெறுமனே தமிழ்க் கட்சிகளின் எதிர்கால தேர்தல் வாய்ப்புக்களுடன் இணைத்து நோக்கக்கூடாது. இது தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகள் நிறைவேறக்கூடிய வாய்ப்புக்கள் பற்றிய எதிர்பார்ப்புகளுடனும் ஏக்கங்களுடனும் சம்பந்தப்பட்ட கேள்வியாகும்.

உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான கடந்த பதினைந்து வருடங்களுக்கும் அதிகமான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்துவந்த தமிழ் தேசியவாத அரசியல் கட்சிகள் இந்தத் தடவை நாடாளுமன்ற தேர்தலில் பெரிய தோல்வியைச் சந்தித்தன. தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான கடந்த காலப் போராட்டங்கள் பயன்தராமல் போனதற்கான  காரணங்கள் குறித்து சுயபரிசோதனையைச் செய்துபார்ப்பதில் ஒருபோதும் மானசீகமான அக்கறைகாட்டாத  இந்தக் கட்சிகள் இந்த வரலாற்று தோல்விக்குப் பிறகாவது தங்களது இதுவரையான அரசியல் பாதையை திரும்பிப்பார்த்து திருந்திக்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது கூட கஷ்டமானதாகவே தெரிகிறது.

தமிழ் தேசியவாதக் கட்சிகள் பிளவுபட்டு பல்வேறு பிரிவுகளாக தேர்தலில் போட்டியிட்டதன் விளைவாக வடக்கு, கிழக்கு தமிழர்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இந்தத் தடவை முன்னரை விடவும் மோசமாக பலவீனப்பட்டிருக்கிறது. முன்கூட்டியே விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை தமிழ் அரசியல்வாதிகள் பொருட்படுத்தவில்லை.

கடந்த நாடாளுமன்றத்தில் ஆறு ஆசனங்களை கொண்டிருந்த இலங்கை தமிழரசு கட்சி இந்தத் தடவை எட்டு ஆசனங்களைப் பெற்றதை அதன் மக்கள் செல்வாக்கில் ஏற்பட்ட ஒரு அதிகரிப்பாக நினைத்து திருப்திப்பட முடியாது. இலங்கையின் தேர்தல் வரலாற்றில்  சிங்களவர்களின் ஆதிக்கத்திலான தேசியக் கட்சி ஒன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் முதற் தடவையாகக் கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றியிருப்பதன் பின்னணியிலேயே தமிழரசு கட்சி அதன் தேர்தல் செயற்பாட்டை நோக்க வேண்டும்.

தேசிய இனப்பிரச்சினை  உட்பட தமிழ் மக்களை அழுத்தும் முக்கியமான பிரச்சினைகளுக்கு உருப்படியான தீர்வு குறித்து எந்த வாக்குறுதியையும் வழங்காமலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தமிழ்ப் பகுதிகளில் பெருவெற்றி பெற்றிருக்கிறது.

இந்த வெற்றி குறித்து யானை பார்த்த குருடர்களைப் போன்று அரசியல்வாதிகளும் அவதானிகளும்  பலவிதமான கருத்துக்களை கூறுகிறார்கள். தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் தங்களுக்கு தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவை தமிழ் இனவாத அரசியலின் நிராகரிப்பாக வியாக்கியானம் செய்கிறார்கள். தென்னிலங்கையில் சிங்கள பௌத்த கடும்போக்கு தேசியவாதிகள் என்று அடையாளம் காணப்பட்ட  அரசியல்வாதிகள் இந்தத் தடவை தேர்தலில் கண்ட தோல்வியை சிங்கள இனவாதத்தின் தோல்வியாக காண்பிக்கவும் அவர்கள் முயற்சிக்கிறார்கள்.

