பாலநாதன் சதீசன்
தமிழர் அரசியலோடு சிந்திப்பவர்கள் பயங்கரவாதிகளாக, தேசத்துரோகிகளாக சிந்திப்பவர்கள் உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றிய பின்னர் சிங்கள ஆதிக்கத்தை தமிழர்களின் நிலங்களில் வீசிவிதைப்தற்கு இடமளிக்க முடியாது. அதற்கு அடையாளமாக எமது வாக்குகளை அளிக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையும் பொறுப்புமாகும்
என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று (04.05.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கு கிழக்கு தமிழ் தேச பற்றாளர்கள் எதிர்வரும் ஆறாம் திகதி நடைபெற உள்ள தேர்தலை வெறுமனே உள்ளூராட்சிமன்ற தேர்தலாக கருதி அசமந்த நிலையில் இருந்து விடாது தேசிய மக்கள் சக்திக்குள் இயங்கும் மக்கள் விடுதலை முன்னணி தமிழ் தேசிய அரசியலுக்கு எதிராக கொடுக்கும் பலம் வாய்ந்த அரசியல் போராக கருதி தமிழ் தேசிய அரசியலை காக்க தொடுக்கப்படும் வாக்கு சமராக சிந்திக்கத் தூண்டி மக்கள் வாக்களிக்க செல்ல துணை நிற்க வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்கவும், மஹிந்த ராஜபக்சவும் தமிழருக்கு எதிராக தொடுத்த பேரினவாத யுத்தத்தை தீவிரப்படுத்தி இனப்படுகொலைக்கு இட்டுச் சென்ற மக்கள் விடுதலை முன்னணி; வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாக பிரித்து துண்டாடியதோடு நின்று விடாது; ரணில்-மைத்திரி காலத்தில் வரையப்பட்ட அரசியல் தீர்வு முன் மொழிவிலும் தமிழர்களுக்கு எதிரான ஒற்றையாட்சி அரசியல் நிலைப்பாட்டையே எடுத்ததை நாம் அறிவோம்.
தையிட்டி திஸ்ச விகாரை விடயத்தில் உண்மை, நீதி தெரிந்திருந்தும்; பேரினவாதத்தின் அராஜகத்தை, அடக்கு முறையை, ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தாது நீதிக்காக போராடுபவர்களை இனவாதிகளாக சித்தரித்து அவர்கள் தமிழர்களுக்கு எதிரான அரசியல் சக்தியாக சித்தரித்து அழிக்க நினைப்பது பயங்கரவாதமே. அதே பயங்கரவாதம் உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றி தமிழர்களின் அரசியல் போராட்டத்தையும் தேசியத்தையும் முற்று முழுதாக தேர்தலோடு சிதைத்தழிக்க நினைக்கின்றது. இதற்கு எதிரான ஜனாநாயக ரீதியிலான போரிலே தேர்தல் தினத்தன்று எமது வெற்றியை உறுதிப்படுத்தல் வேண்டும்.
அதுமட்டுமல்ல காணி விடுவிப்பு,பாதை திறப்பு என கவர்ச்சி அரசியல் செய்யும் ஆட்சியாளர்கள் இறுதி யுத்தம் நிகழ்ந்ததும் வருடாந்தம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாடாத்தும் நிலம் உட்பட 5900 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை ஆக்கிரமித்து அரசுடைமையக்கி நினைவேந்தலை அரச கட்டுப்பாட்டுக்குள் நடத்தி அரசியல் நீக்க செய்ய நினைப்பதை தடுத்து நிறுத்தவும் தமிழ் தேசிய அரசியலுக்கே எமது வாக்குகள் என தெரிவிக்கவும் வாக்கு நிலையங்களுக்கு செல்வோம்.
ஆனையிறவு உப்பு விடயத்தில் பெயர் முக்கியமா? சுவை முக்கியமா?என கேட்கும் மக்கள் விடுதலை முன்னணி கருத்தியல் பாதுகாவலர்களின் ஒருவரான பிமல் ரத்னாயக்க அவர்களிடம் கேட்கின்றோம்; இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பம்பாய் வெங்காயம் , மைசூர் பருப்பு என்பவற்றை பெரிய வெங்காயம் மற்றும் சிவப்பு பருப்பு எனவும் பெயர் மாற்றி அரசியல் செய்தது ஏன் ?எனவும் கேட்கின்றோம்.தமிழர்களுக்கு தாய் நிலமும் அங்கு உற்பத்தியாகும் பொருட்களும் நிலத்தோடு ஒட்டிய பெயரும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவையே.
தமிழர்கள் தங்கள் நிலத்தில் விளையும் உற்பத்திகளுக்கு தமிழ் பெயர் வைக்குமாறு கேட்பது எந்த வகையில் பயங்கரவாதமாகும்? தமிழர் அரசியலோடு சிந்திப்பவர்கள் பயங்கரவாதிகளாக, தேசத்துரோகிகளாக சிந்திப்பவர்கள் உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றிய பின்னர் சிங்கள ஆதிக்கத்தை தமிழர்களின் நிலங்களில் வீசிவிதைப்தற்கு இடமளிக்க முடியாது. அதற்கு அடையாளமாக எமது வாக்குகளை அளிக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையும் பொறுப்புமாகும்.
கடந்த காலங்களில் எமக்கு எதிரான கொடிய யுத்தத்தை திட்டமிட்டு நடாத்தி இன அழிவையும் இனப்படுகொலையும் புரிந்த சரத் பொன்சேகாவுக்கும் மைத்திரி- ரணிலுக்கும் வாக்களிக்க தூண்டிய அரசியல் சக்திகளையும், தமிழ் தேச அரசியலைப் பேசி சிங்கள பௌத்த அரசியலுக்கும் அதன் காவலர்களுக்கும் காவடி தூக்கி அரசியல் லாபம் பெற்றவர்களையும் இத்தேர்தலில் அகற்ற வேண்டும். அதே வரிசையில் நின்று தமிழர்களின் அரசியலை பூண்டோடு அழித்து சர்வதேசத்தில் எமக்கு எதிரான மனநிலையை உருவாக்கத் துடிக்கும் தேசிய மக்கள் சக்தியையும் மண்ணிலிருந்து அகற்ற வேண்டும். அதுவே எமது அரசியலுக்கான பாதுகாப்பாக அமையும்.
பெரும் தேசிய வாதத்திற்கும் அதனையே கவசமாக கொண்ட தேசிய மக்கள் சக்திக்கும் எதிரானவர்கள் என மேடை அமைத்து வீர வசனம் பேசுபவர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலின் பின்னர் வாக்களித்த தமிழ் மக்களை ஏமாற்றாது விட்டுக் கொடுப்புக்களோடு உள்ளூட்சி மன்றங்களை கைப்பற்றி அரசியலையும் அபிவருத்தியையும் முன்னெடுக்க ஒன்றிணைய வேண்டும். அதுவே தெற்கிற்கும் சர்வதேசத்திற்கும் எமது சக்தியை வெளிப்படுத்தும்.