அதேவேளை, சில தமிழ் அரசியல்வாதிகள் வடக்கு, கிழக்கில் தமிழ்க்கட்சிகள் எல்லாவற்றுக்கும் கிடைத்த வாக்குகளை கூட்டிப்பார்த்து அதை தேசிய மக்கள் சக்தி பெற்ற வாக்குகளுடன் ஒப்பிட்டு தமிழ்த் தேசியவாதத்தை தமிழ் மக்கள் நிராகரிக்கவில்லை என்று ஒரு வாதத்தை முன்வைக்கிறார்கள். தேர்தல் என்று வரும்போது கிடைக்கின்ற ஆசனங்களே முக்கியமானவை. தேர்தலில் தோல்வியைச் சந்தித்த கட்சிகளின் வாக்குகளின்  மொத்த தொகையையும் சேர்த்து சான்றாகக்காட்டி தமிழ்த் தேசியவாத உணர்வு மக்கள் மத்தியில் துடிப்புடன் இருக்கிறது என்று நிறுவ முற்படுவதில் அர்த்தமில்லை.

தென்னிலங்கையில் குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளின் தேர்தல் தோல்வியை எவ்வாறு சிங்கள பௌத்த தேசியவாதத்தின் தோல்வி என்று கூறமுடியாதோ அதேபோன்றே வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியவாத கட்சிகளுக்கு கிடைத்த தோல்வியையும் தமிழ்த் தேசியவாதத்தின் தோல்வி என்று கூறமுடியாது.

இலங்கையில் இனவாத அரசியலும் மதத் தீவிரவாதமும் மீண்டும் தலையெடுக்க ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று புதிய நாடாளுமன்றத்தில் தனது கொள்கை விளக்கவுரையில் சூளுரைத்திருக்கும் ஜனாதிபதி திசாநாயக்க அதே இனவாதமும் மதவாதமும் தோற்றுவித்த நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காணாமல் ஒருபோதும் அந்த இலட்சியத்தை அவரால் அடைய முடியாது.

தேசிய இனப்பிரச்சினையைப் பொறுத்தவரை தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடுகளை ஏற்றுக்கொண்டுதான் தமிழ் மக்கள் அவர்களுக்கு பெருமளவில் வாக்களித்தார்கள் என்று ஒருபோதும் கூறமுடியாது. அதேபோன்றே தமிழ்க்கட்சிகள் கண்ட தோல்வியை தமிழ் மக்கள் தங்களது நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகள் தொடர்பிலான நீண்டகால அடிப்படைக் கோரிக்கைகளை அலட்சியம் செய்துவிட்டு தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைவதற்கு அவர்கள் தயாராகி விட்டதன் அறிகுறியாகவும் வியாக்கியானம் செய்யமுடியாது.

வடக்கே பருத்தித்துறை தொடக்கம் தெற்கே தேவேந்திரமுனை வரை தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களித்திருக்கும் முறையை நோக்கும் போது சிங்கள மக்களைப் போன்றே தமிழ் மக்களும்  பாரம்பரியமான அரசியல் கட்சிகளை நிராகரிப்பற்கு சந்தர்ப்பம் ஒன்றுக்காக காத்திருந்தார்கள் என்பதை புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.

தங்களை இதுகாலவரை பிரதிநிதித்துவப்படுத்திவந்த தமிழ் தேசியவாத கட்சிகளின் செயற்பாடுகள் மீதான வெறுப்பின் காரணமாகவே தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகு தங்களது உரிமைப் போராட்டத்தை சமகால உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்களுக்குப் பொருத்தமான முறையில் நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறைகளுடன் அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியாமல் இருந்த தமிழ்க் கட்சிகளுக்கு மாற்றாக உருப்படியான அரசியல் இயக்கம் ஒன்று தங்கள் மத்தியில் இல்லாத நிலையில் தமிழ் மக்களுக்கு வேறு வழி இருக்கவில்லை.

அதேவேளை, நிலைவரங்கள் வேண்டி நிற்பதற்கு ஏற்ற முறையில் சிந்தித்துச் செயற்படாமல் வெறுமனே  உணர்ச்சியமான தமிழ்த் தேசியவாதச் சுலோகங்களை வாய்ப்பாடு போன்று உச்சரித்துக்கொண்டும் அவ்வப்போது நினைவேந்தல்களை செய்துகொண்டும் திரியும் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் பல்வேறுபட்ட வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தாமல் இருந்ததும் அவர்கள் மீதான வெறுப்புக்கு இன்னொரு காரணம்.

இரண்டரை வருடங்களுக்கு முன்னர் முன்னென்றும் இல்லாத வகையிலான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தென்னிலங்கையில் மக்கள் கிளர்ச்சி மூண்டபோது தமிழ் மக்களுக்கு அது ஒரு பிரச்சினை அல்ல என்று கூறிய தமிழ் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள தனவந்தர்களை இலங்கையில் சுதந்திரமாக முதலீடு செய்ய அனுமதித்தால் பொருளாதார பிரச்சினைக்கு இடமிருக்காது என்று நாடாளுமன்றத்தில் அரசியல்வாதிகள் பேசியதையும் காணக்கூடியதாக இருந்தது.

தாங்கள் இதுவரை காலமும் பிரதிநிதித்துவம் செய்த மக்கள் மத்தியில் அண்மைக்காலமாக ஏற்பட்டுவந்த சிந்தனை மாற்றத்தை தமிழ் அரசியல்வாதிகளினால் புரிந்துகொள்ள முடியவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் தாங்கள் தேசிய மக்கள் சக்திக்கே வாக்களிக்கப் போவதாக தமிழ் அரசியல்வாதிகளிடம் நேரடியாகவே  வடக்கில் பல இடங்களில்  மக்கள்  கூறினார்கள். ஆனால், வழமை போன்று தமிழ்க் கட்சிகளுக்கே அவர்கள் பெருமளவில் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில் அரசியல்வாதிகள் மெத்தனமாக இருந்து விட்டார்கள்.

ஆரம்பக்கட்டப் பிரசாரங்களில் தமிழ்க்கட்சிகள் தங்களுக்கு நேரவிருக்கின்ற ஆபத்தை புரிந்துகொள்ளவில்லை. இறுதிக்கட்டங்களிலேயே அவை நிலைவரத்தை உணர்ந்து தேசிய மக்கள் சக்தி மீது கடுமையான தாக்குதல்களை தொடுத்தன. அதற்கு முதல் யாழ்ப்பாணத்தில் மற்றைய கட்சிகள் மாத்திரமல்ல இலங்கை தமிழரசு கட்சிக்குள் இருந்தவர்களும் “தமிழ்த் தேசியவாதத்தைக் காப்பாற்றுவதற்காக” முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை தோற்கடிப்பதிலேயே தீவிர அக்கறை காட்டினார்கள்.

தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) கடந்த காலத்தில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிராக கடைப்பிடித்த கொள்கைகளையும் முன்னெடுத்த  செயற்பாடுகளையும் தமிழ் அரசியல்வாதிகள் பிரசாரங்களின்போது திரும்பத்திரும்ப சுட்டிக்காட்டிய போதிலும் கூட, மக்களை தங்கள் பக்கம் பெருமளவில் அவர்களால் திருப்பமுடியாமற் போய்விட்டது.

தாங்கள் பல்வேறு அணிகளாகப் பிரிந்து நின்று தேர்தலில் போட்டியிட்டதன் காரணத்தினால் மாத்திரமே தமிழ் மக்கள் தங்கள் மீது ஆத்திரமடைந்து தேசிய மக்கள் சக்தியை ஆதரித்தார்கள் என்று தமிழ் அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள் போன்று தெரிகிறது. கடந்த சில நாட்களாக அவர்கள் வெளியிட்டு வரும் கருத்துக்களை நோக்கும்போது மீண்டும் ஐக்கியப்பட்டு செயற்பட முன்வந்தால் மக்கள் முன்னரைப் போன்று தங்களுக்கு அமோக ஆதரவைத் தருவார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள் போலும்.

பத்து வருடங்களுக்கு முன்னர் தமிழ்ச் சிவில் சமூக அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் சேர்ந்து அமைத்த தமிழ் மக்கள் பேரவை முன்வைத்த அரசியல் தீர்வு யோசனைகளின் அடிப்படையில் மற்றைய தமிழ்க்கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தார். ஆனால், தமிழ்க் கட்சிகளிடமிருந்தது இதுவரையில் பதில் வரவில்லை.

அதேபோன்றே, தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவரான சிவஞானம் சிறீதரனும் மீண்டும்  ஐக்கியப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுவதற்குத் தயாராக இருப்பதாக அறிவித்தார். அதற்கும் பதில் வரவில்லை. வேறு அரசியல்வாதிகளும் மீண்டும் ஐக்கியப்பட வேண்டியதன் அவசியம் குறித்து பேசியிருக்கிறார்கள்.

உள்நாட்டுப்போரின் முடிவுக்குப் பின்னரான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பலம்பொருந்திய அரசியல் இயக்கமாக தமிழ் தேசிய கூட்டமைப்பை கட்டியெழுப்புவதற்கு இருந்த வாய்ப்பைத்  தவறவிட்டதன் மூலம் தமிழ் அரசியல் சமுதாயத்தின் இன்றைய சீரழிவுக்குப் பொறுப்பான அதே தலைவர்கள் மீண்டும் ஒன்றுபடுவதற்கு முன்வந்தால் கூட தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புவது சாத்தியமாகுமோ தெரியவில்லை.

தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய எந்த முயற்சியையும் தமிழ் மக்கள் நிச்சயமாக சந்தேகத்துடனேயே நோக்குவார்கள். மீண்டும் ஐக்கியத்தில் நாட்டம் காட்டுவதற்கு மக்கள் மத்தியில் எத்தகைய விளக்கத்தை தமிழ் அரசியல்வாதிகள் முன்வைக்கப் போகிறார்கள்? தமிழ்க்கட்சிகள் மத்தியில் ஏற்பட்ட பிளவுகளுக்கு கொள்கை வேறுபாடுகளை விடவும் தேர்தலில் போட்டியிடுவதற்கான வியூகங்களே பிரதான காரணமாக இருந்தன.

இதுவரை கால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது தமிழ் அரசியல் கட்சிகளிடையே ஐக்கியத்தை அல்லது ஒருமித்த அணுகுமுறையை எதிர்பார்ப்பதை போன்ற வீணான செயல் வேறு எதுவும் இருக்கப் போவதில்லை. கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் காலங்காலமாக  தலைவர்களுக்கு இடையிலான தன்னகம்பாவமும் ஆளுமைப் போட்டியும் தமிழர் அரசியலின் பின்னடைவுக்கு முக்கியமான காரணிகளாக இருந்து வந்திருக்கின்றன. மிதவாத அரசியல் தலைவர்களை விடவும் ஆயுதமேந்திய தமிழ்த் தீவிரவாத இயக்கங்களின் தலைவர்கள் இது விடயத்தில் பல படிகள் மேலே சகோதரப் படுகொலைகளை சர்வ சாதாரணமாகச் செய்தார்கள். அத்தகைய விபரீதமான போக்கு இப்போதும் வெவ்வேறு வடிவங்களில் தொடருகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, இன்றைய தமிழ் அரசியல்வாதிகள் கடந்த பதினைந்து வருடகாலமாக தாங்கள் கடைப்பிடித்துவந்த கொள்கைகளும் அணுகுமுறைகளும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதை நோக்கிய திசையில் ஒரு அங்குலமேனும் முன்னோக்கிய நகர்வுக்கு உதவியிருக்கிறதா என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

அரசியல் தீர்வைத் தரவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்ற போதிலும், இலங்கையில் தொடர்ந்தும் வாழ்ந்தால் தங்களுக்கு ஒரு எதிர்காலம் இருக்கும் என்று தமிழ் மக்களுக்கு கொஞ்சமேனும் நம்பிக்கை ஏற்படக்கூடியதாக தங்களது இதுவரையான செயற்பாடுகள் அமைந்திருந்தனவா என்பதையும் தமிழ் அரசியல்வாதிகள் ஆழமாகச்  சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தமிழ்த் தேசியவாதம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் நிலப்பிராந்தியம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு அந்த நிலப்பிராந்தியத்தில் மக்கள் வாழவேண்டும். மக்களும் நிலமும் இல்லாமல் எந்த தேசியவாதத்தையும் பாதுகாக்க முடியாது.

வடக்கு, கிழக்கில் தொடர்ந்து வாழ்ந்தால் தங்களுக்கும் தங்களது எதிர்காலச் சந்ததிகளுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கும் என்ற நம்பிக்கை இல்லாவிட்டால் வடக்கு, கிழக்கில் தமிழர்களில் கணிசமான பிரிவினர் அங்கே தொடர்ந்து வாழ விரும்பப்போவதில்லை. அரசியல்வாதிகள் வீடுவீடாகச் சென்று ஒரு ஆய்வைச் செய்து பார்த்தால் எத்தனை தமிழர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதில் நாட்டம் காட்டுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். மக்கள் இல்லாத மண்ணில் தேசியவாதத்தைக் காப்பாற்றுவதற்கு என்ன இருக்கிறது?

தற்போது நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருக்கும் தமிழ்ப் பிரதிநிதிகள் தேர்தலில் மக்கள் புகட்டிய பாடத்துக்குப் பின்னராவது தங்களது முன்னைய போக்குகளை மாற்றிக்கொண்டு ஒன்றுபட்டுச் செயற்படுவார்களா என்பது முக்கியமான ஒரு கேள்வி.

தேர்தலுக்குப் பிறகு கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரை தனித்தனியாகச் சந்தித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழுவும் இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியா இலங்கையின் புதிய அரசாங்கத்தின் மீது நெருக்குதல்களைக் கொடுக்கவேண்டிய அவசியம் பற்றியே வலியுறுத்தியதாக தெரியவருகிறது.

இந்தியா உட்பட சர்வதேச வல்லாதிக்க நாடுகள் இலங்கை மீது நெருக்குதல்களைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு இதுவரை கடைப்பிடித்த அணுகுமுறைகள் எந்தளவுக்கு பயனளித்திருக்கின்றன என்பதையும் தமிழ்க் கட்சிகள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். முன்னைய அரசாங்கங்களுடன் கடைப்பிடித்த அதே அணுகுமுறைகளை விடுத்து வேறுவிதமாக புதிய அரசாங்கத்தைக் கையாளுவதற்கான சாத்தியங்கள் குறித்தும் ஆராயவேண்டும்.

இந்தியாவின் மீதும் மேற்குலக வல்லாதிக்க நாடுகள் மீதும் தொடர்ந்தும் நம்பிக்கை வைப்பதன் மூலம் எதையாவது சாதிக்க முடியுமா என்பது குறித்து இனிமேலும் தமிழர்கள் சிந்திக்காமல் இருக்கமுடியாது. தமிழர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைக்கமுடியாமல் வெளியுலகத்தையே உதவிக்கு பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய அளவுக்கு அவர்களின் அரசியல் சமுதாயம் படுமோசமாக சிதறுப்பட்டு  பலவீனமடைந்திருக்கிறது.

தங்கள் மீது நம்பிக்கை வைத்து பலம்பொருந்திய ஜனநாயக ரீதியான அரசியல் இயக்கம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டியது அவசியம். நிலையான அரசியல் தீர்வொன்றுக்காக ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து பாடுபடுவதே தமிழர்களுக்கு இருக்கக்கூடிய ஒரே மார்க்கம். அதையும் படிப்படியாகவே செய்யவேண்டும்.

அதை விடுத்து வேறு எந்த அணுகுமுறையுமே 1980களில் இருந்து இதுவரையில் பெறப்பட்ட அனுபவங்களைப் போன்று வீணாக காலத்தையும் சக்தியையும் விரயம் செய்வதாகவே அமையும்.

எந்தவொரு வெளிநாடுமே அதன் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நலன்களுக்கு வாய்ப்பாக அமையும் பட்சத்திலேயே எமக்கு உதவுவதில் நாட்டம் காட்டும். மக்களின் நலன்களின் அடிப்படையில் அவை உதவ முன்வருவதில்லை. இலங்கையிலும் பங்களாதேஷிலும் இந்தியாவின் தலையீடு இந்தியாவின் நலன்களை நோக்கமாகக் கொண்டதே தவிர இலங்கை தமிழர்களினதோ அல்லது வங்காளிகளினதோ நலன்களை உண்மையில் மனதிற் கொண்டவையல்ல.

ஆனால், இந்தியா அதன் நலன்களுக்காக இலங்கை இனநெருக்கடியில் படைகளுடன் வந்து தலையீடு செய்த சந்தர்ப்பத்தையாவது சமயோசிதமாக பயன்படுத்தக்கூடிய விவேகம் தமிழர்களுக்காகப் போராடிய சக்திகளிடம் இருக்கவில்லையே. அந்த சந்தர்ப்பத்தை மிகவும் சூழ்ச்சித்தனமாகப் பயன்படுத்தி முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன தமிழர்களுக்கு எதிராக அல்லவா புதுடில்லியை திருப்பிவிடுவதில் வெற்றிகண்டார். இந்தியாவுக்கும் கொழும்புக்கும் இடையே முரண்பாட்டை ஏற்படுத்தி அதன் மூலம் அன்றைய சூழ்நிலையை தமிழர்களுக்கு அனுகூலமானதாக மாற்றுவதற்கு முடியாமற்போனதற்கான காரணங்களை இன்றுவரை தமிழ் அரசியல் சக்திகள் சுயபரிசோதனை செய்து உண்மையை ஒப்புக்கொண்டதில்லையே.

இந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டே தமிழர்கள் இனிமேல் இந்தியாவை நாடுவதில் உள்ள பயனுடைத்தன்மை பற்றி சிந்திக்கவேண்டும். இலங்கையுடனான இந்தியாவின் உறவுகளைப் பொறுத்தவரை இலங்கைத் தமிழர் பிரச்சினை புதுடில்லியின் முன்னுரிமைக்குரிய விவகாரமாக இனிமேலும் இல்லை. இருதரப்பு உறவுகளுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தமிழர் பிரச்சினைக்கு இந்தியா முக்கியத்துவம் கொடுப்பதை தாங்கள் விரும்பவில்லை என்பதை இலங்கை அரசாங்கங்கள் தெளிவாகவே வெளிக்காட்டி வந்திருக்கின்றன.

அதனால், மாகாண சபை தேர்தல்களை நடத்தி அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கையை இடைக்கிடை கேட்பதைத் தவிர இந்தியாவிடமிருந்து வேறு எந்த அணுகுமுறையையும் எதிர்பார்க்கமுடியாது. அதேவேளை, 13ஆவது திருத்தத்தையாவது காப்பாற்ற வேண்டும் என்பதில் தமிழ் அரசியல் கட்சிகள் மானசீகமான அக்கறையை காட்டுவதுமில்லை.

13ஆவது திருத்தத்தையே மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக முறையாக நடைமுறைப்படுத்தாமல் இருந்துவரும் இலங்கை அரசாங்கங்களிடம் சமஷ்டி ஆட்சிமுறையின் அடிப்படையிலான தீர்வை எவ்வாறு எதிர்பார்க்க முடியும் என்று தங்களிடம் இந்திய வெளியுறவு அமைச்சர் சுபாபிரமணியம் கூறியதை தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

கைவசம் இருக்கும் 13ஆவது திருத்தத்தில் தொடங்கி படிப்படியாக அதிகாரப்பரவலாக்கல் செயன்முறையை மேம்படுத்தி அதன் மூலமாக நீண்டகால அடிப்படையிலான அரசியல் தீர்வை நோக்கி பயணம் செய்வதே தமிழர்களுக்கு இன்று இருக்கக்கூடிய நடைமுறைச் சாத்தியமான ஒரே மார்க்கம். அதை வலியுறுத்துவதில் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து நாட்டம் காட்டினால் கணிசமானளவுக்கு வெளியுலகின் ஆதரவை பெறுவது சாத்தியமாகலாம்.

13ஆவது திருத்தத்துக்கு தென்னிலங்கையில் எதிர்ப்பு இருக்கிறது உண்மை. ஆனால், தமிழர் தரப்பும் அதில் நாட்டத்தைக் காட்டவில்லையானால் யாருக்காக அந்தத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்?

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியலமைப்பை கொண்டுவரப்போவதாக அறிவித்திருக்கும் நிலையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்க பெரும் பொறுப்பு காத்திருக்கிறது. நிலைவரங்கள் வேண்டிநிற்பதற்கு ஏற்றமுறையில் தொலைநோக்குடனும் அரசியல் விவேகத்துடனும் அவர்கள் செயற்படத் தவறினால் அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தையும் கைவிட்டு இறுதியில் எதையுமே பெறமுடியாத ஒரு மக்கள் கூட்டமாக தமிழ் மக்கள் விடப்படும் நிலையே உருவாகும்.

இறுதியாக, இலங்கை தமிழர்களின் அரசியலை தங்களது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றமுறையில் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்குடன் பணத்தை வீசியெறிந்த புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள சக்திகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தல் ஒரு பாடமாக அமைந்திருக்கிறது.

வீரகத்தி தனபாலசிங்கம்

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc